அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜன
2015
00:00

லென்ஸ் மாமாவின் நண்பர், அமெரிக்க அரசில் உயரதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் நம்மூர்க்காரர். சமீபத்தில், அவர் சென்னை வந்தபோது, லென்ஸ் மாமா அறிமுகம் செய்து வைத்தார்.
பொதுவான அறிமுகத்திற்கு பின், என்னுடைய சந்தேகங்களை கேட்க ஆரம்பித்தேன். நேரமோ மாலை, 7:00 மணி. கடுப்பாகி விட்டார் மாமா. அமெரிக்க நண்பருடன் உற்சாகபான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நான், 'சப்ஜெக்ட்டிவ்' ஆக பேச ஆரம்பித்ததும், 'இதெல்லாம் நாளைக் காலையில வச்சுக்க... நாங்க வெளியே போகணும்...' என்றார்.
லென்ஸ் மாமாவை இடைமறித்த அமெரிக்க நண்பர், 'மக்களுக்கு சென்றடைய வேண்டிய விஷயங்களை கேட்கிறார். நான் சொல்லப் போகும் உண்மைகளை இவர் எழுதினால், நம்மவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும்... அரை மணி, ஒரு மணி நேரம் தாமதமானாலும் பரவாயில்லை...' என்றார்.
உடனே நான், 'இந்தியர்கள், உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் பாதிக்கப்படுகின்றனர். ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் அடித்து விரட்டப்பட்டனர். இதே அபாயம், இன்னும் பல ஆப்ரிக்க நாடுகளிலும் உள்ளது. பியூஜி தீவில் இருந்தும் இந்தியர்கள் விரட்டப்பட்டனர்.
'இப்போது, அமெரிக்காவிலும், இந்தியர்கள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? இவை தொடர வாய்ப்பு உண்டா?' எனக் கேட்டேன்.
'அமெரிக்காவில் வாழும் இந்தியர் பலர், சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்வதில்லை. கறுப்பர்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற புரட்சி வெடித்த பின், 1964ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் தான், நம்மவர் சுலபமாக அமெரிக்காவில் நுழைய வழி வகுத்துக் கொடுத்தது.
'ஆனால், அமெரிக்க வாழ் இந்தியர்கள், ரான்டி கிங் வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அமெரிக்காவில் வாழும் ஆப்ரிக்க கறுப்பர் இனத்தவரை, நம்மவர்கள் மதிப்பதே இல்லை. அவர்களது பூர்வீகம் மற்றும் கலாசாரம் பற்றி அக்கறை கொள்வதில்லை. அவர்களைவிட நம் மக்கள், 'மைனாரிட்டி' தான். நம்மவர்கள் நடத்தும் வியாபாரங்களின் வாடிக்கையாளர்களே கறுப்பர்கள்தான்.
'கடந்த, 1960க்கு முன், அமெரிக்காவுக்கு வந்த இந்தியர்கள் பெரும்பாலும், டாக்டர்கள், இன்ஜினியர்கள், ஆடிட்டர்கள் தான். இவர்கள் நகரின் மத்திய பகுதியில் வெள்ளையர் நடுவே வேலை பார்த்து, வேலை முடிந்ததும், வெள்ளைத்தோலர்கள் வாழும் இடங்களில் வீடு தேடி வசிக்கின்றனர். இவை, நகரில் இருந்து, 40-50 கி.மீ., தொலைவில் உள்ள குடியிருப்புப் பகுதிகள். இவர்கள் மாலை, 7:00 மணிக்கு மேல் வெளியில் வருவது கிடையாது. மிகவும் பாதுகாப்பான வாழ்விற்கு பழக்கப்பட்டுப் போய் விட்டனர். ஆனால், கடந்த, 10 ஆண்டுகளில், அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் டாக்சி டிரைவர்களாகவும், பெட்ரோல் பங்குகளிலும், ஓட்டல் சர்வர்களாகவும், சிறு பெட்டிக்கடைகள் நடத்துபவர்களாகவும் உள்ளனர்.
'எனவே, இவர்கள் நகரிலேயே வாழ வேண்டி உள்ளது. அதுவும், வேலை செய்வதில் விருப்பம் இல்லாத, குடியிலேயே பொழுதைப் போக்கும் கறுப்பர்கள், ஸ்பானியர்கள் இடையே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
'நம்மவர்கள் நேரத்தைப் பற்றி கவலைப்படாமல், தினமும், 18 மணி நேரம் உழைத்து முன்னேறி, நல்ல நிலையை, குறுகிய காலத்தில் எட்டுவதை, அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இதனால், அவர்களுக்கு ஆத்திரம் உண்டாகிறது.
'அமெரிக்க அரசின், சிவில் ரைட்ஸ் கமிஷன், 'கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக, இந்தியர்கள் மீது வெறுப்பு அதிகரித்து வருகிறது...' எனக் கூறியுள்ளது.
'மேலும் அந்த அறிக்கையில், 'ஏழை பாழை கறுப்பர்கள் வாழும் பகுதிகளில்தான், இந்தியர்களால் குறைந்த செலவில் கடைகள் ஆரம்பிக்க முடிகிறது. இவர்களது கடும் உழைப்பு, குறுகிய காலத்திலேயே பலன் தர ஆரம்பித்ததும், கடையைச் சுற்றி வாழும் ஏழை கறுப்பர்கள் பொறாமைப்பட ஆரம்பிக்கின்றனர்.
'அத்துடன், அக்கம் பக்கம் வாழும் வேலையற்ற கறுப்பர்களுக்கு இவர்கள் வேலை கொடுப்பதில்லை. இதுவும், அவர்களிடையே கோபத்தை அதிகப்படுத்தி வருகிறது. ஆசிய கண்டத்தில் இருந்து அமெரிக்கா வரும் மக்களுக்கு, அமெரிக்க அரசு சலுகைகள் அளிக்கிறதோ என்ற சந்தேகத்தையும் கறுப்பர்களிடையே கிளப்பி விட்டுள்ளது.
'எங்கிருந்தோ வந்து நம்மிடம் வியாபாரம் செய்து கொழிக்கின்றனர். ஆனால், நமக்கு வேலை தர மறுக்கின்றனரே என்ற எண்ணம் கறுப்பர்களிடையேயும், ஸ்பானியர் மற்றும் ஏழை வெள்ளைத் தோலினரிடையேயும் பரவி வருகிறது.
'பிழைக்கச் செல்லும் நாடுகளில் எல்லாம் இந்தியர்களுக்கு ஏன் பிரச்னை ஏற்படுகிறது என்றால், நம்மவர்கள் தாம் பிழைக்கச் செல்லும் நாடுகளின் நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்வதே இல்லை. அந்நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ளாததால், அந்நாட்டு மக்களிடையே இந்தியர்களை பற்றிய உயர்வான மதிப்பீடு குறைந்து, சுயநலவாதிகளாக பார்க்கப்படுகிறோம்.
'மேலும் நன்கு உழைத்து வீடு, கார்,
தோட்டம் என சம்பாதித்து விடுகின்றனர். இதுவும் பொறாமையை கிளப்பி விடுகிறது.
'இதைத் தவிர்க்க, சம்பாதிக்கும் பணம் அனைத்தையும், ஊருக்கு அனுப்பாமல், தாம் வசிக்கும் நாட்டு மக்களுக்கும் செலவு செய்ய வேண்டும். உள்ளூர் மக்களையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும். தீபாவளி, பொங்கல் என்று தமக்குள்ளே விழா நடத்திக் கொள்வதை விட்டு, கறுப்பர்களையும், ஏழை - பாழை வெள்ளையனையும் இவ்விழாக்களுக்கு அழைக்க வேண்டும்.
'அதேபோல, அவர்கள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்வதுடன், -அதற்கு பண உதவியும் செய்ய வேண்டும். முக்கியமாக, அவர்களது கலாசாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தாம் உண்டு, தம் வேலை உண்டு என்று இந்தியர்கள் இன்னும் சுயநலத்துடன் இருந்தால் பிரச்னைதான்...' என முடித்தார்.
உண்மை தானே! (அமெரிக்க நண்பர் முடிக்கும் போது, இரண்டாம் ஜாம தூக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தார் லென்ஸ் மாமா!)

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X