'உங்களை பார்த்தா ஒரே பொறாமையா இருக்கு...' என, ஒரு முறையாவது சொல்லாதவர்கள் உண்டா? நம்மால் முடியாத ஒன்றை, பிறர் சாதிக்கும் போது, அதை பார்த்து வியப்பதை விடுத்து, 'நற நற' வென்று பல்லைக் கடிக்கிறோம் என்பதே உண்மை. இவ்விடத்தில் தான், பொறாமைத் தீ பற்றி எரிகிறது.
'என்னோட படிச்சவன் இன்னைக்கு எவ்வளவு புகழோட இருக்கான்; நாமும் இருக்கிறோமே...' என்று எண்ணத் துவங்கி விட்டாலே, அது தாழ்வு மனப்பான்மைக்கு பிள்ளையார் சுழியாகி விடும்.
'என்னுடன் பணிபுரிபவர், முதலாளியிடம் பெயர் தட்டிக் கொண்டு போய் விட்டாரே, என்னால் நிச்சயம் இது முடியாது...' என்ற முடிவுக்கு ஒருவர் வந்து விட்டால், அது வீழ்ச்சியின் துவக்கம்.
'கூடப்பிறந்தவன் இவ்வளவு சம்பாதித்து விட்டான்; நாம் இதில் கால்வாசியை கூட தொடவில்லையே...' என்று ஒருவர் ஏங்க ஆரம்பித்து விட்டால், இது, மனதை பீடித்து விட்ட கவலை எனும் காச நோயாகிறது.
'ஒண்ணாதான், 'பீல்டுல' நுழைஞ்சோம்; அவனுக்கு கிடைக்குற மரியாதை, நமக்கு கிடைக்கலையே...' என்று எரிச்சல் பட ஆரம்பித்தால், இது, ஒருவரின் வளர்ச்சியை கருகி விடச் செய்யும் பொல்லாத தீ.
தீயை வயிற்றுக்குள் வைத்து, வயிற்றெரிச்சலில் கருகிப் போவதை விட, இயலாமைகளை எண்ணி, நொந்து உருகிப் போவதை விட, இந்த நெருப்பை ஒரு சாண் உயர்த்தி, அதை நெஞ்சிலே கொண்டு போய் நிறுத்தி விட்டால், அதுவே மிகப் பெரிய ஆக்க சக்தியாக மாறி விடும்.
'அவன் என் கூட படிச்சவன் தான்; எனக்கு இதனால எவ்வளவு பெருமை தெரியுமா?' என்று அந்த புகழுக்குரிய நண்பனை அங்கீகரித்தால், அந்தப் புகழின் மூலையில், நாமும் ஒட்டிக் கொண்டு, அந்த வட்டத்திற்குள் சேர்ந்து விட்டோம் என்று பொருள்.
'முதலாளி மனசில அவரை தாண்டி இடம் பிடிக்கணும்...' என்ற நம் சிந்தனையை சற்றே திசை திருப்பினால், அதுவே ஒருவரை பின்னாலிருந்து தள்ளும் உந்து சக்தியாக உருவாகிறது.
'என் உடன் பிறந்தவன் நன்றாக தான் சம்பாதிக்கிறான்; ஆனால், அவனைவிட நான் தான் மன நிம்மதியுடன் இருக்கிறேன்...' என்று உணர தலைப்பட்டு விட்டால், ஒருவன் அவனது சகோதரனை விட மனதளவில் பணக்காரனாகி விடுகிறான்.
'அவனுக்கு கிடைக்கிற மரியாதை எனக்கும் வேணும்; இதுக்கு என்ன செய்யலாம்?' என்று எண்ணத் துவங்கி விட்டால், நண்பன் பயணிக்கும் விமானத்தை மிஞ்சுகிற ராக்கெட் ஒன்று, நமக்கு வாய்த்து விடலாம்.
மாறாக, ஒவ்வொருவரையும் பார்த்து, பொறாமை குவியல்களை வளர்த்துக் கொள்கிற போது, அது, ஒருவரை பொசுங்கி விடவே வழி வகுக்கிறது.
நமக்கு நாம் தூண்டுகோலா, எதிரியா என்பதை நம் (பொறாமைப்) பார்வைகளே முடிவு செய்கின்றன.
பிறரை வியந்து விட்டு, அதோடு விட்டு விடுகிறோம். பாராட்டி விட்டு அக்கணமே விலகி விடுகிறோம். மாறாக, இவர்களே நம் உந்து சக்திகள் என்பதை உன்னிக்க ஆரம்பிக்கும் போது தான், நியூட்ரலில் இருக்கும் நம் வாழ்க்கை, முதல் கியருக்கு மாற ஆரம்பிக்கிறது.
யாரையெல்லாம் பார்த்துப் பொறாமைப் படுகிறோமோ, அவர்களே நம் ரோல் மாடல்கள்; கதாநாயகர்கள்!
இரும்பை தங்கமாக மாற்றும் ரசவாதம் போன்ற அசாத்தியமான விஷயமல்ல இது. சாத்தியமாக்கக் கூடிய கலை தான். சச்சினை பார்த்துப் பொறாமைப்பட்டவர்கள் காலியாகிப் போயினர். வியந்த ஒருவரோ, விராட் கோஹ்லியாகிப் போனார்.
லேனா தமிழ்வாணன்