கணினியில் விளையாடுவது, இணையத்தில் வீடியோக்கள் பார்ப்பது, தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போன்றவை பிரச்னைகளை உண்டாக்கினாலும், இயல்பு வாழ்க்கையில் அவை ஏற்படுத்தும் ஆதிக்கம் குறைவே. ஆனால், அதீத சமூக வலைதள ஈடுபாடு, ஒருவரின் மன ஆரோக்கியத்தையும், உடல்நலத்தையும் அதிகம் பாதிக்கும்.
சமீபகாலமாக, மாணவர்களின் படிப்பு, தொழிலாளர்களின் பணி ஆகியவற்றில் பெரும் பாதிப்பையும், பின்னடைவையும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஏற்படுத்தி வருகின்றன. பொதுவாக, இச்சமூக வலைதளங்களால், 16 25 வயது வரை உள்ளவர்களே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும், சமூக வலைதள பயன்பாட்டிற்கு அடிமையானவர்கள், தாங்கள் 'சமூக வலைதள போதை நோய்க்கூறு' பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை.
எல்லா நேரமும் இணையத்தில் இயங்குவது, எந்நேரமும் அதையே நினைப்பது, சிறிதுநேரம் மின் இணைப்பு இல்லாவிட்டாலும், பெரியளவில் பதற்றம் அடைவது என, மனிதர்களின் பொதுவான வாழ்க்கையை, சமூக வலைதளங்கள் புரட்டிப் போடுகின்றன. பேஸ்புக், டுவிட்டர் இல்லையென்றால், எதையோ இழந்தது போன்ற உணர்வு மேலோங்குவது, தனிமையில் வாழ்வது போல இருப்பது, நண்பர்கள் பதிவு செய்யும் புகைப்படங்களைக் கண்டு தாழ்வு மனப்பான்மை கொள்வது என, பிரச்னைகள் மிகச்சாதாரணமாகி விட்டன.
சாதாரண தகவல்களுக்கு கூட, மாணவர்கள் தற்போது சமூக வலைதளங்களைச் சார்ந்திருக்க தொடங்கி விட்டதால், அவர்களின் கற்றல் மற்றும் ஆய்வுத்திறன் குறைந்து வருகிறது. யதார்த்த உலக அனுபவம் குறைவதால், சமூகத்திலிருந்து இளைஞர்கள் துண்டிக்கப்படுகின்றனர். சமூக வலைதளங்களில் சுருக்கு வாக்கியங்களை அதிகமாக பயன்படுத்துவதால், மொழித்திறனும் அவர்களுக்கு குறைந்து போகிறது.
இதோடு, சமூக வலைதளங்களால் ஏற்படும் பலவகையான மிரட்டல்கள், ஆதிக்கங்கள், மன அழுத்தத்தை உண்டாக்குவதுடன், தற்கொலைக்கும் காரணமாகின்றன!
பி.பி. கண்ணன்,
மனநல மருத்துவர்.