கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2015
00:00

கேள்வி: விண்டோஸ் 10 தொகுப்பில், சார்ம்ஸ் பார் அறவே எடுக்கப்பட்டுவிட்டதாக எழுதியுள்ளீர்கள். அப்படியானால், அதற்குப் பதிலாக, என்ன தரப்பட்டுள்ளது? அந்த டூல் எப்படி இயங்குகிறது? எனக்கு சார்ம்ஸ் பார் தான் அதிகம் பிடிக்கும். மிக எளிமையான, விரைவான செயல்பாட்டினை அது தந்து வருகிறது.
என். சிவபாலன், சென்னை.

பதில்: விண்டோஸ் 10ல் சார்ம்ஸ் பார் இல்லை. பலர் அது குறித்து குறை சொன்னதால், மைக்ரோசாப்ட் அதனை விண் 10ல் எடுத்துவிட்டது. அதற்குப் பதிலாக, விண் 10ல், Start பட்டன் கிளிக் செய்திட வேண்டும். உடன் புதிய ஸ்டார்ட் மெனு கிடைக்கும். இதில் கிடைக்கும் பட்டியலில், Settings திரைக்குச் செல்ல ஒரு லிங்க் தரப்பட்டுள்ளது. அதில் கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் 8ல், சார்ம்ஸ் பார் தந்ததற்கும் மேலாகவே, இதில் ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. இங்கு கிடைக்கும் Settings பார் வழியாக, Network, Volume, Notifications and Power எனப் பல பிரிவுகளுக்குச் செல்லலாம். தற்போது சிஸ்டம் ட்ரேயில், வலது புறம் காட்டப்படும் அனைத்தும் இந்த செட்டிங்ஸ் லிங்க்கில் கிளிக் செய்தால் கிடைக்கும்.
ஸ்டார்ட் மெனுவில், All apps லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு விண்டோஸ் அப்ளிகேஷன் ஒன்றைத் திறக்கலாம். People அல்லது Mail என எதனையும் தேர்ந்தெடுக்கலாம். திரையின் இடது மேல்புறம் உள்ள Options பட்டனில் கிளிக் செய்திடவும். இது இங்கு மூன்று படுக்கைக் கோடுகள் கொண்ட ஐகான் போல காட்சி தரும். இதில் கிளிக் செய்தால், சார்ம்ஸ் பாரில் கிடைக்கப்பெற்ற அதே கட்டளைகளுடனான பாப் அப் விண்டோ காட்டப்படும். இதில் Settings கிளிக் செய்தால், குறிப்பிட்ட அப்ளிகேஷனுக்கான செட்டிங்ஸ் பார் கிடைக்கும். இதில் App கட்டளையில் கிளிக் செய்தால், அந்த அப்ளிகேஷனுக்கான App பார் கிடைக்கும். விண் 8ல் சார்ம்ஸ் பார் பார்த்து இயக்கி ரசித்தவர்களுக்கு, விண் 10ல் அதற்கான சந்தர்ப்பமே கிடைக்காது.

கேள்வி:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், படுக்கை வரிசை (row)க்கு மேல் அல்லது கீழாக ஒரு வரிசையைச் சேர்க்க விரும்பினால், மவுஸ் துணையின்றி, கீ போர்டிலேயே, மெனு ஏதேனும் செல்லாமல், கீகளைப் பயன்படுத்தி செயல்படுத்த முடியுமா? நான் பல இடங்களில் இதற்கான ஷார்ட் கட் கீ தேடிக் கிடைக்கவில்லை. அப்படி ஒன்று இல்லையா? இருந்தால் விளக்கவும்.
என். பாவனா சந்திரன், திருப்பூர்.

பதில்: எப்படியாவது, கீ போர்டை மட்டுமே பயன்படுத்தி, ஒரு படுக்கை வரிசைக்கு மேல், கீழாக புதிய வரிசை ஒன்றை இணைக்க விருப்பப்படுகிறீர்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை இங்கு காண்போம். எந்த வரிசைக்கு மேல் அல்லது கீழ் இன்னொரு வரிசையைச் சேர்க்க விரும்புகிறீர்களோ, அதில் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஷிப்ட் மற்றும் ஸ்பேஸ் கீயை அழுத்தவும். இப்போது முழு வரிசையும் தேர்ந்தெடுக்கப்படும். அடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+ '+' கீயை அழுத்தவும். இந்த + கீ எழுத்துக்கள் மேலாக உள்ள கீ. நம்பர் பேடில் உள்ள கீ அல்ல. இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வரிசைக்கு மேலாக, புதியதொரு வரிசை தோன்றியிருப்பதைக் காணலாம்.
இன்னொரு வழியும் உள்ளது. தொடர்பான வரிசையில் செல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஆல்ட் + 'ஐ' கீயை அழுத்திப் பின்னர் 'ஆர்' கீயை அழுத்தவும். தேர்ந்தெடுத்த செல் இருக்கும் வரிசைக்கு மேலாக ஒரு வரிசை இடைச் செருகப்படும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், ஹெடர் அல்லது புட்டரில், அன்றைய தேதியை அமைக்க விரும்புகிறேன். இதன் மூலம், டாகுமெண்ட்டை அச்சிடுகையில், தேதி காட்டப்படுவதனை வேண்டுகிறேன். இதற்கான வழி சொல்லவும்.
என். கவுதம ஈஸ்வரன், கோவை.

பதில்: ஹெடர் அல்லது புட்டரில் தேதியை இடைச் செருகலாக அமைக்கக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும். View மெனுவில், Header and Footer தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது Header and Footer டூல்பாரினைக் காட்டும். உங்கள் மவுஸ் பாய்ண்ட்டரை எந்த இடத்தில் தேதி காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அங்கு கொண்டு சென்று வைக்கவும். இனி, Header and Footer டூல் பாரில், Insert Date என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் உடன் இன்றைய தேதியை இணைக்கும். அடுத்து Close கிளிக் செய்து வெளியே வரவும்.
மேலே சொன்னபடி, இணைக்கப்படும் அன்றைய தேதி மாறிக் கொண்டே இருக்கும். இன்று, அந்த இடத்தில் இன்றைய தேதி காட்டப்படும். நாளை, நாளய தேதி காட்டப்படும். இதனை dynamic என அழைப்பார்கள். நீங்கள் Insert Date பயன்படுத்துகையில், வேர்ட் ஒரு DATE பீல்டை இணைக்கிறது. நீங்களாக இணைக்க வேண்டும் என விரும்பினால், கர்சரைக் கொண்டு சென்று நிறுத்திவிட்டு Shift+F9 அழுத்தலாம். இந்த பீல்டை விரிவாக்கலாம்;மாற்றலாம். எனவே, தேதியை இணைக்க Insert Date டூல் மட்டுமே வழி அல்ல.

கேள்வி: சாம்சங் காலக்ஸி எஸ் 5 மாடல் ஸ்மார்ட் போனை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினேன். இதில் ஆண்ட்ராய்ட் கிட்கேட் சிஸ்டம் உள்ளது. சில வேளைகளில் எனக்கு மோசமான எஸ்.எம்.எஸ். செய்திகள் கிடைக்கின்றன. எண்களை அறிந்து அழைத்தால், இல்லை என்று கூறி திட்டுகிறார்கள். காவல் துறை நிலையம் சென்று கம்ப்ளையண்ட் கொடுக்கலாம் என்றால், வீட்டில் இந்த போனைப் பறித்துக் கொண்டு, மொபைல் போனே தர மாட்டார்கள். ஒரு ஸ்மார்ட் போனில் இதனைத் தடுக்கும் வசதி உள்ளது என்று என் தோழி கூறுகிறாள். அதனை எப்படி செட் செய்வது என்று அறிவுறுத்தவும்.
இரா. தமிழ்ச் செல்வி, சிவகாசி.

பதில்: உங்களை இந்தப் பிரச்னை வெகுவாகப் பாதித்துள்ளது என்பதனை உங்களின் நீண்ட கடிதம் தெரிவிக்கிறது. இது போல சில ஆசாமிகள் வேண்டும் என்றே செய்து பெண்களை இழிவு படுத்துகின்றனர். பெண்களாய் இருப்பதால், சிலர் இதனை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். உங்கள் பெற்றோரிடம் இது பற்றி எடுத்துக் கூறி, அவர்களின் துணையுடன் காவல் துறை உதவியை நாடவும். சைபர் கிரைம் பிரிவு மூலம் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் பெயர் வெளியே தெரியாமல், காவல் அலுவலர்கள் பாதுகாப்பினை வழங்குவார்கள். இனி உங்களுக்கான போன் செட்டிங்ஸ் குறித்துப் பார்க்கலாம்.
உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், இணையத் தொடர்பின் வழியாக, Google Play store (Android market) செல்லவும். அல்லது போன் பிரவுசர் வழியாக play.google.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். Google Play store அடைந்தவுடன் அதில் “SMS blocker” என டைப் செய்து தேடவும். அல்லது நேரடியாக https://play.google.com/store/apps/details?id=com.smsBlocker&hl=en என்ற முகவரிக்குச் செல்லவும். கூகுள் பிளே ஸ்டோரில் எஸ்.எம்.எஸ். தடுக்க கிடைக்கும் பல புரோகிராம்களில் SMS Blocker - Clean Inbox என்ற ஒன்று காட்டப்படும். அல்லது இந்த முகவரியில் இது மட்டுமே காட்டப்படும். இதனை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்தவுடன், இயக்கி app preferences page என்ற பக்கத்திற்குச் செல்லவும். இங்கு SMS blocking என்பதிலும் Spam auto blocking - என்பதிலும் On என அமைக்கவும். Country code என்ற இடத்தில் இந்தியாவிற்கான குறியீடான 91 என்பதனை அமைக்கவும். (மற்ற நாடுகளின் குறியீடுகளை அறிய http://countrycode.org/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.) இனி, ஸ்பேம் செய்திகள் வரும்போது அவை தடுக்கப்படும். குறிப்பிட்ட எண்களில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்க, ““Block”” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். “Add New” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். அவை: போன் முகவரி புக்கிலிருந்து எண் தேடி எடுத்து அமைத்தல், எஸ்.எம்.எஸ். வந்த பெட்டியிலிருந்து எண் தேடி அமைத்தல், மற்றும் நாமாக எண்ணை அமைத்தல். இங்கு எண்ணை அமைக்க வேண்டும்.
அடுத்ததாக, “Filter” என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இங்கு குறிப்பிட்ட சொல் அல்லது சொற்களை அமைத்து, அவை உள்ள செய்திகளை ஸ்பேம் பெட்டிக்கு அனுப்ப செட் செய்திடலாம்.

கேள்வி: Zero Day Exploit வழி வைரஸ் வந்தால், அதனை எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பும் ஒன்றும் செய்திட முடியாது என்று என் நண்பர் கூறுகிறார். அவரால் அதற்குக விளக்கம் அளிக்க இயலவில்லை என்றாலும், அது உண்மை என்று அடித்துக் கூறுகிறார். இது உண்மையா? தயவு செய்து விளக்கம் கூறவும். இந்த வழியில் வைரஸ் வந்தால், நீக்கிடும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளனவா?
என். ஸ்ரீதேவி மகராஜன், திருப்பூர்.

பதில்: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் Zero Day Exploit என்பது வைரஸ் தாக்கும் வழி அல்ல. வைரஸ் ஒன்றை அழிக்க, ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் எடுத்துக் கொள்ளும் கால அவகாசத்தைக் குறிக்கிறது. இது கால அவகாசம் என்று சொல்வதைக் காட்டிலும், வைரஸ் வந்த நாள் முதல், அதனை அழிக்க புரோகிராம் எழுதப்படும் நாள் வரையிலான காலம் என்று கூறலாம்.
வைரஸ் ஒன்று பரவத் தொடங்கினால், உடனே அது, ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் பார்வைக்குச் சென்று, அதற்கான எதிர்ப்பு புரோகிராமினை அவர்கள் உருவாக்கி வழங்குவார்கள். இதனைத்தான் வைரஸ் டெபனிஷன் என்று கூறுவார்கள். எதிர்ப்பு புரோகிராம் உருவாகி, நாம் அதனை அப்டேட் செய்துவிட்டால், அந்த வைரஸால் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், வைரஸ் தாக்கத் தொடங்கிய நாளிலிருந்து, அதற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உருவாக்கப்பட்டு கிடைக்கும் காலம் வரையிலான இடைவெளிக் காலம் உள்ளதல்லவா? அது தான், ஸீரோ டே எக்ஸ்ப்ளாய்ட் என்பது. அந்த நாளில் நாம் குறிப்பிட்ட வைரஸ் முன்னால், பாதுகாப்பு எதுவும் இல்லாமல், வெறும் ஸீரோவாக, நிராயுதபாணியாக, வைரஸுக்கு எதிரான போர்க்களத்தில் உள்ளோம் என்று கூட இதற்குப் பொருள் கொள்ளலாம்.
சரியான பொருள் என்னவெனில், ஆண்ட்டி வைரஸ் தயாரிக்கும் பணியில் உள்ளவர்கள், குறிப்பிட்ட புதிய வைரஸை எதிர்த்து புரோகிராமினைத் தயார்ப்படுத்த நாள் இல்லை. அதற்குள் அந்த வைரஸ் வேகமாகப் பெருகும் இல்லையா? இதைத் தான் ஸீரோ டே எனக் குறிப்பிடுகின்றனர்.

கேள்வி: வேர்ட் 2007 கணினியில் பயன்படுத்தி வருகிறேன். என் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7. என் அலுவலகத்தில், இன்னும் வேர்ட் 2003 தான் பயன்படுத்துகின்றனர். எனவே Doc பார்மட்டில் டாகுமெண்ட்களை அங்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. வேர்ட் 2007ல் அது Docx என்ற பார்மட்டில் பதிவாகிறது. ஒவ்வொரு முறையும் சேவ் ஆப்ஷன் எடுத்து, இதற்கான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எப்போதும் இதே Doc பார்மட்டில் சேவ் செய்திடும் வகையில் இதனை மாற்ற முடியுமா?
என். தெய்வேந்திரன், சிவகாசி.

பதில்: வேர்ட் 2007 எப்போது Doc பார்மட்டில் டாகுமெண்ட்களை சேவ் செய்திடும் வகையில் அமைக்கலாம். மேலும் பல வகைகளிலும் அமைக்கும் வசதிகளும் தரப்பட்டுள்ளன. இதற்கு வேர்ட் ப்ராப்பர்ட்டீஸ் பகுதியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். வேர்ட் திறந்து ஏதேனும் ஒரு டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர், Word Options கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், வேர்ட் ஆப்ஷன்ஸ் விண்டோவினைக் காட்டும். பின்னர், இதில் Save என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Save Files in this format என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கீழாகக் காட்டும் அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வகை பார்மட்களில் சேவ் செய்திடலாம் என ஒரு பட்டியல் தரப்படும். அதில் உங்களுக்குத் தேவையான, Word 97-2003 document (.doc) என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, டாகுமெண்ட் நீங்கள் தேர்ந்தெடுத்த பார்மட்டிலேயே சேவ் செய்யப்படும். இதே போல எப்போது வேண்டும் என்றாலும், வேர்ட் ஆப்ஷன்ஸ் விண்டோ சென்று, வேர்ட் டாகுமெண்ட்டினை சேவ் செய்திடும் பார்மட்டினை மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: யு ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ பைல்களைக் காப்பி செய்து, ஆப் லைனில் பயன்படுத்த பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால், பேஸ்புக்கில் பதிந்து வைத்து அதிலேயே இயக்கப்படும் வீடியோ பைல்களை காப்பி செய்திட புரோகிராம் ஏதேனும் உள்ளதா?
ஆர். கெளதம ராஜன், திருப்புவனம்.

பதில்: பேஸ்புக் தளத்திற்கு முதலில் செல்லுங்கள். உங்கள் அக்கவுண்ட் திறந்து, பக்கத்திற்குச் செல்லுங்கள். குறிப்பிட்ட வீடியோ பைலை, ரைட் கிளிக் செய்து, மெனு மூலம், தனி டேப்பில் திறக்கவும். இப்போது அது இயங்கத் தொடங்கும் போது, அந்த டேப்பில் உள்ள முகவரிக் கட்டத்தில் உள்ள முகவரியை காப்பி செய்திடவும்.
பின்னர், http:// www.downvids.net/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக் கட்டத்தில்,மேலே சொல்லியபடி காப்பி செய்த தள முகவரியினை பேஸ்ட் செய்து அருகே உள்ள ''download” என்பதில் கிளிக் செய்தால், அந்த வீடியோ பைலை டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும். அந்த இணைப்பில் அழுத்தி, பின்னர் save as link என்பதில் அழுத்தினால், வீடியோ பைல் சேவ் செய்யப்படும்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X