செடிகளுக்கு நீர் வார்த்து, தோட்டத்து பறவைகளுக்கு கிர்ணி பழத்தை வைத்த சுந்தரம் வீட்டிற்குள் வந்தார். சுமதியின் குரல் உரக்கக் கேட்டது. கூடவே பதிலுக்கு பதிலாக கிஷோரின் சத்தம்.
விறுவிறுவென்று சுமதி வெளியே வந்தாள். கண்களில் நீர் பளபளக்க, குரல் உடைய அவரிடம் படபடத்தாள்...
''பாத்தீங்களா மாமா... அவன் பேசறதை? எவ்வளவு பேச்சு பேசுறான்... நம்ம வீட்ல யாராவது இப்படி வாய்க் கொழுப்பா பேசியிருக்கோமா? வீட்டு சாப்பாடு பிடிக்கலே, வீட்டு மனுஷங்க பேசறது பிடிக்கலே, வீட்டுல தங்கறது பிடிக்கலே... என்னடா என்ன ஆச்சு உனக்குன்னு கேட்டா, எரிஞ்சு விழறான். எப்ப பாத்தாலும் மொபைல் போன், லேப்-டாப், ப்ளே ஸ்டேஷன் மற்றும் டேப்லெட்னு இருக்கான் மாமா. படிப்பு முடிஞ்ச கையோட வேலை கிடைச்சு செட்டிலாயிட்டானேன்னு பாத்தா, தனி தீவு மாதிரி, தானே ராஜா தானே மந்திரின்னு ஆய்ட்டான் மாமா.''
அவர் பொறுமையாக, ''சரிம்மா... நீ டென்ஷன் ஆகாதே... உனக்கும் ஆபீஸ்ல டைட் வேலை இல்லையா? அமைதியா போய்ட்டு வா... சாயங்காலமா பேசிக்கலாம்,'' என்றதும் கண்களைத் துடைத்தபடி அவள் கிளம்பினாள்.
மண் வாசனை கமழும் கையை கழுவி கொண்டு அவர் உள்ளே வந்தபோது, கிஷோர் தடாலென்று கதவை சாத்திக் கொண்டு போனில் பேசத் துவங்குவதைப் பார்த்தார்.
உண்மை தான். கிஷோர் மாறியிருக்கிறான்... 'தாத்தா, அந்த குமணன் கதை சொல்லு தாத்தா மறுபடியும்...' என்று நெகிழ்ந்தவன், 'என்ன தான் சொன்னாலும் கர்ணன் கிரேட் தான் தாத்தா. நன்றி மறக்காம, தோக்கிற பக்கம் நின்னு, உயிரை தியாகம் செஞ்சான் பாருங்க...' என்று கரகரத்தவன், 'நம்ம ஊர் மதுரைல தான் காந்திஜி அரையாடைக்கு மாறினாராமே, நெஜமா தாத்தா?' என்று வியந்தவன், 'சிபி சக்கரவர்த்தி புறாவுக்காக தன் தொடை சதையை வெட்டிக் கொடுத்த கதையை மறுபடி சொல்லு தாத்தா...' என்று தழுதழுத்தவன் இல்லை இவன். அலட்சிய மனோபாவம். தூக்கியெறிந்து பேசுகிற குணம், வீட்டை விட வெளியில் சுற்றுகிற வேகம் என்று தலைகீழாக மாறிவிட்டான் கிஷோர்.
''தாத்தா கொஞ்சமாச்சும் யோசிச்சு தான் செய்றீங்களா எதையும்?'' என்று கதவை அதேபோல வேகமாக திறந்து கொண்டு வந்தான் அவன்.
''என்னப்பா கிஷோர், எதை சொல்ற?'' என்று கொஞ்சம் கவலையுடன் கேட்டார் அவர்.
''என் பிரண்ட் பிரமோத் வந்தானா, ரெண்டு நாளைக்கு முன்னால; என்ன சொன்னீங்க அவன்கிட்ட?'' என்றான் கோபமான பார்வையுடன்.
''ஆமாம்பா வந்தான், உக்கார சொன்னேன். என்ன படிச்சான், என்ன செய்யிறான்னு விசாரிச்சேன்... ஏம்பா?''
''ஏன் தாத்தா ஊர் வம்பு உங்களுக்கு? அவன் எங்க படிச்சா என்ன, என்ன சம்பளம் வாங்கினா என்ன? இதே மாதிரிதான் அன்னிக்கும், லேண்ட் லைன்ல சந்தோஷி கால் பண்ணியிருக்கா... தேவையில்லாம அவள் யாரு, எங்க தங்கியிருக்கா என்று ஒரே என்கொயரி... அவமானமா இருக்கு தாத்தா எனக்கு. ஏன் அலையறீங்க இப்படி... மத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்காம இருக்கிற கலாசாரத்தை எப்ப தாத்தா கத்துக்கப் போறீங்க?'' என்று அவன் படபடத்தான். தரையில் காலை எட்டி உதைத்தான்.
திகைப்புடன் பேரனைப் பார்த்து அவர் சற்று தடுமாறினார். பிறகு மென்மையாகவே சொன்னார்...
''அக்கறை வேற, ஊர் வம்பு வேற கண்ணு... நான் கேட்டது உண்மையாகவே அவங்களோட, 'வெல்பேர்' சம்பந்தப்பட்டது. இதுல எந்த வெட்டிப் பேச்சும் இல்லப்பா... நட்பு என்கிற அருமை பத்தி தெரியாதவனா நான்?''
''எரிச்சலா இருக்கு தாத்தா உங்க பேச்சு. என்ன தெரியும், 'ப்ரண்ட்ஷிப்' பத்தி உங்களுக்கு? நடேசன், குமரகுரு, மிஞ்சி மிஞ்சிப் போனா சங்கரன்... இவ்வளவு தானே உங்க நட்பு... எனக்கு நாலு இல்லே, நானூறு நண்பர்கள் தெரியுமா... அதுவும், குண்டு சட்டியில குதிரை ஓட்டுற மாதிரி இல்லே... உலக நாடுகள் எல்லாத்துல இருந்தும் நண்பர்கள்... வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்-புக்ன்னு ரக ரகமா நண்பர்கள்... உடனுக்குடன் எல்லாத்தையும், 'ஷேர்' செய்துகிட்டு, 'லைக்' பண்ணிகிட்டு, கருத்து பரிமாறிக்கிட்டு, 'சாட்' பண்ணிகிட்டு அப்படி வளர்க்கிறோம் எங்க நட்பை. முடிஞ்சா புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க; இல்லேன்னா, நடுவுல புகுந்து கெடுக்காமலாவது இருங்க!''
பேரனின் முதுகில் கை வைத்தார் அவர்.
''உன் சந்தோஷத்தை விட பெரிசு வேற என்னப்பா இருக்கு எனக்கு? தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சரி, சமுதாய வாழ்க்கைக்கும் சரி, நண்பர்கள் கண்டிப்பா தேவைப்பா... அந்த நண்பர்கள் எப்படிப்பட்டவர்களா இருக்கணும்ங்கிறது தான் விஷயம். அந்த பிரமோத்கிட்ட பிரச்னை இருக்குப்பா... அவனால இயல்பா என்கிட்ட பேச முடியலே. பார்வை, என் கண்களை சந்திக்கவே இல்லே. அதே போலத்தான் அந்தப் பொண்ணும், அதோட பேர் என்ன சொன்னே... சந்தோஷியா, அவளும், எடுத்தேன் கவிழ்த்தேன்னு தான் பேசினா,'' அவர் முடிப்பதற்குள் அவன் கோபத்துடன் சிரித்தான்.
''ஓகோ இப்ப நல்லா புரிஞ்சு போச்சு தாத்தா. பொறாமை உங்களுக்கு... எனக்கு இவ்வளவு நண்பர்கள் இருக்காங்களேன்னு பொறாமை... உங்க காலத்தையும், எங்க காலத்தையும், ஒப்பிட்டு பார்த்து பொறாமை... உங்களுக்கு மட்டும் இல்லே, அம்மா, அப்பாவுக்கும் தான். சே வீடா இது,'' என்று கத்தி விட்டு, பைக்கை பலமாக உதைத்து, கிளம்பினான் அவன்.
மனிதனைப் பண்புள்ளவனாக மாற்றுகிற அற்புதங்களில் முக்கியமான ஒன்று நட்பு. அந்த உணர்வு இல்லையென்றால் எப்படி பிற மனிதர்களுடன் பழக முடியும்? சமூகத்துடன் எப்படி தொடர்பு கொள்ள முடியும்? கலந்து பழகி புரிந்து நேசிக்கும்போது தான் மனித சக்தியாக உருவாகும். அதுதான் அநீதிகளை தட்டி கேட்கும். ஆனால், கிஷோரின் நட்போ...
''அப்பா,'' என்ற ஜகனின் குரல் அவரை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.
''என்னப்பா ஜகன்? டூர் போட்டிருக்காங்களா ஆபிஸ்ல?'' என்றார் வாஞ்சையுடன்.
''இல்லப்பா. அதைவிட பெரிசுப்பா பிரச்னை... டிரான்ஸ்பர் வரும் போல இருக்குதுப்பா... ரிட்டயர்மென்ட்டுக்கு இன்னும் ஒரு வருஷம் தான் இருக்கு... ஆஸ்துமா டிரீட்மென்ட்ல இருக்கேன்... சுமதிக்கும் முதுகுவலி பாடா படுத்துது... இந்த நிலைமைல மலைப் பிரதேசத்துக்கு மாற்றம் வந்தா ரொம்ப கஷ்டம்பா.''
''கவலைப்படாதப்பா... பேசி பாரு, எழுதி கொடு, நிலமைய சொல்லு!''
''நம்பிக்கை இல்லப்பா... ஜி.எம்., பிடிவாதக்காரர்... சரி அதை விடுங்க, இந்த கிஷோர் பயல் இப்படி முறைப்பா, விறைப்பா ஆயிட்டானேப்பா. சுமதி தினம் தினம் அழறா... நீங்களாவது எடுத்து சொல்லுங்களேன்... உங்க பேச்சைக் கேப்பானே,'' என்ற மகனை அவர் புன்னகையுடன் பார்த்து தலையாட்டினார்.
வீட்டின் அமைதி தவழும் அந்த, 12:30 மணிக்கு, செய்திகளுக்காக அவர் தொலைக்காட்சியை பார்க்க உட்கார்ந்தார்.
அடுத்த கணம்!
திரையில், கீழே முக்கிய செய்தியாக, ஓடிய வாசகங்கள் அவர் கண்களைக் கட்டிப் போட்டன.
'எம்.என்.சி., எல்காட் வளாகத்தில் பணிபுரியும் சந்தோஷி என்ற இளம்பெண் படுகொலை. புதரில் சடலம் கண்டுபிடிப்பு; காதலன் வினோத் என்பவன் சந்தோஷியை வரச் சொல்லி, மயக்கம் கொடுத்து பாலியல் வன்முறை... நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்... கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு ஓடிய கும்பல், மூன்று மணி நேரத்தில் காவல் துறையால் பிடிபட்டனர்...'
தொடர்ந்து அந்த சந்தோஷியின் புகைப்படம்! அவள் தான், அவளே தான்! அன்றைக்கு வீட்டுக்கு வந்தபோது அணிந்திருந்த அதே மஞ்சள் வர்ண உடை. அய்யோ... காலம் கொடுமையாய் போனதே; பெண்ணுடல் சந்தைமயமாக்கப்பட்டதே! நம்பிக்கைக்கும், துரோகத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஒரு வண்ணத்துப்பூச்சி, விட்டில் பூச்சியாய் போனதே! யார் குற்றம் இது?
அவர் நெஞ்சம் துடித்தது.
அழைப்பு மணி அழைத்தது.
அதிர்ச்சியிலிருந்து கொஞ்சமும் விலகாமல், அவர் எழுந்து போய் கதவைத் திறந்தார்.
கிஷோர், துவண்டு போய் நின்றிருந்தான். அடிபட்ட முகத்தில், விழிகளின் வேதனை சிகப்பாய் தெரிந்தது. மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்டவன் போலிருந்தான்.
''டிவி பாத்தியாப்பா? செய்தி தெரியுமா?'' என்றவரின் தோள் மேல் சாய்ந்து, தழு தழுத்தான்.
''தெரியும் தாத்தா... பிரமோத்தை ஜெயில்ல போட்டுட்டாங்க தாத்தா... ரொம்ப காலமா கஞ்சா வித்திருக்கான். தெரியலே தாத்தா, கொஞ்சம் கூட தெரியலே. அய்யோ அவமானமா இருக்கு தாத்தா,'' என்றான். குரல் நடுங்கி வார்த்தைகள் உடைந்தன.
அவர் மேலும் அதிர்ந்தார்.
''என்ன... அவனா கஞ்சா வித்தான்? நம்ம வீட்டுக்கு வந்தானே... அந்தப் பையனா? கிஷோர் என்னப்பா சொல்றே?'' என்றார் அவரும் நடுங்கிய வார்த்தைகளுடன்.
''ஆமா தாத்தா; நல்ல பையன்னு நெனைச்சேனே... பேஸ்புக்ல அவ்வளவு அன்பா, கருத்தா இருப்பான் தாத்தா.''
''சந்தோஷி விஷயம் தெரியுமாப்பா?'' என்றபோது அவர் உடல் தடுமாறியது.
''அவளுக்கு என்ன தாத்தா... அவளும் போதைல மாட்டியிருக்காளா என்ன?''
''இல்லப்பா... அதை என் வாயால சொல்ல முடியாது... பாரு, 'டிவி'யை,'' என்றவரை இழுத்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தான் கிஷோர்.
பார்த்தா... அவன் உடலும் ஆடியது. தலையில் ஓங்கி அடித்தபடியே, சரிந்தான். விம்மல் தெறித்தது.
''இதென்ன தாத்தா. என்ன நடக்குது இங்கே,'' என்று அவன் கதறினான்.
வெளியில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. காக்கை கூட பறக்காத தெருவில் ஒரே ஒரு நோயாளி நாய் மட்டும் சாக்கடை ஓரத்தில் புரண்டது. காற்று நின்று விட்டது. வறட்சி... வறட்சி... இதுதான் பிரதிபலிக்கிறதா மனிதர்களிடமும்? ரசனையை மாற்றி, வெறியை ஏற்றி, வன்மையைப் புகுத்தி... அய்யோ!
''தாத்தா... நான் இப்ப என்ன செய்யணும் ஏன், என் மனசு இப்படி கஷ்டப்படுதுன்னு புரியலே...''
கிஷோர் அவர் மடியில் சரேலென்று விழுந்தான். அவர் கையை கெட்டியாகப் பற்றிக் கொண்டு அழுதான். அவன் நெஞ்சின் துடிப்பு, 'படபட' சத்தத்துடன் கேட்டது அவருக்கு.
''சொல்றேன் கண்ணா... கோபப்படாம கேட்கிறியா,'' என்று அவன் தலையை வருடியபடி அவர் சொல்லத் துவங்கினார். ''டுவிட்டர், பேஸ் புக் சாட் எல்லாம் வெறும் கேளிக்கையா உருமாற்றப்பட்டிருக்குப்பா... நட்பு ரொம்ப மலிவா கிடைக்குது. ரோபோ போல் செயற்கை நண்பர்களை உருவாக்குது. பிடிச்சா லைக், பிடிக்கலைனா ஒரே கிளிக்ல ப்ளாக். இது இல்லப்பா நட்பு.
''கிஷோர்... மதுக்கடைகள், மால்கள், தியேட்டர்கள், உணவு விடுதிகள்ன்னு புழங்குவது நட்பில்ல... சுயநலமில்லாத, நிபந்தனைகளற்ற, புரிந்து கொண்டு தோள் கொடுக்கிற தோழமை தான் நட்பு.
''அது, அவசியமான சமுதாயத் திறமை, விட்டுக் கொடுக்கிற பெருந்தன்மை. கல்கல்லா வெச்சு கட்டப்படுகிற கட்டடம் போல நட்பையும் கட்டித்தாம்பா காப்பாத்தணும்... பிரமோத்தோட ஊர் என்ன, படிப்பு என்ன, குடும்பம் எப்படின்னு நான் கேட்டேன்னு உனக்கு எவ்வளவு கோபம் வந்தது? நட்புல போய் இதெல்லாம் ஆராய முடியுமான்னு கேட்கலாம். ஆனா, ஆராயணும்பா.
''மூவாயிரம் வருஷத்துக்கு முன்னால எழுதப்பட்ட குறள்லயே 'ஒருவரின் குணம், குடும்பம், பின்னணி, என்று அனைத்தையும் ஆராய்ந்தே நட்பு கொள்ள வேண்டும்' என்று சொல்லியிருக்கு. அப்படி ஆராயாமல் மேற்கொள்ளப்படுகிற நட்பு, பல கேடுகளையும், சாவை நோக்கி தள்ளுகிற துயரங்களையும் உண்டாக்கும். இது, மோசமான காலக்கட்டம்... வாழ்க்கைச் சூழல், கால மாற்றம் எல்லாம் சேர்ந்து குடும்ப உறவுகளின் தன்மையை மாற்றும்போது, நட்பு எந்த மூலைக்கு? முன்னூறு, நானூறு நண்பர்கள்ன்னு சொன்னே... ஆனா, ரத்தமும் சதையுமா ஓடி வந்து நின்று பிரச்னைக்கு தோள் கொடுக்க முடியுமா?
''சிறு வயதிலிருந்தே ஒன்றா பழகி, தோளோடு தோள் உரசி, கேலி கிண்டல்ன்னு அன்புப் பிணைப்பா உருவாக வேண்டிய அழகான விஷயம், தான் நட்பு. ஆதாரமான நம்பிக்கையைக் காப்பாத்தறது நட்பு. எது நல்லதுன்னு எடுத்துச் சொல்வது, முன்னேற்றத்துக்கு உதவுவது, மனம் விட்டு பாராட்டுவது, உண்மையுடன் இருப்பது, மரியாதையும், மதிப்பும் நேசமுமாக இருப்பது தான் நட்பு.
''அப்பாவுக்கு தொலைதூரத்துல டிரான்ஸ்பர் போட்டது தெரியுமா உனக்கு?''
''தெரியாது தாத்தா... அப்பா பாவம்... ஆஸ்துமா நோயில ரொம்ப கஷ்டப்படறாரு... எப்படி தாத்தா?'' என்றான் பரிதாபமாக.
''இல்லே... இப்ப கேன்சலாய்ட்டது. எப்படி தெரியுமா? என் நண்பன் ராமலிங்கம் உதவியால, அவர் நண்பர் மூலமா செக்ரெட்டேரியட்ல ரெக்வெஸ்ட் வெச்சு, எல்லாம் சரியாய்ட்டுது. நட்பு சாதிச்சது. இன்னொரு விஷயம் சொல்லவா?''
'ம்' அவன் குரல் உருகியது.
''பாட்டியை ரொம்ப பிடிக்கும் தானே உனக்கு?''
''ஆமா தாத்தா... மீனுப் பாட்டி... அழகா, அன்பா, சிரிச்சிகிட்டே இருக்கிற பாட்டி... இப்ப வானத்துல நட்சத்திரமா ஆகிட்ட பாட்டி.''
''அவ எனக்கு கிடைச்சது எப்படி தெரியுமா? என் நண்பன் சுகுமாரோட தங்கை அவள்... மயிலாடுதுறையில முதலில் ஒரு வரனை நிச்சயம் பண்ணினாங்க அவளுக்கு. கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க திடீர்னு, 50 ஆயிரம் பணம் வேணும், அப்பத்தான் கல்யாணம் நடக்கும்ன்னு டிமாண்ட் செய்தாங்க... அதெல்லாம் சகஜம் அப்போ... பெண்ணடிமைத்தனம் உச்சத்துல இருந்த காலம். அந்த 50 ஆயிரம், இன்றைய 50 லட்சம்.
''சுகுமாரோட அப்பா தூக்குல தொங்கப் போய்ட்டார்... கஷ்டப்பட்டு போராடி காப்பாத்தினோம். அப்பதான் சுகுமார் என்னைக் கேட்டான்... மீனுவை நீ கட்டிக்கிறியாடா சுந்தர்ன்னு... சரின்னு ஒரே வார்த்தை தான் சொன்னேன். உடனே வீட்டுக்கு ஓடி வந்து என் அப்பா, அம்மாகிட்ட சம்மதம் கேட்டேன்... சந்தோஷமா தலையாட்டினாங்க. அதே தேதியில நடந்த கல்யாணம், 60 ஆண்டு தாண்டி இன்னும் மனசுல நிறைவா இருக்கு. எனக்குக் கிடைச்ச நட்பின் பரிசு, என் மனைவி.''
கிஷோர் நிமிர்ந்து பார்த்தான்.
அவர் பேரனை அணைத்துக் கொண்டு தொடர்ந்தார்...
''அவ்வளவு அழகான நட்பு, உனக்கும் கிடைக்கணும்னா நீ அதுக்காக கொஞ்சம் பாடுபடணும் கண்ணா... நட்பு என்கிறது தனிப்பட்ட நோக்கங்களைத் தாண்டி, அறிவார்ந்ததா, சமுதாய செயல்பாடா இருக்கணும்... பலதரப்பட்ட மனிதர்களுடன் ஏற்படற நட்பு, அனுபவங்களைக் கொடுத்து, நம்மை செதுக்கும். ஏற்றத் தாழ்வுகளை மறைய வைக்கும். போட்டி, பொறாமையை அகற்றும். அன்பு, உண்மை, நம்பிக்கைன்னு நேரான குணங்களைக் கொடுக்கும். வெறுப்பை அகற்றி, அமைதியை விதைக்கிற தன்மை நட்புக்கு மட்டும் தான் உண்டு.
''கிஷோர் அப்பேர்பட்ட அருமையான நட்பை, உன்னைச் சுற்றி தேடு, ஸ்கூல், காலேஜ், ஆபீஸ், அக்கம் பக்கம்ன்னு பாரு. நட்பு ஒரு கலையா, பாடமா, பண்பா உனக்கும், உன் போன்ற இளையவர்களுக்கும் கிடைக்கட்டும் கண்ணா.''
''தாத்தா, கிரேட் தாத்தா. புதுசா ஒரு விஷயம் புரிஞ்ச மாதிரி இருக்கு. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ், ஐ லவ் யூ தாத்தா,'' என்று கண்களைத் துடைத்துக் கொண்ட பேரனை, அவர் கைகள் வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டன.
உஷா நேயா