கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (18) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (18)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜன
2015
00:00

மதுரை, 'ஸ்ரீபாலகான சபா' சென்னையில் முகாமிட்டிருந்த சமயம். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் தான் சகோதரர் எம்.ஜி.ஆர்., வீடு இருந்தது. காலையிலும், நாடகம் முடிந்த பின்பும் மற்றும் ஓய்வு நேரங்களிலும் அவரது வீட்டிற்குச் செல்வேன். அவரது அம்மா, என்னையும் ஒரு மகனாக எண்ணி பழகியதை, என்னால் மறக்க முடியாது.
இரு மலர்களால் தொடுக்கப்பட்ட எங்களுடைய நட்பை பற்றி சொல்ல வேண்டுமானால், கண்ணதாசன் எழுதிய,
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே...
கண்ணில் மணி போல மணியில் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவை பிரிக்க முடியாதடா...
- என்பதைப் போன்றது.
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து, குளித்து, எனக்காக காத்திருப்பார் எம்.ஜி.ஆர்., நான் சென்றதும், இருவரும் அருகருகே அமர்ந்த பின்தான், அவரது அம்மா எங்களுக்கு காலை சிற்றுண்டியை பரிமாறுவார். நான் செல்வதற்கு சிறிது தாமதமாகி, அதற்குள் அண்ணனுக்கு பசி எடுத்து விட்டால், 'அம்மா... எனக்கு பசிக்கிறது...' என்று சொல்வார்.
அதற்கு, 'இரு... கணேசன் வரட்டும்; சேர்ந்து சாப்பிடலாம்...' என்பார் சத்யா அம்மா.
நாங்கள் இருவருமே தாய்ப்பாசத்தில் அதிக பற்று கொண்டவர்கள்; தாய் சொல்லை தட்டாதவர்கள்; தாயை தெய்வமாக மதிப்பவர்கள்.
'மதுரை ஸ்ரீபால கான சபா' என்றிருந்த பொன்னுசாமி பிள்ளையின் கம்பெனி, 'மங்கள பால கான சபாவாகி' கும்பகோணத்திலிருந்து சென்னை வந்தோம். அந்நேரத்தில் கம்பெனி ரொம்ப நொடித்து விட்டது. கம்பெனியை என்.எஸ்.கிருஷ்ணன் வாங்கினார். அங்கே, மனோகரா மற்றும் கிருஷ்ண லீலா நாடகங்களை நடத்தினோம்.
அச்சமயத்தில் தான் அண்ணனுக்கும், எனக்கும் ரொம்ப நெருக்கமான உறவு ஏற்பட்டது. அப்போது நாங்கள் வால்டாக்ஸ் முனையில் இருந்த ஒரு பெரிய பில்டிங்கில் தங்கி இருந்தோம். அதிலிருந்து சிறிது தள்ளியிருந்த மூன்றாவது வீட்டில் தான் அண்ணன் இருந்தார். அப்போது அவர் பல கம்பெனிகளில் வேலை தேடுகிற நேரம். இருந்தாலும், டிபன் சாப்பிட எனக்காக காத்திருப்பார். நாங்கள் இருவரும் சாப்பிட்டதும் அவர் சென்று விடுவார்; நானும் வந்திடுவேன். பகல் சாப்பாடும் இப்படித்தான் நடக்கும். ஆனால், இரவில், நான் நாடகம் முடிந்து வரும் வரை காத்திருப்பார். இரவு, 10:00 மணிக்கு மேல் தான் நாடகம் முடியும். அதற்குபின், நாங்கள் நடந்து போய், சினிமா பார்ப்போம்.
சினிமாவில் அண்ணன் நடிக்க ஆரம்பித்து, ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்த நேரம் அது! அதனால், தலையில் முண்டாசும், வேட்டியை வரிந்து கட்டி, சினிமாவுக்கு வருவார். ஆனால், என்னை யாருக்கும் தெரியாது. சினிமா பார்த்து விட்டு, இரவு, 1:00 மணிக்கு திரும்பி வரும் போது, மின்ட் தெருவில் இருந்த சேட்டு கடையில் சப்பாத்தி மற்றும் பால் சாப்பிடுவோம். எல்லாம் அண்ணன் செலவு தான். அப்போ, என்கிட்ட ஏது பணம்? அப்பவே பிறருக்கு உதவி செய்யும் பழக்கம் அவருக்கு அதிகம். அன்றைய நிலையிலேயே நண்பர்களுக்காக நிறைய செலவு செய்வார். வசதியாய் இருக்கும் போது எவ்வளவு செய்திருப்பார்ன்னு நினைத்து பாருங்கள்... இதற்கு பின், நான் தங்கியிருக்கும் வீட்டில் என்னை, விட்டு விட்டு, அவர் வீட்டுக்கு போவார். இம்மாதிரி வளர்ந்தது தான் எங்கள் நட்பு. அன்பை பொழிவதில் அவருக்கு இணை கிடையாது.
ஒருமுறை, தி.மு.க., கட்சி சார்பில், ஏழாவது சுயமரியாதை மாநாட்டை நடத்தும் மும்முரத்தில் இருந்தார் அண்ணாதுரை. மாநாட்டில், 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்காக கதை, வசனம் எழுதினார் அண்ணாதுரை.
அப்போது, கோவையில் இருந்தார் எம்.ஜி.ஆர்., அச்சமயம், அவர், காங்கிரஸ்காரர். விபூதி பூசியிருப்பார். கதர் தவிர வேறு எதுவும் அணிய மாட்டார். கட்சி மற்றும் கொள்கை வேறுபட்டாலும் ரொம்ப பரந்த உள்ளம் கொண்ட தேசியவாதி அவர்.
அண்ணாதுரை எழுதிய, சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில், சிவாஜி வேடத்தில் அண்ணன் நடிப்பதாக இருந்தது; ஆனால், அவர் நடிக்கவில்லை. அண்ணாதுரை என்னைப் பார்த்து, 'கணேசா... நீ நடிக்கிறாயா?' எனக் கேட்டதும், 'நடிக்கிறேன்...' என்று கூறினேன். அந்நாடகத்தின் மொத்த வசனம், 110 பக்கம்; அதை காலையில் என்னிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு போய் விட்டார் அண்ணாதுரை. அன்று மாலை, நான் தங்கியிருந்த,'திராவிட நாடு' அலுவலகத்திற்கு வந்தவர், 'என்ன படிச்சியா?' என்று கேட்டார். உடனே நான், 'பாடமே செய்துட்டேன்...' என்றேன்.
'உண்மையாகவா!' என்றார் ஆச்சரியத்துடன்.
'ஆமாம்...' என்றேன்.
'சொல்லு பார்க்கலாம்...' என்றார்.
அப்போது அண்ணாதுரையின் நண்பர்கள் தங்கவேலு முதலியார் மற்றும் ராஜகோபாலும் உடன் இருந்தனர். நான், அண்ணாதுரை முன், நடித்து காட்டினேன். கோட்டையை உடைக்கிற அக்காட்சியை நடித்து காட்டி முடித்ததும், ஓடி வந்து என்னை கட்டி தழுவினார் அண்ணாதுரை. அதன்பின் தான் நாடகத்தில் சிவாஜியாக நடித்தேன்.
சிவாஜி வேடத்தில் அண்ணன் எம்.ஜி.ஆர்., நடிக்காததால், அந்த வேடம் எனக்கு கிடைத்தது மட்டுமல்லாமல், அந்த வேடத்தின் பெயரே எனக்கு நிலைத்து விட்டது. இதுவே, என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
முற்றும் —
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை' விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X