பஞ்சாப் மாநிலம் பதிந்தா பகுதியைச் சேர்ந்த ஹர்பிரித் தேவுக்கு, சின்ன வயதில் இருந்தே, காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) ஓட்ட வேண்டும் என்ற ஆசை. இளைஞரானதும், அந்த ஆசை விஸ்வரூபம் எடுத்தது. ஆள் இல்லாத சாலைகளில் காரை பின்னோக்கி செலுத்தி, கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். நன்றாக பயிற்சி பெற்றதும், முக்கிய சாலைகளிலும் காரை பின்னோக்கி ஓட்டிப் பழகினார். வாடகை கார் ஓட்டும் இவர், வாடிக்கையளார்கள் காரில் ஏறுவதற்கு முன்பே, இதுகுறித்து கூறி விடுகிறார். தன் காரிலும் அதை தெளிவாக எழுதி வைத்துள்ளார். காரை பின்னோக்கி செலுத்துவதற்கான அனுமதியை, பஞ்சாப் மாநில சாலை போக்குவரத்து அலுவலகம் இவருக்கு அளித்துள்ளது. மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பின்னோக்கி காரை செலுத்தும் இவருக்காக, அந்த காரின் கியர் சிஸ்டத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹர்பிரித் கூறுகையில், 'என் வாழ்நாள் முழுவதும் காரை பின்னோக்கி தான் ஓட்டுவேன்; இதை லட்சியமாகவே வைத்துள்ளேன்...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.