அன்புள்ள மகளுக்கு,
என் வயது 75; இறைவனுக்கும், மனசாட்சிக்கும் பயந்து எழுதப்பட்டுள்ள இந்த மனக் குமுறல்களில் ஒரு சொல் கூட, உண்மைக்குப் புறம்பானதென்று தயவு செய்து எண்ணி விட வேண்டாம்.
பர்மாவில் பிறந்து, இரண்டாம் உலகப் போரில், நான்கு வயதிலேயே பெற்றோரை இழந்தேன். பாட்டியுடன் கோல்கட்டா வரை நடந்து, பின் தமிழகம் வந்து, ஆடு - மாடு மேய்த்து, சில மனித தெய்வங்களின் உதவியால், பள்ளியின் வாசலை மிதிக்காமல் படித்து, 28 வயதில் ஆந்திரா சென்று தெலுங்கு கற்று, அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த எனக்கு ஓய்வூதியம் வருகிறது. தற்சமயம் என் மகள் வீட்டில் மனைவியுடன், 'பேயிங் கெஸ்ட்'டாக இருக்கிறேன். எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத என் தேவைகள் மிகவும் குறைவு. எனவே, என் மகன்களிடத்தில் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
கடந்த, 2004ல் என் மூத்த மகன், தந்தையை இழந்த ஒரு ஏழைப் பெண்ணை, மணம் செய்து கொண்டான். தாயும், மகளும் பொய் மற்றும் பழி பாவங்களுக்கு அஞ்சாதவர்கள்; பணத்திற்காக எந்தப் பாதகமும் செய்யத் தயங்காதவர்கள், வாழ்வில் உண்மையே பேசி அறியாதவர்கள் என்பது பின் தான் தெரிந்தது.
நல்லவனாயிருந்த என் மகனையும், 'சாடிஸ்ட்' ஆக்கி விட்டனர். அவர்களது ஆட்டங்களுக்கு ஏற்றவாறு இவன் ஆடுகிறான். அவர்கள் வாய் கூசாது பொய் கூறி, முடிந்தவரை எனக்கு இன்னல்கள் தருகின்றனர். பேராசை படைத்த அவர்களால், எனக்கு நேரவுள்ள ஆபத்தை உணரும் நிலையில் அவன் இல்லை. நான் என் சுயார்ஜிதம் முழுவதையும் மதிப்பிட்டு, என் மூத்த மகன், மனைவி, மகள், மற்ற இரு மகன்களுக்கும் பிரித்து தர இசைந்தேன். இது, அந்த மூவருக்கும் பிடிக்கவில்லை. என், ஒரே வீட்டை மருமகளுக்கு எழுதித் தந்து விட்டு வெளியேறச் சொன்னார்கள். நான் மறுக்கவே, வரதட்சணைக் கேஸ், ஜெயில், உணவில் விஷம், அடியாட்கள், கொலை, குத்து என்று மிரட்டி, எழுத முடியாத கீழ்த்தரமான சொற்களால் திட்டினர். என் மற்ற மகன் - மகள் குடும்பத்தினரால் எனக்கு எந்தவிதக் குறையுமில்லை. தற்போது, என் மூத்த மகன் லண்டனில் உள்ளான்.
இந்த எட்டு ஆண்டுகளாக அவன், தன் வருமானத்தை தாய் வீட்டில் உள்ள தன் மனைவிக்கு அனுப்பி வருகிறான். நிறையச் சொத்துகள் சேர்த்த நிலையிலும், 'அவன் பணமே அனுப்புவதில்லை...' என்று தாயும், மகளும் பொய் கூறி வருகின்றனர். இருப்பினும், இப்போதுங்கூட சொத்துக்காக அவர்களது மிரட்டல், வசவுகள் தொடர்கின்றன.
பிறர் நலனுக்காகப் பல லட்சங்களை இழந்துள்ளேன். ஆனால், யார் சொத்துக்கும் ஆசைப்பட்டது கிடையாது. மனதறிந்து யாருக்கும் துரோகம், தீங்கு இழைத்தது கிடையாது. பிறரைக் கெடுத்து வாழாமல், கொடுத்தே வாழ்ந்த என்னிடம், மருமகள் உருவில் விதி விளையாடுகிறது. மற்ற பிள்ளைகளை விட அதிகப் பங்கு தர முன் வந்த நிலையிலும், என்னைத் திட்டுகின்றனர்.
கேவலமான அவர்களது வசவுகளால், 'வாழ்ந்தது போதும்...' என்று எண்ணத் தோன்றுகிறது. கடவுளுக்கே அடுக்காத, சகிக்க முடியாத அவர்களது செய்கைகள் மற்றும் வசவுகளினால் என் பசி, ருசி, தூக்கம் தொலைந்து, 10 ஆண்டுகளாயின. என் மகன் கூறுகிறான்... அவனது மனைவிக்கு நாங்கள் பணிவிடை செய்தால், மாதம் ஒரு லட்சம் ரூபாய் எங்களுக்கு சம்பளமாகத் தருவானாம்; எங்களுக்கு ஸ்ட்ரோக் வந்தால் மகிழ்ச்சி கொள்வானாம்; தங்கையின் பிள்ளைகளை ஆள் வைத்துக் கடத்துவானாம். மருமகள் பேசுவதோ... எல்லாமே ஏகவசனம் தான். மூத்த குடிமகனாகிய நான் புகார் தந்தால், அதன் வீரியம் அதிகமாக இருக்கும் என்பதால், இதுவரை எங்கும் புகார் தரவில்லை. இந்த நல்லெண்ணம் அந்தப் பெண்களுக்கும் புரியவில்லை; சட்டவிரோதமாக லண்டனில் இருக்கும் என் மகனுக்கும் தெரியவில்லை.
பழிச் சொற்களுக்கு அஞ்சுவது தான் என் துன்பங்களுக்குக் காரணம். என் எதிரிகளுக்குக் கூட இப்படிப்பட்ட மகனும், மருமகளும் வாய்க்கக் கூடாது. என் நேர்மையை இவர்கள் களங்கப்படுத்தி, காயப்படுத்தி விட்டனர். அவர்களது நாவுகளிலிருந்து உதிர்ந்த விஷக்கணைகள் போன்ற பொய்களால், நான் வெந்து, நொந்து போய் உள்ளேன். நான் எதிர்பார்ப்பது மன நிம்மதியே தவிர, வேறு எதுவுமில்லை.
என் மனக்காயங்களை ஆற்றும் ஒரு நல்ல மருந்தை, தீர்வை, தீர்ப்பை தங்களிடமிருந்து எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்.
— நன்றியுடன்,
உலகின் நம்பர் ஒன் துரதிர்ஷ்டசாலி.
உலகின் நம்பர் ஒன் துரதிர்ஷ்டசாலியாக தன்னை அறிவித்துக் கொள்ளும் அன்புள்ள அப்பாவிற்கு,
உங்கள் கடிதத்தை படித்ததும், உங்களைப் பற்றி எனக்கொரு அபிப்ராயம் தோன்றுகிறது. அதை சொல்வதற்கு மன்னிக்கவும். உங்களின் குணங்கள் மற்றும் நடத்தையை பற்றி, அதிகமாக தற்பெருமை அடித்துக் கொள்கிறீர்களோ என, தோன்றுகிறது. உங்களுக்கான பிரச்னைகளை பூதக் கண்ணாடி வைத்து பார்த்து பதட்டப்படுகிறீர்களோ என நினைக்கிறேன். உலகில் நம்மை தவிர, அனைவரும் அயோக்கியர்கள் என்கிற நெகடிவ் சிந்தனையும், உங்களிடம் மண்டிக் கிடக்கிறது.
உங்களின் கையெழுத்து அச்சடித்தது போல இலக்கண சுத்தமாய் இருக்கிறது. 75 வயதில் முழு செயல்பாட்டுடன், ஆரோக்கியமாய் இருக்கிறீர்கள் என யூகிக்கிறேன். இறைவன் உங்களை முதுமையிலும் ஆரோக்கியமாய் இருக்க அருள் பாலித்துள்ளானே அதற்காக சந்தோஷப்படுங்கள்.
முதிய வயதில் நீங்கள் அடுத்தவரின் கைகளை எதிர்பாராமல், போதிய பென்ஷனால், திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள். வாடகை வீட்டில் உழலாமல், சொந்த வீட்டில் இருக்கிறீர்கள். அது, மூத்த மகனின் குடும்பத்தின் கண்களை உறுத்துகிறது.
ஒரு மருமகள் சுயநல பணத்தாசை பேயாக இருந்தாலும், மற்ற இரு மருமகள்கள் உங்களுக்கு அனுசரனையாக இருப்பது ஆறுதலான விஷயம்.
தந்தையின் சொத்துகளுக்காக மகன் மற்றும் மகள்கள் கட்டிப்புரண்டு சண்டையிடும் இக்காலத்தில், உங்களின் மூத்த மகனை தவிர, மற்ற இரு மகன்களும் உங்களை துன்பப்படுத்தாமல் இருப்பது நல்ல விஷயம். உங்கள் மனைவி உங்களுடன் இருந்து, சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்கிறார். திருமணமான மகள் வீட்டில் நீங்களும், உங்கள் மனைவியும் ஓசி சோறு தின்னவில்லை. கண்ணியமாக, 'பேயிங் கெஸ்ட்'டாக வாழ்கிறீர்கள்.
உங்கள் கடிதத்தில், உங்கள் மருமகளையும், அவளது தாயையும் முழுக்க முழுக்க குற்றம் சாட்டியுள்ளீர்கள். நீங்கள் குற்றம் சாட்ட வேண்டியது உங்கள் மகன் மீது. அவனை நீங்கள் சரியாக வளர்க்கவில்லை. அவன் பொறுப்பில்லாதவன்; பொண்டாடி தாசன். 1992லேயே மூத்த மகனுக்காக, 40 லட்சம் இழந்துள்ளேன் என்றுள்ளீர்கள். எதனால், மகனின் எச்செய்கையினால் இழந்தீர்கள் என, குறிப்பிடவில்லை. சட்ட விரோதமாக லண்டனில் தங்கியுள்ளான் என்றுள்ளீர்கள். எவ்விதமான சட்ட விரோதம் என்பதையும் குறிப்பிடவில்லை.
'செய்வினை செய்வேன், மனைவியை தீக்குளிக்க சொல்வேன், மனைவியின் தாலியை வீட்டு வாசலில் வீசுவேன், மனைவியை கொன்று, உன் மீது பழி போடுவேன்...' என உங்கள் மகன் கூறுவதும், 'வரதட்சனை வழக்கு போடுவேன், என் தந்தைக்கு காபியில் விஷம் வைத்து கொன்ற மாதிரி, உன்னையும் கொல்வேன்...' என மூத்த மருமகள் பேசுவதும் உச்சகட்ட வக்கிரம்.
உங்களின் சுய சம்பாத்தியம் முழுவதையும் நீங்கள் குறிப்பிட்ட விகிதாசாரத்திலேயே பிரித்துக் கொடுங்கள். தொடர்ந்து உங்கள் மூத்த மகன், மருமகள் குடும்பம் தொந்தரவு செய்தால், சிறிதும் ஈவு, இரக்கம் பாராமல் காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வ புகார் கொடுங்கள். புகார் கொடுப்பதில் முந்திக் கொள்ளுங்கள். முதலில், புகார் கொடுப்போர் பக்கம் தான் நியாயம் இருக்கும் என, காவல் நிலையம் கருதும்.
சொந்தமாய் வீடு இருந்தால் தானே உங்களை வெளியேற்றுவர்; வாடகை வீட்டில் குடியேற்றுவர். பேசாமல் வீட்டை விற்று, பணத்தை எடுத்துக் கொண்டு நீங்களும், உங்கள் மனைவியும் இந்தியா முழுக்க ஆன்மிக சுற்றுலா சென்று வாருங்கள்.
மாதம் ஒருமுறை அனாதை இல்லங்களுக்கு சென்று, ஒருவேளை உணவை, 'ஸ்பான்சர்' செய்யுங்கள்.
உலகில் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் கலந்து தான் இருப்பர். அன்னப்பறவை தண்ணீரை பகுத்து, பாலை அருந்துவது போல, நல்ல மனிதர்களை நட்பால், உறவால் துய்த்து பரவசப்படுத்துங்கள்.
-— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.