ஆங்கில எழுத்துக்கள் சொல்லும் அனைத்து வைட்டமின்களும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடைகளில் கிடைக்க ஆரம்பித்து விட்டன. ஆனால், அவையெல்லாம் சத்துக்களோடு சேர்த்து, சிலபல உடல் உபாதைகளையும் நமக்கு கொடுத்து விடுகின்றன என்பதே உண்மை. என்னதான் தரம் உயர்ந்த பொருட்களை வாங்கி சாப்பிட்டாலும், இயற்கையில் விளையும் காய்கறிகளில் இருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள்தான், உண்மையான உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். இந்த காய்கறி கலவைக்கூட்டும் அந்த வகையைச் சார்ந்ததுதான்!
காய்கறி கலவைக்கூட்டு செய்வது எப்படி?
காய்கறிகள் 50 கிராம்
மஞ்சள்பொடி லி தேக்கரண்டி
தனியா (கொத்தமல்லி விதை)2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 10
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்தேவைக்கேற்ப
புளி தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளுடன், தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள்பொடி சேர்த்து சிறிதுநேரம் வேக விடவும். தனியா, காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு ஆகியவற்றை மிதமாக நல்லெண்ணையில் வறுத்தெடுத்து, அதை அம்மியிலோ அல்லது மிக்சியிலோ அரைத்து வைத்துக் கொள்ளவும். அந்த கலவையை வேக வைத்திருக்கும் காய்கறிகளுடன் கலந்து, சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றி, கொதிக்க வைத்து இறக்கினால், காய்கறி கலவைக்கூட்டு தயார்.
பலன்கள்:
பலவிதமான காய்கறிகளின் கலவையில், இந்த கலவைக்கூட்டு செய்யப்படுவதால், இதில் எல்லா விதமான சத்துக்களும் சமநிலையில் இருக்கும். அதன்மூலம், நம் உடலுக்குத் தேவையான சக்தியை, நாம் இதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த சத்துக்கள், நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியை கொடுப்பதுடன், உடலின் பாகங்கள் சீரான முறையில் இயங்கவும் வழிவகுக்கும்.
அ.காந்திமதி, ஊட்டச்சத்து நிபுணர்.