சந்திப்பு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
சந்திப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜன
2015
00:00

அந்த மாணவர் சந்திப்புக்கு பின், இடிந்து போனான் சரணவன். தமிழ் வருட பிறப்பு அன்று, பழைய மாணவர்களின் சந்திப்பு நடந்தது. அன்றிலிருந்து அவன் சோகத்தின் பிடியில்!
இவனுடன் படித்த கணபதி, படித்து முடித்து, வேலை நிமித்தம் அமெரிக்கா சென்றான். திடீரென்று, அமெரிக்காவில் இருந்தே, உடன் படித்த மாணவர்கள், சிலரின் கைபேசி எண்களை சேகரித்து, ஒவ்வொருவருடனும் பேசி, அவர்களுடன் தொடர்பில் இருந்த, மற்ற நண்பர்களின் எண்களை சேகரித்து, தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பள்ளியில் அனைவரையும் சந்திக்க வைத்து விட்டான். ஆனால், அவனால் மட்டும் அமெரிக்காவில் இருந்து வர முடியவில்லை.
ஒருவன் தமிழ்ப் புத்தாண்டை தெரிவு செய்ய, இருவர் பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியரை சந்தித்து, தாங்கள், 1980ல் இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் என்றும், புத்தாண்டு அன்று பள்ளியில் சந்திக்க விரும்புவதாகச் சொல்ல, அவர் உடனே அனுமதி வழங்கி விட்டார்.
முப்பது, முப்பதிரண்டு ஆண்டுகளுக்கு பின் சந்தித்ததன் விளைவு, 'ஏம்ப்பா, 1980ல உன் பையன் இங்கே, பத்தாம் வகுப்பு படிச்சானா?' என்று கேட்க வேண்டிய அளவுக்கு, சிலரின் உடல் மாற்றம்.
'நீ என்ன செய்றே, நீ என்னடா செய்றே?'ன்னு ஒவ்வொருவனும் அடுத்தவர்களை கேட்க, ஒருவன், 'ஐ.ஐ.டி.,யில் புரபசர், மூன்று தொழில் அதிபர்கள்; ஆறு பேர் இன்ஜினியர்கள்; ஐந்து அரசு ஊழியர்கள், நான்கு பேர் மருத்துவர்கள். கேட்கக் கேட்க, சரவணனுக்கு மனசு வேதனையாக இருந்தது. சக மாணவர்கள் வாழ்வில் முன்னேறி, இன்று நல்ல நிலையில் இருக்கின்றனரே என்ற பொறாமை அல்ல; தான், ஒரு சிறிய கம்பெனியில் சாதாரண தொழிலாளியாகவே இருக்கிறோமே என்பதனால் ஏற்பட்ட வேதனை.
அன்று சரவணனால், எல்லாருடனும் சகஜமாக பேச முடியவில்லை. அந்தஸ்து குறுக்கிடுவதாக, இவன் மனதே இவனை தடுத்தது. அவனால் அங்கு நிற்க கூட முடியவில்லை. தெரியாமல் வந்து விட்டோமோ என்று நினைக்க ஆரம்பித்து விட்டான். உடன் படித்த மாணவர்களை, ௩௦ ஆண்டுகளுக்கு பின், ஆசை ஆசையாய் பார்க்க வந்திருந்தான். ஆனால், ஒவ்வொருவர் செய்யும் தொழிலுடன் தன் தொழிலை மனம் ஒப்பிட, மனதுக்குள் குறுகினான். இவனோடு சரி சமமாக மூர்த்தி மட்டுமே இருந்தான்.
'நீ என்னப்பா செய்ற...' என்று மூர்த்தியை கேட்டபோது, 'ப்ளம்பிங்' வேலை செய்றேன்; யாராவது கூப்பிட்டா போய் செய்வேன். அஞ்சு, பத்து வரும்; பாதி நாள் வேலை இருக்காது. ஏதோ ஓடிக்கிட்டிருக்கு...' வார்த்தைகளை விழுங்கி, கூனி குறுகி சொன்னான். அவனாலும் எல்லார் முன்பும் கம்பீரமாக சொல்ல முடியவில்லை.
இரண்டரை மணி நேரம், பள்ளியிலேயே அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவ்வளவு நேரமும், மூர்த்தி அருகிலேயே இருந்தான் சரவணன். ஒவ்வொருவராக கிளம்ப அவர்களுடைய கார்களும், டூவீலர்களும் விட்ட புகையை விட, இவன் பெருமூச்சு அனலாக இருந்தது.
'சே... இத்தனை ஆண்டுகளாக வாழ்க்கையில முன்னேறணும்ங்கிற நெனப்பே இல்லாம, ஒரு கம்பெனில வேலை கிடைச்சதும், வேலைக்கு போறது, உழைக்கறது, சம்பளம் வாங்கறது, மாசத்துக்கு ஒரு நாள், ரெண்டு நாள் குடிக்கறதுன்னு செக்கு மாடு போல இருந்துட்டோமே...' என, எண்ணி வருந்தினான்.
அன்று, வீட்டுக்கு வந்து வருத்தப்பட ஆரம்பித்தவன் தான், இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் நிறுத்தவே இல்லை. வேலையிலும் நாட்டம் இல்லை. கணவன், மனைவி இருவர் உழைத்தும் இரு குழந்தைகளின் படிப்புக்கும், வாய்க்கும், வயிற்றுக்கும் தான் இருந்தது.
அன்று, உடம்பு சரியில்லை என, விடுமுறை எடுத்து வீட்டில் இருந்தான் சரவணன். பிள்ளைகள் பள்ளிக்கும், மனைவி வேலைக்கும் சென்று விட, கூரையை வெறித்தபடி படுத்திருந்தவனின் மனதில், பள்ளியில் சந்தித்தபோது, ஒருவருக்கொருவர் மொபைல் எண்களை, பரிமாறிக் கொண்ட போது, மூர்த்தியும், இவனும் தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக் கொண்டது நினைவுக்கு வந்தது. உடனே, கைபேசியை எடுத்து, மூர்த்திக்கு டயல் செய்தான். 'ரிங்' போனதே தவிர, அவன் எடுக்கவில்லை. சிறிது நேரத்தில், மூர்த்தியிடமிருந்து அழைப்பு.
''சாரி சரவணா... பிசியா இருந்தேன். இப்பவும் வேலை தான் செய்துட்டு இருக்கேன். ஒரு மணி நேரம் கழிச்சு கூப்பிடவா,'' என்று கேட்டான். 'சரி' என்று சொல்லி, மொபைலை வைத்து விட்டு, உறங்க முயற்சித்தான்.
சொன்னது மாதிரியே ஒரு மணி நேரம் கழித்து, மொபைலில் அழைத்தான் மூர்த்தி. ''ஹலோ சரவணா... எப்படி இருக்க?''
''ம்... நல்லயிருக்கேன். உன்ன பாக்கலாமா?''
''சந்தோஷமா. ஆமா, இன்னக்கி நீ வேலைக்கு போகலயா?''
''போகலப்பா. சரி...எங்க வந்தா பாக்கலாம்.''
''கீழ்க்கட்டளை, மகாலட்சுமி காலனியில, செகண்ட் மெயின் ரோட்ல வந்து போன் செய்.''
''அங்கே என்ன வேலை?''
''நேர்ல வா பேசலாம்; எப்ப வர்றேன்னு சொல்லு...''
''இப்ப வரலாமா?''
''தாராளமா,'' மூர்த்தி சொல்ல, ஒரு மணி நேரத்தில் மூர்த்தி சொன்ன தெருவை அடைந்து, 'கணேஷ் இண்டஸ்ட்ரீஸ்' வாசலை அடைய, சிரித்த முகத்துடன் நின்றிருந்தான் மூர்த்தி. ''வா சரவணா,'' என்று கையை பிடித்து, அன்பாக அழைத்துச் செல்ல, சரவணனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ''என்னப்பா வேற வேலை ஏதாவது கிடைச்சிடுச்சா?'' என்று கேட்டபடி, அவனை பின் தொடர்ந்தான். கணேஷ் இண்டஸ்ட்ரீசின் கேன்டினுக்குள், சரவணனை அழைத்துச் சென்று,'' என்ன சாப்பிடுற?'' என்று கேட்டான்.
''ஒண்ணும் வேணாம்பா சாப்பிட்டேன்.''
''சூடா ரெண்டு டீ கொண்டு வா ராதிகா,'' என்று சொல்லி விட்டு, இவனை பார்த்தான் மூர்த்தி.
''அப்புறம் சொல்லு சரவணா... எதுக்கு திடீர்ன்னு என்ன பாக்கணும்ன்னு சொன்னே...ஏதாவது முக்கியமான விஷயமா,'' என்றான்.
''நீ பிளம்பிங் வேலை பாக்கறேன்னு சொன்னீயே... இப்ப இங்க வேலை கிடைச்சிடுச்சா?'' என்று கேட்டான் சரவணன்.
''இது என்னோட கேன்டீன்பா,'' என்று மூர்த்தி சொல்ல, அதிர்ச்சியுடன் கேன்டீனை சுற்று முற்றும் பார்த்தான். சுத்தமாக இருந்தது. நான்கைந்து தொழிலாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
''என்னது உன் கேன்டீனா... அப்ப அன்னிக்கு ஸ்கூல்ல, நாம சந்திச்சப்ப பொய் சொன்னியா?''
''அப்ப சொன்னதும் உண்மை; இப்ப சொல்றதும் உண்மை,''குதூகலமாக சொன்னான் மூர்த்தி.
குழப்பம் நீங்கி, ஆச்சரியத்துடன், ''எப்படிப்பா ரெண்டே மாசத்துல, ஒரு கேன்டீன் வைக்குற அளவுக்கு... என்ன செஞ்ச?''
''நம்ம ஸ்கூல் சந்திப்பிற்கு பின், 'நம்ம கூடப் படிச்சவங்க எல்லாம் வாழ்க்கைல எவ்வளவோ உயரத்துல இருக்க, நாம இப்படி அன்றாட பொழப்புக்கே அல்லாடிக்கிட்டு இருக்கோமே'ன்னு, அன்னிக்கு ராத்திரி தூங்க முடியல. திடீர்ன்னு,'நாம முயற்சி செய்து பாத்தா என்ன'ன்னு ஒரு யோசனை.
''காலையில எழுந்ததும் செல்வமணி வீட்டுக்கு போனேன். அவன் தானே, எல்லாரோட தகவல்களையும் வச்சிருக்கான். எல்லாருடைய மொபைல் எண்ணையும் வாங்கி, அதுல நாலு பேருக்கு போன் செஞ்சு, நேர்ல பாக்கணும்ன்னு சொன்னேன். ரெண்டு பேரு, வெளியூர் போயிருக்கிறதா சொன்னாங்க... இந்த, கணேஷ் இண்டஸ்ட்ரீஸ் யாரோடது தெரியுமா... நம்ம வரதராஜனோடது. 'வந்து பாக்கட்டுமா'ன்னு கேட்டேன்; 'சரி'ன்னு சொன்னான்.
''உடனே, அவனை வந்து பாத்து, என் மனசுல இருந்த எண்ணத்தை சொன்னேன்.
என்னால முடியுமான்னு தயங்கினான். அவனை கெஞ்சிக் கூத்தாடி, 'நண்பன், கூட படிச்சவன்கற உரிமையில கேட்குறேன்... எனக்கு உன் கம்பெனியில, கேன்டீன் வைக்க அனுமதி கொடு'ன்னு சொன்னேன். 'என்ன திடீர்ன்னு இந்த எண்ணம்'ன்னு கேட்டான்.
''நானும் வாழ்க்கையில முன்னேறணும்ன்னு மனசுல வைராக்யம் வந்ததுனால தான்; தயவு செஞ்சு, எனக்கு அனுமதி கொடுன்னு கேட்டேன். அவனும் ஒத்துக்கிட்டான். உடனே, என் மனைவி கழுத்துல இருந்த கொஞ்ச நஞ்ச நகைகளை வித்து, கேன்டீன் வைக்க வேண்டிய சாமான்களை தயார் செய்ய, பத்தாததுக்கு வரதராஜனே மீதி பணம் கொடுத்து உதவினான். அவன்கிட்ட வாங்கன கடனை திருப்ப கொடுக்கணும்ன்னு இப்ப ராப்பகலா உழைச்சுக்கிட்டிருக்கேன்.
''வரதராஜன் கேட்டுக்கிட்ட மாதிரி டிபன், காப்பி, உணவோட தரம் நல்லா இருக்கணும்ன்னு பாத்து பாத்து செய்றேன். ஒரு மாசத்துலயே கேன்டீன் கொஞ்சம் சூடு பிடிச்சதும், என் மனைவியை அவ வேலையை விட சொல்லி, இங்க வரச் சொல்லிட்டேன். டீ கொண்டு வர சொான்னேனே... அவ தான் என் மனைவி ராதிகா.
''தொழிலாளர்கள் திருப்தியா இருக்காங்க. வரதராஜன், நான் நல்லா கேன்டீன் நடத்தறதா பாராட்டறான். இப்ப கம்பெனி விஷயமா, வெளியூர் போயிருக்கான். நல்லா உழைச்சு இன்னும், இந்த கேன்டினை சிறப்பா முன்னேத்தணும். இப்பத் தான் எனக்கு, நாமும் வாழ்க்கையில முன்னேற ஆரம்பிச்சுட்டோம்ன்னு, மனசுல ஒரு தெம்பு வந்திருக்கு,'' என்று கேன்டீன் ஆரம்பித்த கதையை, உணர்ச்சி மயமாக சொல்லிக் கொண்டே போனான்.
அவனையே வைத்த கண் மாறாமல் பார்த்தவனை, ''என்ன சரவணா... ஏன் என்னவோ போல ஆயிட்ட,'' என்று கவலையோடு கேட்டான் மூர்த்தி.
சில நொடிகளில் சுதாரித்து, ''நீ கிரேட்பா; நான் வேஸ்ட்! அன்னிக்கு நாம எல்லாரும் சந்திச்ச பின், நம்ம கூட படிச்சவங்க எல்லாரும் பெரிய பெரிய ஆளா இருக்காங்க. நாம சாதாரண நிலையில இருக்கோமேன்னு நினைச்சு இப்ப வரைக்கும் அந்தக் கவலையில, சாப்பிட, தூங்க முடியல. ஆனா, நீ அடுத்த நாளே வரதராஜனை வந்து பாத்ததா சொல்ற...'' என்று சரவணன் முடிக்கும் முன்...
''ஆமாம் சரவணா. ஆண்டுக் கணக்கா நாட்களை வேஸ்ட் ஆக்கிட்டோம். இனி ஒரு நொடி கூட தாமதிக்க கூடாதுன்னு வெறி வந்துருச்சு. அதனால் தான் அன்னிக்கே வந்து, வரதராஜனை பாத்து, சம்மதிக்க வச்சு இன்னும் முன்னேறணும்ன்னு வெறியோட உழைச்சுக்கிட்டு இருக்கேன். நாளுக்கு நாள், அந்த வெறி அதிகமாகிக்கிட்டே இருக்கே தவிர, குறையல,'' என்றவனின் கண்களில், வெற்றி பளிச்சிட்டது.
''நம்ம நண்பர்கள்ல எல்லாரையும் விட, உன்னை பாத்தா தான், பொறாமையா இருக்கு. கடந்த காலத்தை நினைச்சு வருத்தப்படாம, அதுல செஞ்ச தவறுகளை ஈடு கட்டுற மாதிரி, வெறியோடு யோசிச்சு, நல்ல வழியை தேடிக்கிட்டே... நான் இவ்வளவு நாளும் வருத்தப்பட்டுக்கிட்டே உட்கார்ந்துட்டேன். உன்னை பாக்கும் போது, எனக்கும் தெம்பு வருது. அப்புறம், ஒருநாள் உன்ன வந்து பாக்குறேன்; வாழ்க்கையில கொஞ்சமாவது முன்னேறினவனா,'' சொல்லி விட்டு, மூர்த்தியிடம் விடைபெற்று, தன்வீடு நோக்கிச் செல்ல ஆரம்பித்தவன், இந்த இரண்டு மாதங்கள் வீணடித்ததை பற்றி கவலைப்படாமல், முன்னேற என்ன வழி என்று யோசிக்க ஆரம்பித்தான்.

வெ.ராஜாராமன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X