நில வரி கட்டாததால், அப்பா சிறையில் கிடந்தார். அவர் தன் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்தம் செய்ய வேண்டிய நாள் நெருங்கி விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருந்தாள் அம்மா. ஆனால், இவை எவற்றுக்கும் கலங்காத ஓர் உள்ளம் அந்த வீட்டில் இருந்தது. அது, பன்னிரெண்டே வயதான அவர்களது மகன்!
பையன் நேரே ஜில்லா ஜட்ஜ் வீட்டுக்குப் போனான். மறுநாள், தகப்பனார் செய்ய வேண்டிய சிரார்த்த விஷயத்தைப் பற்றி அவருக்கு விளக்கமாகச் சொல்லி, அவரை விடுதலை செய்யக் கோரினான். 'ஜாமின் இல்லாமல் எப்படி விடுதலை செய்வது...' என்று கேட்டார் ஜட்ஜ். 'அப்பாவுக்கு நான் ஜாமின் தருகிறேன்...' என்றான் பையன்.
இதைக் கேட்டதும், ஜில்லா ஜட்ஜின் மனம் கரைந்தது; விடுதலை உத்தரவைக் கொடுத்தார்.
அந்தச் சிறுவன் பெயர் - ரங்கநாத சாஸ்திரி.
அவர்தான், பிற்காலத்தில் சென்னை, 'ஸ்மால் காஸ்ட் கோர்ட் ஜட்ஜ்' பதவியை முதன் முதலில் வகித்த இந்தியர். சம்பவம் நடந்தது, 180 ஆண்டுகளுக்கு முன்!
இந்தியாவில் இன்னமும் தூக்குத் தண்டனை இருக்கிறது. ஆனால், உலகில் எழுபது நாடுகளில், தூக்குத் தண்டனை முறை ஒழிக்கப்பட்டு விட்டது. இன்னும், சில நாடுகளில் இந்தத் தண்டனை பெயரளவில் சட்டத்தில் இருக்கிறதே தவிர, மிக அபூர்வமாகத்தான் தூக்குத் தண்டனை வழங்கப் படுகிறது. கொலைக் குற்றம் ஒன்றிற்குத் தான் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.
கொலைக் குற்றம் புரிவோரில், 69 சதவீதம், 21லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், இந்த வயதில் தான், ஒரு மனிதனுக்கு உடல் திமிர், பால் உணர்வு, சம்பாதிக்கும் திறன், போட்டி மற்றும் பொறாமை உணர்வுகள் அதிகமாக இருக்கின்றன. பணம், பெண், பகை மற்றும் மானப் பிரச்னை இந்த நான்கில் ஒன்று தான் பெரும்பாலும் இக்குற்றங்களுக்கு காரணமாகிறது என்கின்றனர். ஆனால், தூக்குத் தண்டனை என்பது, 'கண்ணுக்குக் கண்' என்ற கற்கால மனிதனின் வளர்ச்சியடையாத மனோநிலையை காட்டுகிறது. ஆனால், கொலைகாரனுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தால் தான், மற்றவர்கள் கொலை செய்ய அஞ்சுவர், குற்றம் குறையும், என்றொரு வாதமும் உண்டு.
போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவீடன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, மேற்கு ஜெர்மனி, வெனிசுலா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் மற்றும் 60 சிறிய நாடுகளிலும், தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் சமீபத்தில் எடுத்த புள்ளி விவரப்படி, கொலை செய்தால் நிச்சயம் நம் உயிர் பறிபோகாது என்பதற்காக குற்றங்களின் எண்ணிக்கை கூடிவிடவில்லை.
இங்கிலாந்தில் டிமோத்தி என்பவன் தன் மனைவியைக் கொலை செய்து விட்டான் என்று தூக்கில் போட்டனர். அவன் நண்பன் ஜான் கிறிஸ்டியின் சாட்சியமே இந்த தண்டனைக்கு காரணம். ஆனால், பின் வேறொரு வழக்கில் ஜான் கிறிஸ்டி கைதானபோது, டிமோத்தியின் மனைவியை அவன் தான் கொன்றான் என்ற உண்மை தெரிய வந்தது. கிறிஸ்டி தூக்கிலிடப்பட்டான். ஆனால், குற்றம் செய்யாத டிமோத்தியின் உயிரும் பறிக்கப்பட்டு விட்டதே!
இருப்பினும், தூக்குத் தண்டனை இன்னமும் நம் நாட்டில் அமலில் இருக்கிறது.
'என் நினைவுகளில் பாவேந்தர்' நூலில் கோவேந்தன்:
ஒரு நாள், சென்னையில் பாவேந்தர் பாரதிதாசனுடன் பேசிக் கொண்டிருந்தேன். சிவந்த, கட்டையான ஒருவர் பாரதிதாசனைக் காண வந்தார். வந்தவர், தன்னுடைய பையைத் திறந்து, 'ஐயா... டி.கே.எஸ்., நாடகத்திற்கு ஒரு நாட்டியப் பாடல் எழுதியுள்ளேன்; பாருங்கள்...' என்றார். பாட்டை வாங்கி படிக்க ஆரம்பித்தார் பாவேந்தர். வந்தவர், இடையில் குறுக்கிட்டு, நாடகத்தில் அந்தப் பாடல் எங்கே வருகிறது என்பதற்கான சூழலை விளக்க அனுமதி கேட்டார்.
எரிச்சலான பாவேந்தர், 'நிறுத்து, பாட்டுக்கு விளக்கம் ஏன் சொல்றே? எனக்குத் தெரியாத மொழியில எழுதியிருக்கியா இல்ல பாட்டில் என்ன சொல்லியிருக்கேங்கிறது உனக்கே இப்பத்தான் புரியுதா...' என்று கூறி, 'ஒரு குழந்தையைத் தூக்கினா அது ஆணா, பெண்ணான்னு தூக்குகிறவங்களுக்குத் தெரியும். குழந்தையின் கண்ணும், சிரிப்பும் பெத்தவங்க குணத்தைக் காட்டிடும். நீ என்னடான்னா திருட்டுக் குழந்தையைத் தூக்கியாந்து, என் குழந்தைன்னு சொல்ற மாதிரி, விளக்க உரை சொல்லிக்கிட்டு இருக்குறே...' என்றதும், வந்தவர் வெலவெலத்துப் போய் விட்டார்.
நடுத்தெரு நாராயணன்