அஜித்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படமான, தீனாவில், அஜித் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால், அதன்பின், விஜயகாந்த், அமீர்கான், சிரஞ்சீவி மற்றும் விஜய் என, பல முன்னணி கதாநாயகர்களை அவர் இயக்கி விட்டபோதும், மீண்டும் அஜித்துடன் இணையவில்லை. இந்நிலையில், மீண்டும் அஜித்தை இயக்க விரும்பிய முருகதாஸ் அதுபற்றி அவரிடம் சொன்னதையடுத்து, 'என்னை அறிந்தால் படம் முடிந்ததும் இணைவோம்...' என்று பச்சைக் கொடி காட்டி விட்டார் அஜித். அதனால், அடுத்து இந்தி படம் இயக்கப்போவதாக கூறிவந்த முருகதாஸ், அதை நிறுத்தி, தற்போது, அஜித் படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
தனுஷைத் துரத்தும் மகிமா!
சாட்டை மற்றும் மொசக்குட்டி உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மகிமா. சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் இவர், ஒருமுறை தனுஷை சந்தித்து, தனக்கு நாயகி வேடம் தருமாறு வெளிப்படையாக கேட்டார். ஆனால், தனுஷ், 'என்னுடன் நடிக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை...' என்று கூறி, வெற்றிமாறனுடன் இணைந்து நடிக்கும் காக்கா முட்டை படத்தை தொடர்ந்து, தான் தயாரிக்கும் புதிய படமான, அண்ணனுக்கு ஜே என்ற படத்தில் மகிமாவுக்கு நாயகி வேடம் கொடுத்துள்ளார். இருப்பினும், 'இது என் தற்காலிக சந்தோஷம் தான்; உங்களுடன், 'டுயட்' பாடும் வரை ஓய மாட்டேன். துரத்திக் கொண்டே இருப்பேன்...' என்று தன் மன நிலையை அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். எண்ணம் இட்டவன் தூங்கான்; ஏடு எடுத்தவனும் தூங்கான்!
— எலீசா
குத்துப்பாட்டு நடிகையான ஓவியா!
தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஓவியாவை சில குத்தாட்ட வாய்ப்புகள் தேடிச் சென்ற போது, 'நான் கதாநாயகி; என்னை எப்படி அந்த மாதிரி பாடல்களில் நடிக்க கேட்கலாம்...' என்று இயக்குனர்களை கோபித்துக் கொண்டார். ஆனால், தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ள அவர், பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகள் கூட, அயிட்டம் பாடல்களில் ஆர்வமுடன் நடனமாடுவதைப் பார்த்து, தானும் அந்த வழிக்கு மாறியிருக்கிறார். அதனால், சில கமர்ஷியல் இயக்குனர்களிடம் குத்தாட்ட வாய்ப்பு கேட்கும் அவர், 'இனிமேல் நான் இமேஜ் பார்க்கப் போவதில்லை; வித்தியாசமான நடிகையாக சினிமாவில் வலம் வரப் போகிறேன்...' என்று கூறி வருகிறார். எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
— எலீசா
மீண்டும் இணையும் விஷால் - ஆர்யா!
அவன் இவன் படத்தில், ஏற்கனவே விஷால் - ஆர்யா இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால், அப்படம் ஓடாததால், அதையடுத்து இணைந்து நடிக்க கதைகள் கிடைத்தபோதும், அவர்கள் அதை ஏற்கவில்லை. ஆனால், பாண்டியநாடு படத்தை அடுத்து, மீண்டும் விஷாலை இயக்கவிருக்கும் சுசீந்திரன், அப்படத்தில் ஆர்யாவை, 'கெஸ்ட்' ரோலில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், விஷால் குறுக்கிட்டு, 'கெஸ்ட் ரோல் வேண்டாம்; ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம்...' என்று கூற, இப்போது இரண்டு கதாநாயகன் போன்று, அந்த கதையை மாற்றிக் கொண்டிருக்கிறார் சுசீந்திரன்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* அந்த விரல் வித்தை நடிகர் நடிக்கும் படங்கள், திரைக்கு வர முடியாமல் திணறிக் கொண்டு கிடப்பதால், மிதமிஞ்சிய விரக்தியில் உள்ளார். அதோடு, தன் தந்தையே ஜோதிடர் என்பதால், அவர் சொல்லும் கோவில்களுக்கு சென்று, பரிகாரங்களை செய்து வரும் நடிகர், விரதங்களையும் கடைபிடிக்கிறார். அதன் காரணமாக, யாராவது நள்ளிரவு பார்ட்டிகளுக்கு அழைத்தால், காதுகளை பொத்திக் கொண்டு தெறித்து ஓடுகிறார். பார்ட்டி என்றால், முதல் நபராக ஆஜராகும் நடிகரின் இந்த மாற்றத்தை கண்டு, ஆச்சரியத்தில் வாய்பிளந்து நிற்கிறது அவரது நட்பு வட்டாரம்.
* தாரா நடிகை முன்னணி கதாநாயகர்களின் படங்கள் என்றால் அடக்கி வாசிக்கிறார். ஆனால், புதியவர்களின் படம் என்றால், 'படத்தின் கதை இந்த மாதிரிதான் செல்ல வேண்டும்; இந்த மாதிரிதான் தலைப்பு இருக்க வேண்டும்...' என்று புதிய கன்டிஷன்களை போடுகிறார். அதோடு, தான் சொல்லும் தேதிகளில் தான் படப்பிடிப்பு வைக்க வேண்டும் என்றும், கெடுபிடி செய்கிறார். இதனால், நடிகையை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
துளிகள்!
* டிராபிக் படத்துக்கு பின், தற்போது, மம்மூட்டியுடன் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.
* இந்த ஆண்டு, தான் நடித்த இரண்டு படங்கள் திரைக்கு வரும் என்று கூறியுள்ளார் சிம்பு.
* நயன்தாராவை விட, தனக்கு சிறிய கதாபாத்திரம் கொடுத்ததால் தான், மாஸ் படத்தில் இருந்து, விலகியதாக அறிவித்துள்ளார் எமி ஜாக்சன்.
அவ்ளோதான்!