இளம்பிள்ளை வாதத்தை போலியோ என்று மருத்துவ மொழியில் குறிப்பிடப்படுகிறது. போலியோ ஒரு கொடிய வைரஸ் நோய். இந்த வைரஸ் குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும்.இந்நோயில் பல வகைகள் உள்ளன. போலியோ வைரஸ்கள் குறிப்பாக முதுகுத் தண்டு நரம்புகளையும், தலை நரம்புகளையும் அதிகமாக தாக்குகின்றன. இதனால் தசைகளை இயங்கச் செய்யும் செயல் நரம்புகள் செயலிழந்து போகின்றன.
எனவே கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவை சூம்பிப்போகின்றன. இதனால் போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நடக்க முடியாமல் போகிறது. ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளையே இந்நோய் அதிகம் தாக்குகிறது.
போலியோவின் அறிகுறிகள் உடம்பிலுள்ள முக்கிய அங்கமான கை, கால் மற்றும் முதுகுதண்டு வடம் பகுதிகளை அசைக்க முடியாமல் பலவீனம் அடையும். ஒரு சில நாட்களில் வெப்பகாய்ச்சல் ஏற்பட்டு பேதி ஏற்படும்; தலை பாரமாக இருக்கும்; உடல் முழுதும் தீராத வலி இருக்கும்.போலியோ பாதிப்பு வராமல் தடுக்க, குழந்தை பிறந்து ஒரு ஆண்டு வரை, கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். நிர்ணயித்த காலங்களில், குறிப்பிட்ட இடைவெளியில், போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
ஏப்ரல் மாதம் 2014 ஆம் ஆண்டு போலியோ இல்லாத நாடாக இந்தியாவை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும், ஜனவரி 18ம்தேதி, போலியோ சொட்டு மருந்து, அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் கொடுக்கப்படுகிறது. உங்க வீட்டு குழந்தைகளுக்கு மறக்காமல் போலியோ சொட்டு மருந்து கொடுத்து, போலியோ இல்லாத எதிர்காலத்தை உருவாக்கிடுங்கள்.
- சுப்புலஷ்மி,
குழந்தைகள் சிறப்பு மருத்துவர்.