தீபா பதினாறு வயது பெண். பிளஸ் ௧ படிக்கிறாள். ஒரே பெண் என்பதால் ஒட்டு மொத்த குடும்பமும் அவள் மீது அதீத அன்பு கொண்டிருந்தது. மெல்ல மெல்ல, தீபாவின் செய்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை கைகளை வளைத்தும், கண்களை மேலே நகர்த்தியும், வாயினை திறந்து நீர் பருகுவது போலவும் பாவனை காட்டுவாள். சில சமயம், எங்கோ பார்த்தபடி, தவறான வார்த்தைகளை சொல்வாள்.
அந்த நிமிடங்களுக்குப் பின், மயக்கமாகி தூங்கி விடுவாள். பள்ளியிலும் இதே போல் நடந்ததால், உடன் படித்தவர்கள், அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றும், அக்கம் பக்கத்தினரும், உறவினரும் தீபாவிற்கு பேய் பிடித்து விட்டது என்றும் விமர்சித்தனர். தீபாவின் பெற்றோருக்கு பயம் ஏற்பட்டு, செய்வதறியாமல் திகைத்தனர். தீபாவின் படிப்பும், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தீபாவின் பாட்டியோ, மாந்திரீகம் செய்யவும், பேயை விரட்டவும் அழைத்துச் சென்று விட்டார். தீபாவின் பிரச்னை தீர்ந்தபாடில்லை; சோகமே மிஞ்சியது.
தீபா அம்மாவின் தோழி, தீபாவுடன் என்னிடம் வந்தார். தீபாவின் செய்கைகளை விளக்கினார். தீபாவிடமும் விஷயங்களை கேட்டுத் தெரிந்து, அவருக்கு இருக்கும் பாதிப்பை அறிந்து கொண்டேன்.
தீபாவிற்கு, 'காம்ப்ளக்ஸ் பார்சியல் சீஷர்' என்ற வகை வலிப்பு நோய் உள்ளது. பொதுவாக வலிப்பு நோய் என்றாலே, பேய், பிசாசுகளின் தாக்கம் என்று மக்கள் நினைக்கின்றனர் அல்லது கை, கால் வலிப்பு என்று கருதுகின்றனர். வலிப்பு நோய் என்பது மடல்களில் உண்டாகும் ஒருவித எரிச்சலால் ஏற்படுகிறது. பாதிப்படைந்த மூளையின் மடல் பகுதியினைப் பொறுத்து அந்நோயின் வெளிப்பாடு மாறுபடும்.
வலிப்புநோய் வர காரணம் மூளை கோளாறுகள், மூளையில் கட்டி, தலையில் அடிபடுதல், மூளையில் ஏற்படும் ரத்த கசிவு, மரபணு போன்ற காரணங்களால் வருகிறது. வலிப்பு நோய் உள்ளவர்கள் மாறுபட்ட செய்கைகளை சுயநினைவற்ற நிலையில் செய்வர். சுய நினைவு வந்தபின், முன்பு நடந்தது எதுவும் நினைவுக்கு வராது.
வலிப்பால் துடிப்பவரை, மெதுவாய் ஒருக்களித்து எச்சில் சரளமாய் ஒழுக வசதியாய், படுக்க வைக்க வேண்டும். இதனால் நோயாளியின் தொண்டை அடைக்காமல் பாதுகாக்கப்படும். சுயநினைவு இழந்த நிலையிலிருக்கும் போது, அவருக்கு குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. தீபா மூன்றாண்டுகள் மருந்து எடுத்துக் கொண்ட பின் சரியானார்.
தன் குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட அழைப்பிதழ் கொடுப்பதற்கு, தீபா தன் குழந்தையோடு சென்ற வாரம் என்னைப் பார்க்க வந்திருந்தார்.
- டாக்டர். சு. அருணன்,
நரம்பியல் மருத்துவர்.