அன்புள்ள அம்மா,
என் வயது 30; என் மனைவி வயது 25. எங்களுக்கு திருமணமாகி, நான்கு ஆண்டுகளாகிறது. இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறக்கும் வரை, எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இப்போதெல்லாம் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. விளையாட்டாக பேசும் விஷயங் களை கூட, பெரிதாக எடுத்து, சண்டை போடுகிறாள். இதனால், நான் பேசுவதையே குறைத்து கொண்டேன். ஆனால், 'என்னிடம் பேசுவதே இல்லை...' என்று, அதற்கும் சண்டை போடுகிறாள்.
சில நேரங்களில், தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள். சண்டை போடும் சில நேரங்களில், தானாக ஏதோ பேசுகிறாள், நான் சென்று பேசினால், 'நீ யார்? என் வீட்டுக்காரர் வந்தால் அடி வாங்குவ, இங்கிருந்து போ...' என்கிறாள், குழந்தை கூட அடையாளம் தெரியவில்லை. பின், தூங்கி விடுகிறாள்; எழுந்த பின் அவள் பேசியது எதுவுமே, அவளுக்கு நினைவில் இருப்பது இல்லை. நானும், இப்படி பேசின, இப்படி செய்தாய் என்று, அவளிடம் கூறியது இல்லை. இது போன்ற நேரங்களில், தலைவலி உண்டாகிறது அவளுக்கு. மருத்துவமனையில், தலைவலிக்கென எல்லா டெஸ்ட்டும் எடுத்தாகி விட்டது, உடலில் எந்த பிரச்னையும் இல்லை என்கின்றனர். நான், காலை, 8:00 மணிக்கு வேலைக்கு சென்றால், இரவு 8:00 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். இதனால், வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்கு, கடன் பிரச்னை உள்ளது. அது, அவள் மனதை பாதித்திருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறேன்.
இரண்டு வாரம் அம்மா வீட்டிற்கு சென்று இருக்க போகிறேன் என்று கூறுவாள். ஆனால், இரண்டே நாளில் திரும்பி வந்து விடுகிறாள். ஏன் என்று கேட்டால், 'உன்னை விட்டு இருக்க முடியவில்லை...' என்கிறாள். சில நேரங்களில், அவள் செய்யும், பேசும் விஷயங்கள் என்னை மிகவும் வருத்தப்பட வைக்கிறது. இந்த நிலையில், வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறாள். வேண்டாம் என்று சொன்னால், அதற்கும் சண்டை போடுகிறாள். உடல் நிலை சரியில்லாத சமயத்தில், வேலைக்கு அனுப்ப பயமாக உள்ளது.
எத்தனை சண்டை போட்டாலும், அவள் என் மீது அதிக பாசம் வைத்திருக்கிறாள் என்று எனக்கு நன்றாக தெரிகிறது. அவளை எப்படி சரி செய்ய வேண்டும்; அவளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அவளுக்கு வேறு ஏதும் மருத்துவ உதவி தேவைப்படுகிறதா என்று, எனக்கு அறிவுரை கூறுங்கள். அவள் தற்கொலைக்கு முயற்சிப்பது மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்
அன்புள்ள மகனுக்கு,
குழந்தை பெற்றுக் கொள்வது, பெரும்பாலான திருமணமான பெண்களுக்கு பிடித்தமான விஷயம். ௯௦ சதவீத பெண்கள், தங்கள் முதல் குழந்தையாக ஆண் குழந்தையை பெறவே விரும்புகின்றனர். உன் மனைவிக்கு, பெண் குழந்தை பெற்றது பிடிக்காமல் இருக்கலாம். குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயமல்ல; அதற்கு பொறுமையும், கனிவும் அர்ப்பணிப்பு உணர்வும், தாய்மை உணர்வும் தேவை. உன் மனைவிக்கு, குழந்தையை வளர்க்க பொறுமை இல்லாமல் இருக்கலாம். குழந்தை பெற்ற பின், அடிவயிற்றில் பிரசவக் கோடுகள் தோன்றும். கச்சிதமான உடல்கட்டு போய், பலூன் போல் உடல் வீங்கி விடும். அதனால், உன் மனைவிக்கு திருமணத்தின் மீதும், தாம்பத்தியத்தின் மீதும், தாம்பத்தியத்தின் மூலம் பெற்றுக்கொண்ட குழந்தை மீதும், கட்டுங்கடங்காத கோபம் இருக்கலாம்.
குழந்தை பிறந்த பின், உன் நடத்தையில் ஏதாவது மாறுதல்களை கண்டிருப்பாள் உன் மனைவி. குழந்தை பிறந்த பின், தாம்பத்தியத்தில் நீ ஈடுபாடு காட்டாமல் இருக்கக்கூடும். மனைவியை விட, குழந்தை மீது அதிகமாக பாசத்தை கொட்டுகிறாயோ என்னவோ... அலுவலக பணிகளை முடித்துவிட்டு, தினம் இரவு, கால தாமதமாக வீடு திரும்புகிறாயோ என்னவோ... புதிதாய் உனக்கு குடிப்பழக்கம் தொற்றியிருக்கிறதோ என்னவோ. பொறுப்பாகவும், விவேகமாகவும் இல்லாமல் கடனாளி ஆகிவிட்டான் கணவன், என்கிற கவலை கூட உன் மனைவிக்கு இருக்கலாம்.
உன் மனைவியின் மன அழுத்தமே, அவளது தலைவலிக்கு காரணம்.
பூட்டிய அறைக்குள் புகைமண்டும். ஜன்னல்களை திறந்து விடு. உன் மனைவியை, வேலைக்கு செல்ல அனுமதி. இயல்பு நிலைக்கு மீண்டாலும் மீள்வாள். இனி, நீயும், உன் மனைவியும் என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகனே...
இருபது நிமிடம் செலவழித்து, உன் மனைவிக்கு உணர்வுகளை கொட்டி, ஒரு கடிதம் எழுது. அந்த கடிதத்தில், ஐந்து படிகள் இருக்கட்டும். முதல் படியில், உனக்கிருக்கும் கோபத்தை கொட்டு. இரண்டாவது படியில், உன் சோகத்தை காட்டு. மூன்றாவது படியில், பயத்தை இறக்கு. நான்காவது படியில், மன்னிப்பு கேள். ஐந்தாவது படியில், உன் மனைவி மீதான காதலை, புரிதலை, நன்றியை மன்னிப்பை வெளிப்படுத்து. கடிதத்தை உன் மனைவியிடம், உடனே கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உன் கடிதத்தை படித்து, உன் மனைவி என்ன பதில் எழுதுவாள் என யூகித்து, ஒரு ஆறுதல் கடிதத்தையும் நீயே எழுது. ஆறுதல் கடிதத்தில் மன்னிப்பு, புரிதல், பாராட்டு மற்றும் நீ மனைவியிடமிருந்து, என்னென்ன ஆறுதல்களை எதிர்பார்க்கிறாயோ, அத்தனையும் எழுது. உணர்வுகளை கொட்டிய கடிதமும், ஆறுதல் கடிதமும், உன் காயங்களை குணப்படுத்தும்.
இதே போல், உன் மனைவியையும் உணர்வுகளை கொட்டி ஒரு கடிதமும், அதற்கு ஒரு ஆறுதல் கடிதமும் எழுதச் சொல். கட்டாயப்படுத்தாமல், அன்பாகக் கூறி, எழுதச் சொல். பின் இருவரும், அவரவர் எழுதிய இரு கடிதங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கடிதங்களை படித்தபின், உங்களுக்குள் ஒரு புதிய புரிந்துணர்வு பூக்கும். இருவருக்குள்ளும், மெய்யாலும் நிலவும் பிரச்னைகளை கண்டு கொள்வீர். பிரச்னைகளுக்கு தீர்வை காண்பீர்கள். குழந்தையை, ஒரு சில ஆண்டுகள் கவனித்துக் கொள்ள, உன் மாமியாரை வீட்டோடு வரவழைத்து தங்க வை. முடியாவிட்டால், குழந்தையை மாமியார் வீட்டில் அல்லது உன் பெற்றோர் வீட்டில் வளர விடு. சிக்கனமாக இருந்து கடனை அடை. குழந்தை வளர்ப்பில் சரிபாதி கடமையை செய். இவ்வளவுக்கு பின்னும், உன் மனைவியின் வினோதமான நடவடிக்கைகள் தொடர்ந்தால், மனநல மருத்துவரிடம், அவளை, காட்டி, தகுந்த மருத்துவ ஆலோசனை பெறு.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.