யாரும் எதிர்பார்க்காத வகையில், மைக்ரோசாப்ட். விண்டோஸ் 10 அறிமுக நிகழ்வில், ஹோலோ லென்ஸ் (HoloLens) குறித்து அறிவித்தது. ஹோலோ லென்ஸ் என்பது தலையில் அணிந்து பார்க்க வேண்டிய ஒரு சாதனம். விண்டோஸ் 10 இயக்கத்தை இதன் வழியாகப் பார்க்கையில், நம் நிகழ் உலகமும், கற்பனையான மாயை உலகமும் இணைந்து காட்சிகளை வழங்கும். எடுத்துக் காட்டாக, செவ்வாய் கிரகம் குறித்து கம்ப்யூட்டரில் இயக்குகையில், இதன் வழியே பார்த்தால், நாம் அதன் பரப்பில் நடந்து சென்று, அனுபவிக்கும் உணர்வினைப் பெறுவோம். நம் நிகழ் உலகின் மேலாக, டிஜிட்டல் ஹோலோகிராம் உலகம் நமக்குக் காட்டப்படும். நாம் காணும் நிகழ்வு, சாதாரணமாக நாம் பார்க்கும் ஸ்கைப் விண்டோவாகவும் இருக்கலாம்; முப்பரிமாண மாடல் பொருளாகவும் இருக்கலாம். எந்தப் புதிய தொழில் நுட்பத்தின் விளைவையும் எழுத்தில் விளக்குவது எளிதல்ல; அதனை உணர்ந்து பார்த்தால் தான், அதன் முழு தாக்கத்தினையும் உணரலாம். ஹோலோ லென்ஸ் சாதனத்திற்கு இது முற்றிலும் பொருந்தும்.