ரவிச்சந்திரனை நினைக்கும்போது, நிம்மதி பெருமூச்சு விடத் தோன்றுகிறது. பாவம், 20 ஆண்டுகளாக மனிதர் என்ன பாடுபட்டிருப்பார்? நீங்காத தலைவலியோடு, 20 ஆண்டு போராட்டம் அவருக்கு! அவர் அனுபவித்த அவஸ்தைகளை வைத்து, அவருக்கு வந்த தலைவலி என்ன என்று, என்னால் ஓரளவு யூகிக்க முடிந்தது. இருந்தாலும், ஒரு 'ஸ்கேன்' எடுக்கச் சொன்னேன். அதில், அவருக்கு பிரச்னையில்லை என்றதும், முடிவுக்கு வந்தேன்; அவருக்கு வந்திருப்பது, கொத்து தலைவலி!
இந்த தலைவலியைப் பொறுத்தவரை, ஒரு மாதம், இரண்டு மாதம் தொடர்ந்து இருக்கும். அதன்பின், இரண்டு ஆண்டுகள் கூட, காணாமல் போய் விடும். திடீரென, மீண்டும் வந்து மாதக்கணக்கில் வாட்டும். அதுவும், இந்த தலைவலி 'அலாரம்' வைத்து வருவது போல், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வரும். அதனால், இதற்கு 'அலாரம் க்ளாக் தலைவலி' என்று கூட பெயருண்டு. இந்த 'தலைவலி' வந்தால், எந்த வேலையும் செய்ய முடியாமல், தூங்க முடியாமல், ஒருவிதமான அவஸ்தையை ஏற்படுத்தும்.
வலிகளில் மிகவும் வலியது பிரசவ வலி; அதற்கடுத்து, சிறுநீரகத்தில் கல் இருக்கும்போது ஏற்படும் வலி; இந்த தலைவலி, இதையெல்லாம் தாண்டிய கொடும் வலி! இந்த வலி வரும்போது, 'மரணித்து விடலாமா?' என்று கூட தோன்றும். இதனாலேயே, இதற்கு 'தற்கொலை தலைவலி' என்ற பெயரும் உண்டு. ரவியும், கிட்டத்தட்ட இந்த முடிவிற்குத்தான் வந்திருந்தார்.
இந்த தலைவலியை, எந்த ஸ்கேனும் கண்டறியாது! காரணம், நம் தூக்கம், பசி, தாகம் போன்ற உணர்வுகளை நமக்கு எடுத்துச் சொல்லும், 'ஹைப்போதாலமஸ்' எனும் மூளையின் அடிப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களே, இந்த தலைவலிக்கு காரணமாகிறது! பெண்களை விட, ஆண்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடிய இந்த தலைவலி, எப்படி ஏற்படுகிறது என்பதை, இன்னும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது மருத்துவ உலகம்; ஆனால், இது நிச்சயமாக, மன அழுத்தம், மனச்சோர்வால் ஏற்படுவது அல்ல!
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த நோயை கண்டறிந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள், அதற்குரிய மருந்துகள் மூலம் குணப்படுத்தி விட முடியும். நான் ரவிக்கு செய்ததும் இதைத்தான்! இன்று, அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து, நான் நேசிக்கும் துறைக்கு, மீண்டும் ஒருமுறை நன்றி கூறினேன்!
- வி.எல். அருள் செல்வன்,
நரம்பியல் நிபுணர்.