தொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 ஜன
2015
00:00

இன்றைய உலகில், நவீன தொழில் நுட்பம் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. இவை தரும் உலகியல் மாயமான ஒன்றாக உள்ளது. ஆனால், இவற்றால் நாம் பெறும் பாதிப்பு உண்மையானதாக உள்ளது. அப்படியானால், இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம், இவை அனைத்தையும் விலக்கி வைத்து, கற்காலத்திற்குச் செல்ல வேண்டுமா? என்று ஒருவர் கோபமாக நம்மிடம் கேள்வி கேட்கலாம். இந்த கேள்விக்குப் பதில், நாம் எப்படி நவீன தொழில் நுட்பத்தினால் பாதிக்கப்படுகிறோம் என்பதனை அறிந்து, அந்த பாதிப்புகளிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதற்கான வழி முறைகளைக் காண்பதில் தான் உள்ளது. இங்கு அப்படிப்பட்ட பாதிப்புகள் எவை என்பதனையும், அவற்றிலிருந்து விடுபட நாம் என்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்பதையும் காணலாம்.

விடுபடும் நிலை நோய்க்குறிகள்: எந்த ஒரு பழக்கப்பட்ட நிலையிலிருந்தும் நாம் விடுபடுகையில், அதற்கான உடல் மற்றும் மனநிலை பாதிப்புகள் நிச்சயம் நம்மிடம் ஏற்படும். தொடர்ந்து புகையிலை பழக்கம், தேநீர் அருந்தும் பழக்கம் உடையவர்களிடம், சில நாட்கள் அவற்றை அறவே பயன்படுத்தாமல் இருக்கும் நிலைக்குக் கொண்டு சென்றால், அவர்கள் உடல்நிலையில் பதற்றம் ஏற்படும். மனநிலையில் ஏற்படும் தாக்கத்தால், மேலும் உடல்நலம் சீர்கெடும்.
இதனை ஆங்கிலத்தில் Withdrawal syndrome எனக் குறிப்பிடுவார்கள். நாம் பயன்படுத்தும் தொழில் நுட்பமும் இப்படித்தான் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2012 ஆம் ஆண்டில், இது குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொலைபேசி பயன்படுத்தும் 100 பேர்களிடமிருந்து அவை பறிக்கப்பட்டன. அவற்றைப் பயன்படுத்தாமல், பார்க்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது. இவர்களில் 66 பேர்களின் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பைத்தியம் பிடித்தவர்கள் போல் ஆனார்கள். இது அவர்களின் உடல்நிலையையும் பாதித்தது. இதே போன்ற ஆய்வு ஒன்றை Swansea மற்றும் Milan பல்கலைக் கழகங்கள், இணையம் பயன்படுத்துபவர்களிடம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. போதை மருந்து பழக்கத்திற்கு ஆளானவர்களை, அதிலிருந்து தடுத்தால், என்ன விளைவுகள் ஏற்படுமோ, அந்த விளைவுகளை அவர்களிடம் காண முடிந்தது.

தூக்கமின்மை தரும் பாதிப்பு: முறையாகத் தூங்கும் நேரத்தினை அமைத்து வாழ்வதை நம் மருத்துவர்கள் அனைவரும் நமக்கு பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக இளைஞர்களுக்கு இது மிகவும் அவசியம். நம் பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்களிலிருந்து வரும் ஒளிக்கற்றையினால், நம் தூக்கநிலை மாறுதலுக்குள்ளாகிறது. அளவுக்கதிகமாக, தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது, குறிப்பாக உறங்கச் செல்லும் முன் பயன்படுத்துவது, நம் உறக்க காலத்தினைப் பின்பற்றுவதனை வெகுவாகப் பாதிக்கிறது. எனவே, உறங்கச் செல்லும் முன்னர், இவற்றைப் பயன்படுத்துவதனை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

இணையத் தேடல் பைத்தியங்கள்: இணையம் பயன்படுத்துபவர்களிடம் வெகு வேகமாகப் பரவி வரும் நோய் இது. அன்றாட வாழ்க்கையில் எப்போதும் எதையாவது இணையத்தில் தேடுவதும், இணையத்தில், குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில், அன்றைய பொழுதில் பதியப்பட்டுள்ளவற்றை அறியத் துடிப்பதும், நம்மில் பலரிடையே பரவி வரும் மனநிலையாகும். இதுவும் ஒரு வகை நோய் என்கிறது மருத்துவ உலகம். இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை ”இணையவெளிப் பைத்தியங்கள்” (Cyberchondriacs) என அழைக்கின்றனர். இவர்கள் ஒருவகை மன உந்துதலுக்கு (anxiety) ஆளாகின்றனர். இது மன அழுத்தத்தினை அதிகரித்து, அந்நிலை உடல்நலத்தைப் பாதிக்கிறது. அது மட்டுமின்றி, தங்களின் பாதிப்பு நிலையினை இணையம் மூலமாக அறிய முடியும் என இவர்கள் நம்புகின்றனர். அதற்கான தீர்வையும் இணையத்திலேயே தேடிப் பிடிக்கின்றனர். இணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திடும் இந்த செயல், இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலையைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் வைக்கிறது.

உயிரணுக்கள் குறைதல்: லேப்டாப் கம்ப்யூட்டரை தங்கள் மடியில் வைத்து இயக்கும் ஆண்களுக்கு, அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் மற்றும் மின் காந்த அலைகள், அவர்களின் உயிரணுக்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மிக மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இவர்களிடம் உயிரணுக்கள் காணப்படுவதாக, பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, நிச்சயமாக அவர்களின் உயிரணுக்களில் உள்ள டி.என்.ஏ. சேதமடைவதாகவும் அறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் இயங்கும் எக்ஸிட்டர் (Exeter) பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, மொபைல் போன் கதிரியக்கமும் இத்தகைய விளைவினை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கிறது.

பார்வைத் திறன் பாதிப்பு: ''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி நம்மிடையே உண்டு. தொடர்ந்து கம்ப்யூட்டர் மானிட்டர் திரையின் ஒளி வெளிப்பாட்டினையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பொருந்தும் சரியான பழமொழி இதுவாகும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் மானிட்டரின் திரையையே பார்த்துக் கொண்டு பணியாற்றுபவர்களுக்கு, பார்வைக் காட்சியில் தெளிவற்ற தன்மை முதலில் ஏற்படும். கண்களில் ஈரப்பதம் குறையத் தொடங்கும். இதனால், பார்க்கும் தன்மையை இவர்கள் மாற்றிட முயற்சிப்பார்கள். இது தீராத தலைவலியில் கொண்டுவிடும். மேலும், பிரகாசமான பின்னணியில், கருப்பு நிற வரிகளைத் தொடர்ந்து படிப்பதால், மண்டைப் பொட்டில் வலிச் சுருக்கத்தினை (temple spasm) ஏற்படுத்தும். இது தொடர் தலைவலியை ஏற்படுத்தும். இந்த தாக்கத்திலிருந்து விடுபட, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு முறை, மானிட்டர் ஸ்கிரீனிலிருந்து விலகி, சற்று நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

முதுகெலும்பு வலி: லேப்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பணியாற்றுபவர்கள், தாங்கள் விரும்பியபடி எல்லாம், அமர்ந்து அவற்றை இயக்க முற்படுகின்றனர். அதே போல, மொபைல் போனில் பேசுபவர்கள், பல்வேறு நிலைகளில் தங்கள் கழுத்தையும், தலையையும் திருப்பி வைத்துப் பயன்படுத்த முற்படுகின்றனர். பிரிட்டனில் பணியாற்றும், முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் Kenneth Hansraj இது பற்றி மேற்கொண்ட ஆய்வில், நம் தலையை 60 டிகிரி கோணத்தில் திருப்புகையில், கழுத்தின் மீது அதிகமான அளவில் பலம் பிரயோகிக்கப்படுவதாகவும், அது முதுகெலும்பு மற்றும் கழுத்தெலும்பில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும் கண்டறிந்துள்ளார்.

முகத் தோற்றப் பாதிப்பு: “நான் குளியலறைக்குக் கூட என் மொபைல் போனை எடுத்துக் கொண்டு செல்கிறேன்” எனப் பெருமையாகச் சிலர் கூறுவதுண்டு. மொபைல் போனை நாம் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால், மொபைல் போனில் பலவகைக் கிருமிகள் தங்குகின்றன. இவற்றின் உடனடி பாதிப்பு நம் முகங்களில் ஏற்படுகின்றன. இந்தக் கிருமிகள் நம் மயிர்க்கால்களில் தங்கி மருக்களை ஏற்படுத்துகின்றன. கண்களுக்கும் பரவி பாதிப்பை உருவாக்குகின்றன. எனவே, அவ்வப்போது, மொபைல் போனை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தருகின்றனர்.
மேலே குறிப்பிட்டவை, பொதுவாக நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைப் பயன்படுத்துகையில் ஏற்படும் பாதிப்பு நிலைகளாகும். நாம் அறியாமலும் சிலவகைப் பாதிப்புகளும் நம் உடலில் ஏற்படலாம்.
உடல்நிலையில் ஏற்கனவே உள்ள சில குறைகள், இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதால், தீவிரமாகி பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். எனவே, சாதனங்களைப் பயன்படுத்துவதனை ஓரளவிற்குக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உடல்நலத்தைப் பாதுகாக்கும் வழிகளையும் பின்பற்ற வேண்டியது நம் கடமையாகும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X