'சூரியன் உதிப்பதை பார்ப்பவன் பாக்கியசாலி; பார்க்காதவன் துரதிர்ஷ்டசாலி...' என்பது கிராமத்து சொலவடை. சூரியன் உதிக்கும் முன் எழுந்து, சூரியதோயத்தை தரிசித்து, வணங்கி, தன் கடமையைச் செய்பவனின் வாழ்வில் வெற்றி குவியும். அதனால், அவன் வாழ்வு செழித்து பாக்கியசாலி ஆகிறான். 11:00 மணி வரை இழுத்துப் போர்த்தி தூங்கி, உழைக்கும் கடமையை மறப்பவன், வாழ்வில், உடலில் பல்வேறு நோய்களும் மற்றும் பணக் கஷ்டங்களும் ஏற்பட்டு துன்பங்களை அனுபவிக்கும் துரதிர்ஷ்டசாலி ஆகிறான்.
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் இரவு, 11:00 மணிக்கு தூங்கச் செல்வதும், காலை, 8:00 மணிக்கு எழுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும், சூரியனுக்கே உரித்தான ஞாயிற்றுக்கிழமைகளில், காலையில் எழுவதே இல்லை. இதனால், உடல் மட்டுமல்ல, மனதும் கெட்டுப்போகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை.
ராவணனை வெல்வதற்குரிய உத்தியை ராமனுக்கு உபதேசித்த அகத்தியர், 'ராமா... சூரிய குலத்தவனான நீ, சூரிய வழிபாட்டின் மூலமே, ராவணனை எளிதில் வெல்ல முடியும்...' என்று கூறி, சூரியனை வழிபடுவதற்குரிய, 'ஆதித்ய ஹ்ருதயம்' ஸ்லோகங்களை உபதேசித்தார்.
வாழ்வில் வெற்றி வாகை சூட, சூரியனின் தயவு அவசியம். இதனால் தான், நம் முன்னோர் காலை, 4:30 மணிக்கு எழுந்தனர். இதை பிரம்ம முகூர்த்த வேளை என்பர்.
தன் தோழிகளை அதிகாலையிலேயே துயில் எழுப்பி, நீராட செல்வோம் என, அழைக்கிறாள் ஆண்டாள். அதில் ஒரு பாடலில், 'கீழ் வானம் வெள்ளென்று...' என்ற வரிகள் உள்ளது. 'கிழக்கு வெளுத்து விட்டது; புறப்படலாம்...' என்பது இதன் பொருள். இதில், ஒரு மறைபொருள் புதைந்துள்ளது. 'கீழ்வானம்' என்ற ஒன்று இருந்தால், 'மேல் வானம்' என்ற ஒன்றும் இருக்க வேண்டுமல்லவா!
இதிலே, கீழ்வானம் என்பது மனிதர்கள் வசிக்கும் பகுதி; மேல்வானம் என்பது கடவுளின் இடம். கீழே இருப்பவர்களின் மனம் வெளுத்தால் தான், மேலே இருக்கும் கடவுளை அடைய முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறாள் ஆண்டாள். சூரிய உதயத்தை கருப்பொருளாக வைத்து, எவ்வளவு பெரிய தத்துவத்தை உதிர்த்திருக்கிறாள் பாருங்கள்.
மனம் வெளுத்திருக்க வேண்டும் என்றால் எப்படி?
ராமனின் பட்டாபிஷேக நாள்... தாய் கவுசல்யா, மகன் பட்டம் சூட்டி மகுடத்துடனும், சகல பரிவாரங்களுடனும் வருவான் என, ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், மகன் அமைதியாக வந்து தாய் முன் நிற்கிறான்.
'என்னப்பா... முடிசூட்டு விழா நடக்கவில்லையா?' என்று கேட்கிறாள் கவுசல்யா.
'நடந்தது தாயே... எனக்கில்லை, என் தம்பி பரதனுக்கு...' என்கிறான் ராமன்.
'மூத்தவனுக்கு பட்டம் சூட்டுவது தான் வழக்கம். இருப்பினும், முடிசூட்டிக் கொண்டிருக்கிறானே பரதன்... அவன் உன்னை விட மூன்று மடங்கு நற்குணங்கள் பொருந்தியவன், மகா உத்தமன்...' என்று பதிலளித்தாள் அந்தத் தாய்.
எவ்வளவு உயர்ந்த மனது பாருங்கள்! மனமானது இவ்வாறு தான் வெளுத்திருக்க வேண்டும்.
ரதசப்தமி என்றால், சூரியனுக்குரிய திதி. இந்நாளில், சூரியன் தன் பாதையில் மாற்றத்தை உருவாக்கிக் கொள்வார். அன்று, விரதமிருந்து பொங்கல் வைத்தால், நல்ல பலன் கிடைக்கும் என்பதுடன் நின்றுவிடாமல். அதிகாலையில் எழும், நல்ல பழக்கத்தை துவங்கவும், நல்ல மனதுடன் திகழவும் உறுதியெடுக்க வேண்டும். செய்வோமா!
தி.செல்லப்பா