கடந்த, 2011ல் குற்றாலம் வந்த வாசகர்களில் ஒருவர் டாக்டர் ரம்யா; கடலூரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, சாதாரண பள்ளியில் படித்து, மெரிட்டில்
எம்.பி.பி.எஸ்.,எம்.டி(மகப்பேறு மருத்துவம்)முடித்தவர். அத்துடன், வேலூர் சி.எம்.சி.,யில், 'பெல்லோஷிப் ரீபுரோடக்டிவ் மெடிசின்' என்ற சிறப்பு படிப்பையும் படித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான குழந்தை இல்லா தம்பதியினரின் புன்னகைக்கு காரணமாக இருக்கும் இவர், தற்போது சென்னையில் வசிக்கிறார்.
நினைவு தெரிந்த நாள்முதல் புத்தகமும், படிப்புமாக இருந்தவருக்கு ஒரு மாறுதல் மற்றும் ஓய்வு தேவைப்பட்ட போது தான், குற்றால டூர் வாய்ப்பு அமைந்தது. முதல் முறையாக குற்றாலத்தை அவ்வளவு சந்தோஷமாக அனுபவித்த இவர், அந்த சந்தோஷம் இனி எங்கு போனாலும் கிடைக்காது என்று இப்போதும் சொல்கிறார். இவருடன் இவரது தாயார் மலர்க்கொடி கலந்து கொண்டார். இவர், பழைய திரைப்பட பாடல் ரசிகை.
அந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் ஆர்னிகா நாசருடன், சிதம்பரத்தைச் சேர்ந்த பல் டாக்டர் ராமசாமி தான், பஸ்சில் முதல் பாடலைப் பாடி சந்தோஷத்தை ஆரம்பித்து வைத்தவர்.
பர்கூரில் இருந்து வந்திருந்த வாசகர் ராபர்ட், 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி...' என்ற ஒரே வரியை பலவித மெட்டில் பாடி அசத்தினார். அவரைத் தொடர்ந்து இன்னொரு வாசகரான சுப்பிரமணியன் பெண் குரலில், 'ஒவ்வொரு பூக்களுமே...' என்ற பாடலைப் பாடி பாராட்டுகளைப் பெற்றார்.
இப்படி ஒவ்வொருவராக பாடிக்கொண்டு வரும் போது தான், மலர்க்கொடியின் கைக்கு, 'மைக்' சென்றது. 'ஐயோ... அம்மாவ பாடச் சொல்லாதீங்க...' என்றார் டாக்டர் ரம்யா. 'ஏம்மா...' என்றதும், 'நான் சொன்னா கேட்க மாட்டீங்க, அனுபவியுங்க...' என்றார்.
அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருந்த வாசகி மலர்க்கொடி, 'மைக்'கைப் பிடித்து எழுந்தவர் ,'ம்கூம்' என்று கனைத்ததுமே பஸ்சுக்குள் பயங்கர நிசப்தம்.
'நாங்க புதுசா ...ஏய்... நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... நல்லா பாட்டு படிக்க வரும் ஜோடிதானுங்க. ஏய்ய்ய் டமுக்கடிப்பான் டியோலா டமுக்கடிப்பான் டியாலோ ஏ... சிங்கா...' என்று அவருக்கு தெரிந்த ராகத்தில் உச்சஸ்தாயில் பாடியவர், ஒரு நிமிடம் நிறுத்தி, 'நான் ஏ...சிங்கா என்றதும், எல்லாரும் ஏ... சிங்கின்னு சொல்லணும்...' என்று உத்திரவிட்டவர், மீண்டும், 'நாங்க புதுசா...' என்று ஆரம்பித்து, 'ஏ... சிங்கா...' என்ற இடத்தில் நிறுத்த, பஸ்சில் இருந்த அனைவரும், 'ஏ...சிங்கி...' என்று சந்தோஷமாக குரல் எழுப்பினர்.
குற்றாலம் ரிசார்ட்சில் இறங்கும் போது, வழி நெடுக பாடியதில் அனைவருக்கும் தொண்டை வறண்டு போயிருந்தது. பஸ் தங்குமிடத்தை அடைய பத்து நிமிடம் இருக்கும் போது, கீதா மெஸ் சமையல் கலைஞர் பாப்லாலிடம், 'பத்து நிமிடத்தில், 40 லெமன் ஜூஸ் தயார் செய்துடுங்க...' என்று சொன்னதன் அடிப்டையில், வாசகர்கள் பஸ்சைவிட்டு இறங்கியதுமே ஒரு அண்டா நிறைய லெமன் ஜூசுடன் வரவேற்றார்.
அந்த ஆண்டு வந்திருந்த அழகு கலை நிபுணர் மஞ்சுளா ரவீந்திரன்; விரைவில் திருமணமாகப் போகும் வாசகி மாலதிக்கு, மணப்பெண் அலங்காரம் செய்து காட்டி அசத்தினார். 'அகம் அழகாக இருந்தால், முகம் எப்போதுமே அழகாக இருக்கும்...' என்று சொல்லி, அழகு கலை டிப்ஸ்கள் கொடுத்தவர், கையோடு கொண்டு வந்திருந்த பலவித அழகு சாதனங்களை வாசகியருக்கு பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.
இவரைப் போலவே, கடந்த, 2012-ல் விழுப்புரத்தில் இருந்து வந்து கலந்து கொண்ட வாசகி ஷீபா, ஆரம்பத்தில் எதுவுமே தெரியாதது போல இருந்தார். ஆனால், குற்றாலம் வந்த இரண்டாவது நாள் அவர் நடத்திய பேச்சரங்கம் இருக்கிறதே... யாராலும் மறக்க முடியாது.
அந்த ஆண்டு டூரில் கலந்து கொண்ட வாசகர்கள் போலவும், பிரபலங்கள் போலவும், பல குரலில் பேசி, அவர்களைப் போலவே உடல்மொழி காண்பித்து, நடித்து பாராட்டைப் பெற்றார்.
இரவு, 10:00 மணிக்கு சைவ, அசைவ உணவை ஒரு பிடி பிடித்து, மசாலா பால் மற்றும் பழங்களை உள்ளே தள்ளிவிட்டு, 'வெற்றிலை போட்டால் நல்லா செரிக்கும்...' என்று சொன்னதை அடுத்து, வெற்றிலை போட்டு அசைய முடியாமல் அமர்ந்திருந்தவர்களை பார்த்து, 'அக்கா, அண்ணே... அப்பிடிக்கா உட்கார்றதுக்கு பதிலா, இப்பிடிக்கா உட்கார்றது...' என்று சொல்லி, தன்னைச்சுற்றி வட்டமாய் கூட்டம் சேர்த்த ஷீபா, அதன்பின் செய்த இனிய கலாட்டாவில் இரவு, 2:00 மணிக்கு மேலாகிவிட்டது. சிரித்து சிரித்து அனைவருக்கும் மீண்டும் பசி வந்துவிட்டது.
இதை உணர்ந்த பாப்லால், 'இதோ ஐந்து நிமிடம்... எல்லாருக்கும் புரூட் சாலட் கொண்டு வர்றேன்...' என்று கொண்டு வந்து கொடுத்ததுடன், 'இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருங்க; ஐந்து நிமிடத்தில் இட்லி வெந்துரும்; பத்து நிமிடத்தில் இங்கே வந்துரும்...' என்றார்.
அந்த நேரம் யாருமே எதிர்பாராத, ஆனால் அனைவருமே எதிர்பார்த்திருந்த ஒருவர், என்ட்ரி கொடுத்தார். யார் அவர்? அடுத்த வாரம் சொல்கிறேன்.
— அருவி கொட்டும்.
குற்றாலமும், பாப்லாலும்...
இப்போதெல்லாம் ஒருத்தரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் சொன்னால், 'எனக்கு என்ன நாலு கையா இருக்கு...' என்று சொல்லி சுள்ௌன்று எரிந்து விழுவர். ஆனால், பாப்லாலிடம் பத்து வேலை சொன்னாலும் சிரித்துக் கொண்டே செய்வார்.
ஒருவர் என்ன வேலை செய்கிறார் என்பது முக்கியமல்ல; கொடுக்கப்பட்ட வேலையை எப்படி செய்கிறார் என்பதில் தான் அவரது பெயரும், பெருமையும் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு பாப்லால்!
குற்றால டூர் வாசகர்களுக்காக சமையல் செய்யும் திண்டுக்கல் கீதா மெஸ் சந்திரசேகர் தலைமையின் கீழ் செயல்படும் சமையல் பரிமாறும் கலைஞர் இவர். இவரது ஒழுக்கம் மற்றும் உழைப்பு காரணமாக, கீதா மெஸ் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டவர்.
கடந்த, 10 ஆண்டுகளாக டூருக்கு வந்து கொண்டிருக்கிறார். பாபுலால் என்பது தான் இவர் பெயர் என்றாலும், எல்லாரும் செல்லமாக அழைப்பது பாப்லால்!
டூரில் கலந்து கொள்ளும் அந்துமணியின் நண்பர்கள் முதலில் கேட்பது, 'பாப்லால் வருவார்ல...' என்பதுதான். அதுவும் அந்துமணியின் நண்பர் குணா, டூர் நடைபெறும் மூன்று நாளும் அதிகம் உச்சரிக்கும் பெயர் பாப்லால்! நேர நேரத்திற்கு மட்டுமல்ல, நேரங்கெட்ட நேரத்தில், நள்ளிரவு, 2:00 மணி குளியலை முடித்துவிட்டு வந்தாலும், 'பாப்லால்...' என, ஒரு குரல் கொடுத்தால் போதும், சிரித்துக் கொண்டே வந்து, சூடான சுவையான உணவை பரிமாறுவார்.
பந்தியில் அமர்ந்திருப்பவர்கள், சாம்பார், ரசம், பொறியல், கூட்டு என மாறி மாறி கேட்டாலும், அலுத்துக் கொள்ளாமல் கோபப்படாமல் சிரித்துக்கொண்டே, 'இதோ கொண்டு வந்துட்டேன்...' என்று ஓடி ஓடி சுறுசுறுப்புடன் பரிமாறுவார். டூர் வந்த முதல் நாளே தன் செயல்பாடுகளால் வாசகர் மனதில் சட்டென ஒட்டிக்கொள்வார்.
தொக்கேடு ஹவே(நல்லா சாப்பிடுங்க)ஆங்குர்வி கொலுவோ(இன்னும் கொஞ்சம் போடட்டுமா)ஹவுலியாவ்(எடுத்துட்டு வா)அவுடியோவ்(இதோ வந்துட்டேன்)என்று தமிழும், சவுராஷ்ட்ரா மொழியும் கலந்து பேசுவார்.
அந்துமணிக்கு தயிர் சாதமும், ஊறுகாயும் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு ஒவ்வொரு ஆண்டும் புதுசு புதுசான ஊறுகாய் செய்து வந்து, அதன் சிறப்பை சொல்லி பரிமாறுவார். அவரது அன்பால் ஈர்க்கப்பட்ட அந்துமணி, ஊர் திரும்புவதற்கு முன் பாப்லாலை கூப்பிட்டு பாசத்துடன் கட்டிப்பிடித்து, அவர் மொழியிலேயே, 'ஜீக்கு சொந்தோஷ்...' (மிகவும் சந்தோஷம்)என்று சொல்லி விடைபெறுவார்.
-எல்.முருகராஜ்