கனரக வாகனம் ஏற்படுத்தும் நில அதிர்வில், 'உலகம் அழிந்து விடுமோ?' என அலறுவதும்; சீறி வரும் அலைகள், 'சுனாமியாக இருக்குமோ?' என, பீதியாவதும்தான் 'காஸ்மோபோபியா! இது 'போபியா' எனும், பய நோய்களில் ஒருவகை!
அருகில் இருப்பவர் போடும் தும்மலுக்கு ஆடும் மேஜை; திரையரங்கின் இசையினால் ஏற்படும் அதிர்வு என, சிறு சிறு விஷயங்கள் கூட ஏற்படுத்தும் உச்சகட்ட பயம்தான், இந்நோய்க்கான அறிகுறி! சில ஆண்டுகளுக்கு முன், ஹாலிவுட் படம் ஒன்றில், '2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும்' என சொன்ன தருணம்தான், உலகின் மீது 'காஸ்மோபோபியா' பலமாக தாக்குதல் நடத்திய காலம்! அந்த தருணத்தில், உலகின் பலகோடி மக்கள், இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது!
ஆனால், இதற்கெல்லாம் மூல காரணம், நம் மனதில் உருவாகும் பிரமைதான் என்கிறது அறிவியல். மனிதர்களில், தைரியம் இல்லாதவர்களையும், தன்னம்பிக்கை குறைந்தவர்களையும், மூட நம்பிக்கைகளில் மூழ்கியவர்களையும்தான், 'காஸ்மோபோபியா' முதலில் தனக்கு இரையாக்குகிறது.
அந்த பயம், நம் குழந்தைகளை தாக்குவதற்கு முன், வாழ்வின் நடைமுறைகளை, நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். உலகத்தின் மீதான எந்தவொரு மூட நம்பிக்கையையும், அவர்கள் மேல் திணிக்காமல், பகுத்தறிவினை வளர்த்து, அதன்மூலம் எந்தவொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்த்து நடக்கும்படி பழக்க வேண்டும்!
இவ்வுலகம் மற்றும் இயற்கை சம்பந்தப்பட்ட புத்தகங்களின் மூலம், நாம் வாழும் அண்டத்தைப் பற்றிய அறிவினை வளர்த்துக் கொண்டாலே, 'காஸ்மோபோபியா' நம்மை அண்டாது!
- கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி,
மனநல ஆலோசகர்.