வரும் 2017 ஆம் ஆண்டில், இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, அமெரிக்க பயனாளர்களைக் காட்டிலும் அதிகமாக, உலக அளவில், முதல் இடம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வரும் மொபைல் சாதனங்கள் வழி இணையப் பயன்பாடு இதனை உறுதி செய்துள்ளது. இந்தியாவில், ஸ்மார்ட்போன் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள், எந்த எதிர்பார்ப்பினைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. இதனால், மொபைல் வழி இணையப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் வழி இணையப் பயன்பாடு, இந்தியாவில் அந்த அளவிற்கு இல்லை.
மொபைல் வழி இணையப் பயன்பாட்டிற்கான செலவு, 2013 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டில், 36% உயர்ந்துள்ளது. இதனால், பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஸ்கைப் மற்றும் லைன் போன்ற சேவைகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் இந்தியாவில் உயர்ந்து வருகிறது.
ஏற்கனவே, பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடம் பெற்றுள்ளது. தற்போது இந்தப் பிரிவில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியினால், 2017 ஆம் ஆண்டில், அமெரிக்காவினை மிஞ்சும் வகையில், பயனாளர் எண்ணிக்கை உயரும் வாய்ப்புகள் உள்ளன. நடப்பு 2015 ஆம் ஆண்டில், உலக அளவில், நூறு கோடி பேர், இணையத்தைத் தங்கள் மொபைல் சாதனங்களில், மாதத்தில் ஒரு முறையாவது பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில், 10 கோடி பேர், புதியதாக மொபைல் சாதனங்கள் வழி, பேஸ்புக் பயனாளர்களாகத் தங்கள் அக்கவுண்ட்டினைத் தொடங்குவார்கள். நடப்பு 2015 ஆம் ஆண்டில், மொபைல் இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை அமெரிக்காவில், 12.31 கோடியைத் தொடும். இந்தியாவில் அது 10.15 கோடியை எட்டும். 2017ல், இந்தியாவில் இது 14.59 கோடியாக உயரும்.
இன்றைய நிலவரப்படி, உலக அளவில், பேஸ்புக் பயனாளர்கள் எண்ணிக்கை 135 கோடியாக உள்ளது. இதில் 86.4 கோடி பேர் தினந்தோறும் பேஸ்புக் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இவர்களில் 11.2 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். இதில், 9.9 கோடி பேர், தங்கள் மொபைல் சாதனங்களின் மூலம், இணையத்தை மாதம் ஒருமுறையாவது தொடர்பு கொள்கின்றனர். தினந்தோறும் பயன்படுத்துபவர்கள் 4.5 கோடி பேராக உள்ளனர்.