அனுபவசாலிகள் என்பதால் முதியோருக்கு அறிவும், ஞானமும் அதிகமாக இருக்கும். அதே சமயம் உடல் தளர்ச்சியால் வேகம் இருக்காது. ஆனால், மக்கள் வேகத்திற்கு தான் மதிப்பளிக்கின்றனர்; வேகத்தை வைத்து தான் வலிமையும் கணிக்கப்படுகிறது.
வேகத்தை வைத்து, முதியோர் போட்டி போட முடியாது. ஆகையினால் முதியோர் முக்கியத்துவத்தை இழக்க வாய்ப்புகள் அதிகம். இதைக் கருத்தில் கொண்டு சமூகம், முதியோரை மதிக்க வேண்டியது கட்டாயம் என்ற எதிர்பார்ப்பை வலியுறுத்துகிறது. மரியாதை தருவது, முக்கியத்துவம் தருவது, மதிப்பளிப்பது என பல்வேறு நிலைகள் உள்ளன. இதில் சமுதாயம் எதிர்பார்ப்பது, மதிக்க வேண்டியதைத்தான்.
பெரியவர்களை பார்க்கும் போது வயதின் காரணமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் நடந்து கொள்வதைப் பொறுத்து மரியாதை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அபிப்பிராய பேதங்கள் கருத்து வேறுபாடுகள், ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பிரதாயத்திற்காக கட்டாயத்திற்காக மதிக்கப்படும் போது போலியாகிறது. இதனால் குழப்பங்கள், குறைபாடுகள், வெறுப்பு, ஏமாற்றம் ஆகியவை தான் மிஞ்சுகின்றன. பொதுவாகவே சக மனிதர்களை மதிக்க தெரிய வேண்டும். பாராட்ட பழக வேண்டும்.
எனவே முதியோருக்கு மரியாதை தருவது அவசியம். மதிக்க வேண்டியவர்களை மதிக்காமல் இருப்பது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பேரிடர்.
- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்.