நல்வழியில் சென்றால்... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நல்வழியில் சென்றால்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜன
2015
00:00

'வேம்பின் இலையுள் கனியினும் வாழை தன் தீஞ்சுவை யாதும் திரியாதாம் - ஆங்கே
இனந்தீதெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது' என்பது நாலடியார். வேப்ப இலைக்குள் வைத்து பழுக்க வைக்கப்பட்டாலும் வாழைப் பழமானது, எப்படி தன் இனிப்பு சுவையை இழப்பதில்லையோ, அதைப் போன்றே நல் இயல்பு கொண்ட நல்லவர்கள், எக்குடியில் பிறந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் தீய வழியில் செல்லவோ, நிலை தடுமாறவோ மாட்டார்கள். அத்தகைய உத்தமர்களுக்கு, இறைவன் எப்போதும் துணையிருப்பான் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது:
சில நூற்றாண்டுகளுக்கு முன், மதுரையில் வாழ்ந்து வந்த தேவதாசியான மாணிக்கவல்லிக்கு, இரு பெண்கள் இருந்தனர். அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய அவர்கள், சொக்கநாதப் பெருமானையும், அன்னை மீனாட்சியையும் கணப் பொழுதும் மறக்காமல் வணங்கி வந்ததுடன், நக்கீரர் எழுதிய,'கயிலை பாதி, காளத்தி பாதி' எனும் பாடலை பாராயணம் செய்து, சிவ தியானத்திலேயே வாழ்ந்து வந்தனர். மறந்தும் அப்பெண்கள் தீய வழியை நாடவில்லை.
இதனால், தேவதாசியான மாணிக்கவல்லி, 'நம் பெண்களின் அழகுக்கு அவர்கள் நினைத்தால், இந்த ஊரையே வளைத்து போடலாம்; அதை விட்டு சாமி, கோவில், குளம்ன்னு இருக்கின்றனரே...' என்று நினைத்து, அவர்களை தீய வழியில் திருப்ப என்னென்னவோ செய்து பார்த்தாள்; முடியவில்லை.
அவர்கள் இருவருக்கும், கயிலைக்கு இணையான காளத்திக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால், ஒருநாள், அடியார்கள் போன்ற தோற்றத்தில் இருந்த இரு போலி அடியார்களின் பேச்சை நம்பி, அவர்களுடனும், உதவிக்கு, இரு பணிப் பெண்களுடனும் காளத்திக்கு புறப்பட்டனர்.
காளத்தியை நெருங்கும் போது, போலி அடியார்கள், கத்தியை எடுத்து நீட்டினர். அப்பெண்கள் இருவரும் பதறி, 'காளத்தி நாதா.. காத்தருள்...' என்று கதறினர். அப்போது, மலர் பறிக்க வந்த தொண்டர் போல் அங்கே வந்த சிவபெருமான், கள்ள அடியவர்களை அடித்து விரட்டினார்.
அவரிடம், பெண்கள் இருவரும், நடந்ததையெல்லாம் விவரிக்க, அவர், 'உங்களை திருக்காளத்தியில் சேர்க்கிறேன்...' என்று சொல்லி, அதன்படி காளத்தியில் சேர்த்து விட்டு மறைந்தார்.
பெண்களுக்கு, மெய் சிலிர்த்தது. 'கயிலை பாதி, காளத்தி பாதி' என்ற அந்தாதியை பாடியபடியே, காளத்திநாதர் சன்னிதியில் வணங்கி நின்றனர். அப்போது, சிவலிங்கத்தில் இருந்து, சிவப்பும், பச்சையும் கலந்த ஜோதி ஒன்று வெளிப்பட்டது. அப்பெண்கள் இருவரும் கைகளை கூப்பியபடியே, ஜோதியில் கலந்தனர்.
இதைக் கண்ட பணிப்பெண்கள் ஆச்சரியம் அடைந்தனர். அப்போது, 'பணிப் பெண்களே... இக்கன்னியர் இருவரும் முக்தி அடைந்தனர். நீங்கள் அவர்கள் பெயரால் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்...' என, அசரீரி கேட்டது. அதன்படியே செய்து, பணிப் பெண்களும் முக்தி பெற்றனர்.
நல்வழியில் செல்பவர்க்கு, எவராலும் எந்த தீங்கும் விளைவிக்க முடியாது.

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!
ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்
பார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன் மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே.
பொருள்: காக்கை கூட உணவு கிடைத்ததும், தன் இனத்தைக் கூவி அழைத்து, பகிர்ந்து உண்கிறது. அதைப் பார்த்தாவது, நாம் உணர வேண்டாமா... பசித்து வருபவர் யாராக இருந்தால் என்ன... எந்த பேதமும் பாராமல் உணவு கொடுங்கள். விருந்தினரை எதிர்பார்த்து, உபசரித்து உண்ணுங்கள். பழையதை வைத்துப் பாதுகாக்காதீர்கள்! அவசர அவசரமாக உண்ணாதீர்கள்; அடுத்தவர்களுக்குக் கொடுத்து உண்ணுங்கள்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X