கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2015
00:00

கேள்வி: ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை முடித்து வைப்பதில் ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் என இரண்டு நிலைகளில் அமைக்க வழி இருக்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதா? எது நல்லது?
கா. அய்யப்பன், சென்னை.
பதில்:
ஸ்லீப் மற்றும் ஹைபர்னேஷன் (Sleep and hibernation) ஆகிய இரண்டும் ஒரே செயல்பாட்டினைத் தான் மேற்கொள்கின்றன. ஆனால், வெவ்வேறு வழிகளில். இரண்டு நிலைகளிலும், இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சேவ் செய்யப்படுகிறது. இந்த இரு நிலைகளை மேற்கொள்ளும் முன், என்ன செயல்பாட்டில் இருந்தீர்களோ, அந்நிலைக்கு நீங்கள் மீண்டும் செல்வீர்கள். ஆனால், ஒரு நிலை மிகச் குறுகிய கால அவகாசத்திற்கும், இன்னொன்று சற்று அதிகமான கால அவகாசத்திற்கும் பயன்படுத்த வேண்டும். ஸ்லீப் நிலையை தற்காலிக நிறுத்தம் (Suspend) என்றும் கூறுவார்கள். இந்நிலையில், உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருந்த தகவல்கள் அனைத்தும் ராம் மெமரியில் சேவ் செய்யப்படுகிறது. இதற்கென குறைந்த அளவே மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குகையில், அவற்றை உடனடியாகத் தருவதற்கு, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள சில பின்னணியில் இயங்கும். இவற்றின் இயக்கத்திற்கும் சிறிதளவு மின் சக்தி பயன்படுத்தப்படும்.
இதற்கு மாறாக, ஹைபர்னேட் (Hibernate) அப்போதைய செயல் தகவல்களை, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில் சேவ் செய்கிறது. அதன் பின் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்கிறது. இந்நிலையிலும் மிகக் குறைந்த மின்சக்தியே பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் உங்கள் அலுவலகத்திலிருந்து, இன்னொரு இடத்தில் நடக்க இருக்கும் கூட்டம் ஒன்றுக்குச் செல்கிறீர்கள். அப்போது, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் மேல்புறத் திரையைக் கொண்டு மூடுகிறீர்கள். இப்போது ஹைபர்னேட் நிலையில் பயன்படுத்தப்படும் மின்சக்தியைக் காட்டிலும் கூடுதலாகவே, மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், திரும்ப செயலாக்கத்திற்கு வருகையில், மிக விரைவாக இயக்கப்படும். ஆனால், நீங்கள் வீட்டிற்குத் திரும்புகிறீர்கள் என்றால், வெகு நேரம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை. அப்போது ஹைபர்னேட் செய்வதே நல்லது.

கேள்வி: மக்களிடையே உண்மையிலேயே மிகப் பிரபலமான பிரவுசர் எது? இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நிஜமாகவே மக்கள் விரும்புகிறார்களா? என்னப் பொறுத்தவரை, பயர்பாக்ஸ் பயன்படுத்துவதையே விரும்புகிறேன். அடுத்த இடத்தினை குரோம் பிரவுசருக்குத் தருவேன். ஒரு பிரவுசரிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவோர் எந்த பிரவுசரை நாடுகின்றனர்?
என். ராஜகோபால், திண்டிவனம்.
பதில்:
உங்களுடைய கேள்விக்கு என்னிடம் நேராக என் அனுபவத்திலிருந்து பதில் சொல்ல இயலாது. அதனால், NetMarketShare என்னும் அமைப்பின் ஆய்வுக் கணக்கிலிருந்து பதில் தருகிறேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரரை, தற்போது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் 58.94% பேர் பயன்படுத்துகின்றனர். இது சென்ற 2014 ஜனவரியில் இருந்த 58.21% என்ற நிலையைக் காட்டிலும் சற்று அதிகமாகும். குரோம் பிரவுசரை 20.57% பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது சென்ற ஜனவரியில் 16.34% ஆக இருந்தது. குரோம் பிரவுசருக்கு மாறியவர்கள், பெரும்பாலும் பயர்பாக்ஸ் பிரவுசரிலிருந்து வந்தவர்களாக இருந்தனர். சென்ற ஆண்டு தொடக்கத்தில், இரண்டாவது இடத்தில் இருந்த பயர்பாக்ஸ் பிரவுசர், தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரை, ஜனவரி 2014ல், 18.02% பேர் பயன்படுத்தினார்கள். தற்போது 13.26% பேர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில், பயர்பாக்ஸ் பிரவுசர், அதன் பயனாளர்களிடம், நிறுவன வளர்ச்சிக்கு நிதி கேட்டு அறிவிப்பினை வெளியிட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில், சபாரி பிரவுசர் பயன்படுத்துவோர் 5.9% பேர் ஆவார்கள். ஆப்பரா பிரவுசரை 1% பேருக்குக் குறைவாகவே பயன்படுத்துகின்றனர். மற்ற பிரவுசர்களை, மொத்தத்தில் 0.5% பேரே பயன்படுத்தி வருகின்றனர்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். சிஸ்டம் சார்ந்த இடங்களில், சொற்களைச் சற்றுப் பெரிய அளவில் பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால், சில இடங்களில் உள்ளவற்றைப் பார்ப்பது மிகக் கடினமாக உள்ளது. பெரிய எழுத்தாக எப்படி மாற்றலாம்?
என். காதர் மொஹிதீன், திண்டுக்கல்.
பதில்:
நல்ல கேள்வி. சிலர் இதனை மாற்றவே முடியாது என்று எண்ணி, அப்படியே சிறிய எழுத்துக்களோடு போராடிக் கொண்டிருப்பார்கள். இதனை மாற்றி அமைக்க, கீழே குறிப்பிட்ட செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவின், மேல் வலது மூலையில் உள்ள தேடல் கட்டத்தில் Change window colors and metrics என டைப் செய்திடவும். இது Personalization என்ற ஆப்ஷனைக் காட்டும். இங்கு காணப்படும் Change window colors and metrics என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் Windows Color and Appearance என்ற விண்டோவில் அடுத்து இருப்பீர்கள். நீங்கள் விண்டோவின் எந்த பகுதியினை மாற்ற விரும்புகிறீர்களோ, அதனை அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில் தேர்ந்தெடுக்கவும். இதில் காட்டப்படும் ஒவ்வொரு வகைக்கும் எழுத்து வகை அளவு மற்றும் வண்ணத்தினை மாற்ற ஆப்ஷன் கிடைக்காது. எடுத்துக் காட்டாக, Menu விண்டோவில் மாற்ற வேண்டும் எனில், நீங்கள் எழுத்து வகை, மாற்ற விரும்பும் அளவு, வண்ணம், அழுத்தமாகவா என்ற விருப்பம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் மாற்ற விரும்பும் அனைத்திற்கும் முன் தோற்றக் காட்சி விண்டோவின் மேலாகக் காட்டப்படும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் வழக்கமாகப் பார்க்கும் அளவில் வண்ணங்கள், சிஸ்டம் விண்டோவில் தோன்றாது. எடுத்துக் காட்டாக, ஒரு வாழ்த்து அட்டையில், ஒரு வண்ணம் மிக அழகாக இருக்கலாம். ஆனால், அதே அளவில் சிறப்பான தோற்றம் சிஸ்டம் விண்டோவில் கிடைக்காது. முன் தோற்றக் காட்சியைப் பார்த்த பின்னர், அது உங்களுக்குப் பிடித்தமாக இருந்தால், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். மறுபடியும் பிடிக்கவில்லை என்றால், மறுபடியும் இதே போல சென்று மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: பேஸ்புக்கில் என் பெயரில் தளம் ஒன்று திறந்து என் நண்பர்களை இன்வைட் செய்து, என் பக்கத்தில் வைத்துள்ளேன். அவர்களும் சில விஷயங்களை போஸ்ட் செய்வார்கள். ஆனால், இப்போது யார் யாரோ போஸ்ட் செய்கின்றனர். இதனை எப்படிக் கட்டுப்படுத்துவது?
என். மாலதி, சென்னை.
பதில்:
இது ஒரு தொல்லை தான். ஆனால், நீங்களாக ஏற்படுத்திக் கொண்ட தொல்லை. உங்கள் பக்கத்தினை வரையறை செய்கையில், யார் வேண்டுமானாலும் அதில் போஸ்ட் செய்திடலாம் என்ற வகையில் அமைத்திருப்பீர்கள். இதனை எளிதில் மாற்றி அமைக்கலாம். கவலை வேண்டாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும். உங்களுடைய பக்கத்தில் மேலாக உள்ள Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Posting Ability என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து நீங்கள் விரும்பும் வகையில் Allow other people to post to my Page Timeline அல்லது Disable posts by other people on my Page Timeline என்பதில் கிளிக் செய்திடவும். மற்றவர்கள் உங்கள் பக்கத்தில், போஸ்ட் செய்திட அனுமதியை மறுக்கலாம். அனுமதி தந்தால், அடுத்ததாக, மற்றவர்கள் போட்டோ அல்லது வீடியோ பதிக்கலாமா என்பதனையும் முடிவு செய்திட வேண்டியதிருக்கும். அவ்வாறு போஸ்ட் செய்திட வைத்து, அவற்றை நீங்கள் பார்த்து அனுமதிக்க வேண்டும் என விரும்பினால், Review posts by other people before they're shown on your Page என்பதில் கிளிக் செய்து அமைக்கவும். தொடர்ந்து Save Changes என்பதில் கிளிக் செய்து வேலையை முடிக்கவும்.
நீங்கள் மட்டுமே எப்போதும் போஸ்ட் செய்திட வேண்டும் என விரும்பினால், உங்கள் நண்பர்கள் எவரும் போஸ்ட் செய்திடக் கூடாது என விரும்பினால், மேல் வலது பக்கத்து மூலையில் கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து இடது பக்க பிரிவில் Timeline and Tagging என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இங்கு Who can post on your Timeline? என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். வலது கோடியில் உள்ள Edit என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் கீழ்விரி பட்டியலில் Only Me என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் நண்பர்கள், எதனையும் உங்கள் டைம்லைன் பக்கத்தில் போஸ்ட் செய்திட முடியாது. ஆனால், நீங்கள் போஸ்ட் செய்திடும் தகவல்களில், அவர்கள் கமெண்ட் எழுத முடியும்.

கேள்வி: பலர் தங்களுக்கு வந்த ஸ்பேம் மெயிலினால், அதிகம் இழந்ததாகக் கூறுகின்றனர்; சிலரோ ஏமாற்றப்பட்டதாகக் கூறுகின்றனர். இந்த ஸ்பேம் மெயில்கள் எப்படி வருகின்றன? எப்படி அடையாளம் காணலாம்? தவிர்க்க முடியுமா?
என். கலையரசன், சிதம்பரம்.
பதில்:
ஸ்பேம் என்பது நாமாகக் கேட்டுப் பெறாமல், தாமாகவே, வர்த்தக நோக்கில், ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பப்படும் மின் அஞ்சல் ஆகும். உங்கள் மின் அஞ்சல் கணக்கில் ஸ்பேம் என்ற போல்டர் இருக்கும். இதனைத் திறந்து பார்த்தால், அதில் பல ஸ்பேம் இமெயில்கள் இருப்பதைக் காணலாம். இதற்கும் சில தப்பித்து, வழக்கமான அஞ்சல்கள் போல, இன்பாக்ஸில் சில ஸ்பேம் மெயில்கள் கிடைக்கும். இதில் தான் பலர் மாட்டிக் கொள்கின்றனர்.
ஸ்பேம் மெயில்கள் பெரும்பாலும் நமக்குப் பண ஆசை ஊட்டும் மெயில்களாக இருக்கும். ஏதேனும் விளம்பரம் தரப்பட்டு, அதனைப் பார்த்தால், கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு இருப்பதாகக் காட்டப்படும். அல்லது ஏதேனும் ஒரு ஆப்பிரிக்க நாடு ஒன்றின் நகர் பெயர் போட்டு, அதில் உள்ள கோடீஸ்வரர் இறந்துவிட்டதாகவும், பணம் எக்கச்சக்கமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் பேங்க் அக்கவுண்ட் எண் கொடுத்தால், கணிசமாக கமிஷன் கிடைக்கும் என ஆசை காட்டி மெயில் இருக்கும்.
இவற்றிற்கு பலியாகும் மக்களின் முதல் தவறு பேராசையே. அடுத்ததாக, கோபித்துக் கொள்ளக் கூடாது, முட்டாள்தனம் தான். மனிதன் என்ற வகையில் நாம் எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் பேராசைக்கு அடிமையாகிறோம். அதனால் தான் இது போன்ற ஸ்பேம் வழி ஈடுபடுபவர்கள், பணம் சம்பாதிக்கிறார்கள்.
இதிலிருந்து தப்புவது எப்படி? மேலே கூறப்பட்டபடி இமெயில்கள் வருகின்றனவா? இணைய தள முகவரிகளில் கிளிக் செய்தால், பணம் கிடைக்கும் என செய்தி கிடைக்கிறதா? உடனே அதனை ஸ்பேம் எனக் குறிக்கவும். உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராம், அந்த முகவரியினைக் குறித்துக் கொண்டு, அதன் பின்னர் வரும் மெயில்களை ஸ்பேம் போல்டருக்குத் தானாக அனுப்பிவிடும். இன்னொரு நல்ல வழியும் உண்டு. எந்த மெயில் அல்லது இணைய தளம் கேட்டாலும், உடனே சிந்திக்காமல், உங்கள் இமெயில் முகவரியைக் கொடுக்கும் பழக்கத்தினை நிறுத்துங்கள். இது எல்லா தளங்களுக்கும் பொருந்தாது. சில தளங்கள், உண்மையான தளங்களாக இருக்கும். அதில் நம் இமெயில் முகவரியினைத் தருவது நமக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.
ஒரு சில தளங்கள், உங்களிடம் இமெயில் முகவரியினை வாங்கிக் கொண்டு, பின் அவற்றை மற்ற தளங்களுக்குக் கொடுக்கும்.
திடீரென ஒரு நாள், உங்களுக்கு ஏகப்பட்ட எண்ணிக்கையில் பலவகையான ஸ்பேம் மெயில்கள் வரத் தொடங்கும். இந்த வகையில், மொத்தமாக மின்னஞ்சல் முகவரிகளை விற்பனை செய்திடும் அமைப்புகளும் உண்டு. இவற்றிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல், நம் கம்ப்யூட்டரும் நம் தனி நபர் தகவல்களும் பிறரின் கைகளில் சென்று, நமக்கு இழப்பைத் தரும் சூழ்நிலைகள்
உருவாகும். பேராசையைத் தவிர்த்திடுங்கள். நம் உழைப்பின் மூலம் வராத பணத்திற்கு ஆசைப்படாதீர்கள்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X