அடுத்த தலைமுறை பொங்கல்!
இரண்டொரு நாட்களுக்கு முன்
தேரில் வருவாள் என எதிர்பார்த்த
என் தைமகள்
காரில் வந்திறங்கி, ஒரு கவிஞனின்
கைபற்றி கதறி அழுததை, கனவில் கண்டேன்!
அடுத்த தலைமுறையின், 'அபாக்கஸ்'
ஆதிக்கத்தில் அழிந்து போன தமிழனின்
தைத்திருநாள் கொண்டாட்டம்தான் அவள்
அழுகையின் அர்த்தம் எனப் புரிந்தது!
ஏ போக்கத்த அடுத்த தலைமுறையே
கொஞ்சம் போகியை பற்றி கேள்...
வாசலில் மாக்கோலம்... நடுவிலே பூசணிப்பூ
வீடு சுற்றி மா, வேம்பு, ஆவாரம் பூ என
கட்டிய பின், ஊர் திரளும் ஓரிடத்தில்
சொக்கபானை கொளுத்தி,
சொக்கி போய் கொண்டாடிய
அந்த போகிப் பொங்கல் எங்கே?
அது மட்கி மண்ணாகி போனது இங்கே!
ஏ...பர்கர் தின்னும் அடுத்த தலைமுறையே
கொஞ்சம் பொங்கலை பற்றி கேள்...
காப்பு கட்டிய முற்றம்;
திரண்டிருக்கும் குடும்ப சுற்றம்
மூன்று கல் கூட்டி, கரும்பு சோகை கட்டி
மஞ்சள் மாலை இட்டு,
கோலமிட்ட பானை வைத்து,
பொங்கி வரும் பொங்கலை, சிறார்கள்
பொங்கலோ பொங்கல் என கூவி
கும்மாளமிட்ட சர்க்கரை பொங்கல் எங்கே?
வெறும் பர்கர் தான் இங்கே!
ஏ... இன்டர் - நெட்டில் மாட்டி தவிக்கும் அடுத்த தலைமுறையே கொஞ்சம்
மாட்டுப் பொங்கலை பற்றி கேள்...
கண்மாய் கரையில் வைத்து,
கஷ்டப்பட்டு வயலில் உழைத்து
களைத்து போன காளைகளை
குளிப்பாட்டி, கொம்பு சீவி, வர்ணமிழைத்து,
பட்டி கட்டி, பாட்டுப்பாடி கொண்டாடிய
மாட்டுப் பொங்கல் எங்கே?
வெறும் பணநோட்டு மட்டும்தான் இங்கே!
ஏ... தேனும், தினை மாவும் மறந்த அடுத்த தலைமுறையே கொஞ்சம்
காணும் பொங்கலை பற்றி கேள்...
மாட்டை பூட்டி, கூட்டு வண்டி கட்டி, காப்பு தீட்டு
தீர்ந்ததென, தித்திக்கும் பொங்கல் தின்று
மாலை கோவில் சென்று, மனதார வழிபட்டு,
தாவணி கன்னியர் நந்தவனம் சென்று,
பூ பறித்து நடந்து வந்து
மஞ்சள் தண்ணீரை மற்றவர் மேல் ஊற்றி விளையாடிய காணும் பொங்கல் எங்கே?
வெறும் கனவு மட்டும்தான் இங்கே!
விளை நிலத்தை, 'விலை' நிலங்களாக்கி
விற்று விட்டு, வீடு மாறி போய் விட்ட
கிராமத்து விவசாயிகளின் ஆங்கிலப் பள்ளியில்
படிக்கும் அடுத்த தலைமுறைக்கு
அந்த பொங்கல் எப்படி தெரியும்
எப்படி விளங்கும்?
தேரில் வரும் தைமகளே காரில் வரும்போது
அடுத்த தலைமுறைக்கு பொங்கல், 'கல்'லாகி
கொண்டிருப்பதை நினைக்கும் போது
நெஞ்சு கனக்கிறது!
பிஞ்சுகள், பின்னணி தெரியாமல்,
பின்புலத்தை இழந்து,
பிறப்பிடத்தை மறந்து, வேறிடம் குடி பெயர்ந்து,
சிறப்பிடத்தை பெறாமல்
தவிக்கும் இன்னாளில் இனிமை
பொங்கல் இங்கு எங்கிருக்கிறது?
இருந்தாலும் அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்து கூறி மகிழ்வோம்!
— இளமுகில் அமுதவன், மஸ்கட்.