கடந்த, 1944ல், குண்டூர் கோபால் எழுதிய, 'நட்சத்திர மாலை' நூலிலிருந்து: டி.ஆர்.ராஜகுமாரி பிரபலமானதற்கு அவருடைய உருவத் தோற்றமே காரணம். ராஜகுமாரி பிரமாத பாடகியல்ல; நடிப்பிலும் அப்படித்தான்! அழகில் அவரை விடச் சிறந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இருப்பினும், ராஜகுமாரி என்றால், ரசிகர்களுக்கு ஒரு மயக்கம். அந்த மயக்கம் இருக்கும் வரையில், ராஜகுமாரி எது செய்தாலும், ரசிகர்களுக்கு கற்கண்டு தான். அதை மறுத்துப் பேசினால், நம்மை அடிக்கவும் துணிவர்.
முதன் முதலில், குமார குலோத்துங்கன் படத்தில் தான் ராஜகுமாரி தோன்றினார். பின், மந்தாரவதி மற்றும் சூர்ய புத்ரி ஆகிய படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களுமே வெற்றி பெறவில்லை. அடுத்து, இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் படத்தில் நடித்தார் ராஜகுமாரி.
யார் யாருக்கு எந்த வேடம் கொடுத்தால் சோபிப்பர் என்பதை கண்டறிவதில் சுப்ரமணியம் கெட்டிக்காரர். ராஜகுமாரியிடம் வசிய சக்தி நிறைந்திருப்பதை அறிந்தார். அதை, கச்சதேவயானி படத்தில் சரிவரப் பயன்படுத்திக் கொண்டார். படுதோல்வியுறும் என்று விமர்சிக்கப்பட்ட அந்தப் படம், வசூலை அள்ளிக் குவித்தது. கச்ச தேவயானி ராஜகுமாரி, சினிமா ரசிகர்களின், 'ஸ்வப்பன தெய்வ'மாக ஆகிவிட்டார். அன்று முதல், அவர் பெயருக்கு ஒரு மந்திர சக்தி ஏற்பட்டது; படங்களுக்கோ கொள்ளை வசூல்!
கச்ச தேவயானி படத்துக்குப் பின், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களான, சதி சுகன்யா மற்றும் மனோன்மணியில் நடித்தார் ராஜகுமாரி. ஆனால், கச்சதேவயானியில் கிடைத்த அளவுக்கு இப்படங்களில் பெயர் கிடைக்கவில்லை. பின்னர், சிவகவியில் தோன்றினார். மீண்டும் புகழ் உயரத் துவங்கியது. நடிப்பிலும், நாட்டியத்திலும் புகழ் பெற்றார். குபேர குசேலா அவர் பெயரைப் பிரமாதப்படுத்தி விட்டது. காரணம், வசிய மருந்தை, அவர் அளவுக்கு அதிகமாகவே பிரயோகித்து விட்டார். அதனால், பலத்த கண்டனங்களும் கிளம்பின. கடைசியாக, அவர் நடித்து வெளிவர இருக்கும், பிரபாவதி, ஹரிதாஸ் மற்றும் சாலிவாஹனன் ஆகிய படங்களிலும், தம் வசிய மருந்தை சரிவர உபயோகித்திருப்பார் என்றே எண்ணுகிறேன். ராஜகுமாரியின் வசிய மருந்து, ரசிகர்களுக்கு திகட்டல் ஏற்படாதபடி, ஓர் அளவுடன் இருக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை.
தற்போது, 22 வயது நிரம்பியுள்ள, (5.5.1922) ராஜகுமாரி, சங்கீதம், நாட்டியம், நடிப்பு ஆகியவற்றில் பெயர் பெற்று வருவது பரம்பரை விசேஷத்தால் தான் எனக் கூறலாம். சங்கீதத்தில், புகழுடன் விளங்கிய தஞ்சை குஜலாம்பாளின் இண்டாவது பெண் வயிற்றுப் பேத்தி தான் ராஜகுமாரி. இவரது சொந்தப் பெயர் ராஜாயி; சினிமாவுக்கு வந்ததும் ராஜகுமாரி என்று அழகான பெயரை சூட்டிக் கொண்டார்.
ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; ஆபத்தான நிலையில் இருந்த அவர், இரண்டு நாட்களுக்கு பின், இறந்து விட்டதாகக் கருதி, சவக் கிடங்கிற்கு அனுப்பப்பட்டார். மறுநாள், அவர் அடைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து பெருங்கூச்சல் எழுந்தது. போய்ப் பார்த்தால், அந்த நோயாளி சாகாமல், கத்திக் கொண்டிருந்தார்.
இரண்டாம் முறையாக, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முறையும் பலனில்லை. நன்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறப்பை ஒரு முறைக்குப் பல முறை உறுதி செய்தனர். மறுநாள், சவக்கிடங்கிலிருந்து கத்தல் ஏதும் வராதது கண்டு அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி, அவர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் சென்று பார்த்தனர். ஆனால், அங்கே சடலத்தைக் காணோம்.
'உயிருடன் இருக்கும்போதே, மூன்று முறை என்னைக் சாகடித்தவர்களே... மறுபடியும் உங்களிடம் சிகிச்சை பெற, விரும்பவில்லை...' என்ற குறிப்பு மட்டும் இருந்தது.
கடந்த, 1942ல், 'கலைமகள்' மாத இதழில், பாரதியாரின், 'இந்தியா' பத்திரிகையில், பணியாற்றிய ஸ்ரீ ஸ்ரீ ஆசாரியார் எழுதியதிலிருந்து:
பாரதியார் சாப்பிடும்போது, மணை போட்டிருந்தாலும் சம்மணமிட்டு உட்கார மாட்டார். இரு கால்கள் மேல் அமர்ந்து, சுவை பார்ப்பவரைப் போல, விரல்களால் உணவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடுவார். எழுந்திருக்கும்போது, இலையில் கால்பாகம் உணவு ஒதுக்கப்பட்டிருக்கும். எதையும் முறைப்படி செய்ய மாட்டார். அவருக்கு சாப்பிடுவதிலும், குளிப்பதிலும் கூட காலக்கிரமம் இல்லை. தன் மனம் போன நேரங்களில் தான், அவர் சாப்பிடுவதும், குளிப்பதும்! இது குறித்து ஏதாவது சொன்னால், 'இதற்குக் கூடவா ஒரு சட்டம்? பசித்தபோது சாப்பிடுவேன். வேண்டியபோது குளிப்பேன்...' என்பார்.
நடுத்தெரு நாராயணன்