தலைப்பை பார்த்த உடனே, 'அப்போ, எனக்கு என்ன பைத்தியமா?' என்ற ஏளனக் கேள்வி எழலாம்! ஆனால், நம்மில் எவருமே 100 சதவீதம் இயல்பானவர்கள் அல்ல என்பதுதான் உண்மை; அதே நேரம், பைத்தியமும் அல்ல! சந்தோஷம், துக்கம், கோபம், வெறுப்பு என, ஏதோ ஓர் உணர்ச்சி, மற்றதை விட, சற்றே அதிகமாக இருக்கும். இந்த உணர்ச்சியை, அளவு மீறி செல்ல விடாமல் பார்த்துக் கொள்பவர்களே, மனதை ஆளும் ராஜாக்கள்!
பொதுவாக, திட்டமிட்டு செய்த ஒரு வேலை, எதிர்பாராத தோல்வியில் முடிந்தால் சோகம் வரும்; ஆனால், அந்த சோகத்தில் இருந்து, நம்மை நாமே தேற்றிக் கொள்ள முடியும். அதுவே, நாம் திட்டமிடும் பணிகள், தொடர்ந்து 10, 15 முறை தோல்வியடைந்தால், அதீத எண்ணிக்கையில், எதிர்மறையான எண்ணங்கள் மனதில் எழும். இதற்கு
பெயர்தான் மன அழுத்தம்! இதிலிருந்து விடுபட எளிய தீர்வு, நம் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மனம் விட்டு பேசலாம், அல்லது உளவியல் நிபுணரை அணுகலாம். இதை செய்யத் தவறும் போது, மன அழுத்தம் நம் உடலை வருத்த துவங்கும்.
மன அழுத்தம் உள்ள 100 பேரில், 85 பேருக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுவதாகக் கூறுகிறது ஒரு புள்ளி விவரம். இந்நிலை நீடிக்கும் போது, மன அழுத்தம் என்பது மன நோயாக மாறும். சுருக்கமாகச் சொன்னால், சோகத்தின் உச்சம்... மனஅழுத்தம்;
மன அழுத்தத்தின் உச்சம்... மனநோய்!
'என்னாச்சு?' என்று நம் அன்புக்குரியவர் கேட்கையில், 'எனக்கு ஒன்றுமில்லை' என்று கூறுவதை விட்டுவிட்டால் இந்த சூழல் நம்மை அணுகாது!
- டாக்டர் வி.டி. சுவாமிநாதன், உளவியல் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்.