கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மார்
2015
00:00

கேள்வி: விண்டோஸ் 10க்கு, விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், இலவசமாக மாறிக் கொள்ளலாம் என்று எழுதியுள்ளீர்கள். அவ்வாறு மாறிய பின்னர், ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போய், ரீ பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், தொடர்ந்து விண்டோஸ் 10 இலவசமாக செட் செய்யப்படுமா? ட்ரைவின் டிஸ்க் இமேஜ் எடுத்து வைத்து, அப்படிப்பட்ட நேரத்தில் பயன்படுத்த முடியுமா?
ஆ. பூரணச் சந்திரன், கோவை.
பதில்:
உங்கள் கேள்விக்கு இப்போது என்னால் பதில் அளிக்க முடியாது. ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 10 குறித்து, இது போன்ற தகவல்களை இது வரை தரவில்லை. எந்த வழியில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாற்றம் தரப்படும் என்பதைப் பொறூத்துள்ளது. எப்படி இருந்தாலும், உங்களுடைய விண்டோஸ் 7 ஆக்டிவேஷன் கீ அப்போது தேவைப்படலாம். அதனைக் கொண்டு விண்டோஸ் 7 சிஸ்டத்தினை ரீ இன்ஸ்டால் செய்து, அதன் பின்னர், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மேம்படுத்த வேண்டியிருக்கும். நீங்கள் குறிப்பிடும் டிஸ்க் இமேஜ் வழியும் உங்களுக்கு இதில் கை கொடுக்கலாம். Laplink DiskImage போன்ற டூல் இதற்கு உதவலாம். இது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமின்றி, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற புரோகிராம்களையும் காப்பி செய்து இன்ஸ்டால் செய்திடும். ஆனால், இந்த புரோகிராம் இலவசமாகக் கிடைப்பதில்லை. விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றி டிஸ்க் இமேஜ் தயார் செய்து கொள்ளுங்கள்.
Start Menu திறந்து, அதில் “backup” என டைப் செய்திடவும். கிடைக்கும் முடிவுகளிலிருந்து, “backup your computer” என்பதனைத் தேர்வு செய்திடவும். இங்கு, “Create a system image” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, வெளியிலிருந்து இணைக்கப்பட்ட ட்ரைவ் ஒன்றில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளவும். தொடர்ந்து உங்கள் கம்ப்யூட்டருக்கு system repair disc ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இது, உங்கள் கம்ப்யூட்டர் முடக்கப்படும்போது, ரீ பூட் செய்திடவும், சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்திடவும் உதவும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்னும் பயன்படுத்தி வருகிறேன். எக்ஸ்பிக்கான சப்போர்ட்டினை மைக்ரோசாப்ட் நிறுத்திய பின்னர், நேற்று என் கம்ப்யூட்டரை மூடும் தருவாயில், Do not shut down, downloading 1 of 4 updates என்று ஒரு மெசேஜ் வந்தது. அதன் பின் அப்டேட் முடிந்த பின்னரே, சிஸ்டம் ஓய்ந்தது. அவை என்னவென்று கூட காட்டப்படவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் நிலையை மாற்றிக் கொண்டு, அப்டேட் பைல்களைத் தந்திருக்குமோ என்று நினைக்கிறேன். நீங்கள் இதனை விளக்கவும்.
எஸ். சந்திர நேசன், கோவை.
பதில்:
சந்திர நேசன், உங்களுக்கு ஒன்று உறுதியாகக் கூறட்டுமா? மைக்ரோசாப்ட், எக்ஸ்பியைப் பொறுத்தவரை, தன் சப்போர்ட் தராத நிலையை மாற்றிக் கொள்ளாது. இன்னொன்று, எக்ஸ்பி சிஸ்டத்தை வைத்துக் கொண்டு, இணைய உலாவெல்லாம் மேற்கொள்ளாதீர்கள். இதன் மூலம் ஹேக்கர்கள் எளிதாக, உங்கள் சிஸ்டத்தைக் கைப்பற்றிவிடுவார்கள். இது இரவில் கதவைப் பூட்டாததோடு, “இங்கு கதவு பூட்டப்படாத வீடு ஒன்று இருக்கிறது” என்று வெளிச்சத்தில் ஒரு அறிவிப்பினை மாட்டுவதற்குச் சமம்.
மைக்ரோசாப்ட் எக்ஸ்பிக்கான சப்போர்ட் தருவதை நிறுத்திய பின்னர், அவசர நிலை கருதி, ஒரு சப்போர்ட் பைலைத் தந்தது. ஒருவேளை, உங்கள் சிஸ்டம் அப்டேட் செய்தது, அந்த பைலாக இருக்கலாம். அல்லது மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஸியல்ஸ் புரோகிராமிற்கான சப்போர்ட் பைலாக அது இருக்கலாம். மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான சப்போர்ட் வரும் ஜூலை 2015 வரை இருக்கும். அது சார்ந்த பைலாகவும் இருக்கலாம். ஆனால், இது வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான புரோகிராம் அல்ல. எனவே, இனி மேலும் எக்ஸ்பி சிஸ்டத்துடன், இணையம் தேடும் வேலையை விட்டுவிடவும்.

கேள்வி: என் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் வை பி இணைப்பினை எப்படி பிக் அப் செய்வது? இதற்கான சாதனத்தை எங்கு வாங்குவது? இணைய இணைப்பு தரும் நிறுவனம் விற்பனை செய்திடுமா?
என்.எஸ். பார்த்தசாரதி, சென்னை.
பதில்:
முதலில் உங்கள் வீட்டில் வை பி அலைவரிசை கிடைக்க வேண்டும். அதாவது, உங்கள் வீட்டில் இணைய இணைப்பும், வயர்லெஸ் ரெளட்டர் என்று அழைக்கப்படும் சாதனமும் தேவை. உங்களிடம் மோடம் மட்டும் இருந்தால், இதனுடன் இணைத்துச் செயல்பட ஒரு ரெளட்டர் (router) தேவை. இப்போதெல்லாம், பல இணைய சேவை தரும் நிறுவனங்கள், மோடம் மற்றும் ரெளட்டராகச் செயல்படும் இரட்டைச் செயல்பாடு கொண்ட சாதனத்தைத் தருகின்றன. இவை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, வீட்டில் இயக்கப்படும் லேப்டாப், டேப்ளட் பி.சி. மற்றும் ஸ்மார்ட்போன்களிலும் இணைய இணைப்பினை வழங்கும். முதலில், அதனை அந்நிறுவனமே இன்ஸ்டால் செய்திடும்.
இந்த நிலையில் கூடுதலாக ஓர் எச்சரிக்கை தகவல் தர விரும்புகிறேன். வை பி இணைப்பு இலவசமாகக் கிடைக்கும் ஒன்று எனப் பலர் எண்ணுகின்றனர். உங்கள் வீடு அடுக்கக வீடு (flat) ஆக இருந்து, அங்கு இயங்கும் அசோஷியேசன் மொத்தமாக வை பி இணைப்பினைத் தரும் வசதியை ஏற்படுத்தி வழங்கினால், அதற்கான கட்டணம், உங்களிடமிருந்து பெறப்படும் பராமரிப்புக் கட்டணத்தில் சேர்த்து பெறப்படும். அப்படிப்பட்ட ஓர் அமைப்பில், அசோசியேஷன் அதற்கான பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் உங்களுக்குத் தந்திருக்கும். சில வேளைகளில், பக்கத்து வீட்டில் செயல்படும் வை பி அலைவரிசையினை, உங்கள் கம்ப்யூட்டர் கண்டறிந்து, அது பாஸ்வேர்ட் பாதுகாப்பில்லாமல் இருந்தால், இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்தும். ஆனால், இது திருட்டுக்குச் சமமாகும். இணைப்பு வைத்திருப்பவர்கள் அனுமதியுடன் நீங்கள் இயக்கலாம்.
பெர்சனல் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, அண்மைக் காலத்தில் வந்தவையே, வை பி இணைப்பு பெறும் வசதியுடன் வருகின்றன. இதனை “wireless” என சர்ச் பாக்ஸில் டைப் செய்து அறியலாம். அல்லது USB wireless adapter சாதனத்தினை கம்ப்யூட்டருடன் இணைத்தும் வை பி சிக்னல்களைப் பெறலாம். கடைகளிலும் ரெளட்டர் மற்றும் மோடம் இணைந்த சாதனங்கள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி இணைய இணைப்புடனும், கம்ப்யூட்டருடனும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் வாங்கிய நான், பின் அதனை விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு அப்டேட் செய்தேன். ஆனால், அதன் பின்னர் விண்டோஸ் 8.1.1க்கு அப்டேட் செய்திட முடியவில்லை. Update Trouble Shooter கொண்டு இதனை ஆய்வு செய்த போது, அப்டேட் ஆகிறது. ஆனால், 8.1.1 கிடைக்கவில்லை. இது எதனால் ஏற்படும் பிரச்னை என விளக்கவும்.
என். மாலா தனசேகரன், புதுச்சேரி.
பதில்:
இது ஒரு நல்ல கேள்வி. விண்டோஸ் 8.1.1. என எதனையும் மைக்ரோசாப்ட் தலைப்பிட்டு அப்டேட் அறிவிக்கவில்லை. விண்டோஸ் 8.1க்குக் கிடைத்த பெரிய அளவிலான அப்டேட் பைல்களை நம்மில் பலர் அவ்வாறு அழைக்கிறோம். நீங்கள் குறிப்பிடும் விண்டோஸ் 8.1.1 அப்டேட், விண்டோஸ் 8.1.க்குப் பல புதிய வசதிகளைத் தந்தது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் பூட் செய்திடுகையில், அது தானாகவே, நீங்கள், டச் ஸ்கிரீன் அல்லது மவுஸ் அல்லது கீ போர்ட் பயன்படுத்துகிறீர்களா என்று கணித்து, அதற்கேற்ப பூட் செய்திடும். இந்த அப்டேட்டினை உங்கள் கம்ப்யூட்டர் மேற்கொண்டிருக்கும். ஆனால், ப்ராப்பர்ட்டீஸ் சென்று பார்த்தால், அது விண்டோஸ் 8.1 என்றே காட்டும். ஏனென்றால், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 8.1.1 என எந்த அப்டேட் பைலையும் தனியே தரவில்லை.

கேள்வி: வாட்ஸ் அப் புரோகிராமிற்கு இணையான, அதே வசதிகளைத் தரும் புரோகிராம் வேறு ஒன்றைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் நண்பர்கள் குழுவுக்குள் தனியாக ஒன்றைப் பயன்படுத்த விரும்புகிறோம்.
என். பாண்டியன், மதுரை.
பதில்:
ஒன்றென்ன, நிறைய உள்ளன. இருப்பினும், ஒன்றைப் பரிந்துரைக்கிறேன். அதன் பெயர் Threema. மற்றவர்களுக்குத் தெரியாமல், தங்கள் தனிப்பட்ட உரையாடல் ரகசியமாக, நண்பர்களுக்குள் இருக்க வேண்டும் எனத் திட்டமிடுபவர்களுக்கு இந்த புரோகிராம் சரியாக இருக்கும். உரையாடல் இறுதி வரை, மற்றவருக்குத் தெரியாதவகையில் சுருக்கப்பட்டு இருக்கும். பெயர், தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டே, உரையாடல் உரியவர்களுக்குக் கிடைக்கும். இருப்பினும், த்ரீமா, மற்ற அப்ளிகேஷன்கள், வாட்ஸ் அப் போன்றவை தரும் அனைத்து வசதிகளையும் தருகிறது. வாய்ஸ் மெசேஜ் முதற்கொண்டு அனைத்து வசதிகளும் உள்ளன. ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ்., விண்டோஸ் போன், அமேஸான் ஆகியவற்றிற்கான அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. இதனைத் தரவிறக்கம் செய்திட https://threema.ch/en/download என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

கேள்வி: பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிகின்றேன். எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில், ஒரு வகுப்பின் அனைத்து செக்ஷன்களில் உள்ள மாணவர்கள் மதிப்பெண்கள் குறித்த தகவல்களை அமைத்துள்ளேன். இது பல பக்கங்கள் அடங்கியதாக உள்ளது. என் பிரச்னை என்னவென்றால், இந்த ஒர்க் ஷீட்டில், அவ்வப்போதைய தேவைக்கேற்றபடி, சில பக்கங்களை, இடைவெளி விட்டு, மட்டும் அச்செடுக்க என்ன வழி?
என். கந்தசுவாமி, விருதுநகர்.

பதில்: உங்கள் கேள்வியில் சில விளக்கங்கள் இல்லை. நீங்கள் கூறியுள்ளதிலிருந்து, ஒவ்வொரு பக்கத்திலும், குறிப்பிட்ட வகுப்பின் ஒரு செக்ஷன் மாணவர்களின் மார்க் அமைத்துள்ளீர்கள். அப்படி என்றால், அச்செடுப்பது எளிது. எடுத்துக் காட்டாக, பக்கங்கள் 3,6 மற்றும் 9 ஆகியவற்றை அச்செடுக்க வேண்டும் என்றால், முதலில் பக்கம் 3 ஐத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு மற்ற பக்கங்களைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அச்சுக்கான பிரிண்ட் கட்டளை கொடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த பக்கங்கள் மட்டுமே அச்சாகும்.
ஆனால், உங்கள் கேள்வியில் தெளிவு இல்லாததால், இன்னொரு முறையிலும் உங்களுக்குச் சிரமம் இருப்பதாகக் கருதுகிறேன். அதாவது, ஒரே ஒர்க் ஷீட்டில் உள்ள வெவ்வேறு பக்கங்களை, ஒரே கட்டளையில் அச்செடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கான வேறு சில வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும். இதற்கான ஒரு சுருக்க வழி உள்ளது. அச்செடுக்கத் தேவையில்லாத பக்கங்களை மறைக்க வேண்டும். பின்னர், மறைக்கப்படாத பக்கங்களை அச்செடுக்க கட்டளை கொடுத்தால், மறைக்கப்படாத பக்கங்கள் மட்டுமே அச்சாகும். இதன் பின்னர், மறைக்கப்பட்ட பக்கங்களை, மறைப்பிலிருந்து நீக்கிவிடலாம். அதாவது unhide செய்துவிடலாம். இதோ வழிகளைப் பார்ப்போம்.
1. முதலில் ரிப்பனில் வியூ டேப் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து Workbook Views குரூப்பில், Page Break Preview டூலின் மீது கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் உங்கள் ஒர்க் ஷீட்டினைக் காட்டும். அதன் அனைத்து பேஜ் பிரேக் இடங்களும் தெரியும்.
3. இப்போது எந்த பக்கத்தினை அச்செடுக்க வேண்டுமோ, அதன் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அச்சடிக்க விரும்பும் அடுத்த பக்கத்தில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்படியே, அச்செடுக்க விரும்பும் அனைத்து பக்கங்களிலும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
6. தொடர்ந்து, கண்ட்ரோல் -+ பி (Ctrl+P) அழுத்தவும். எக்ஸெல் 2007 பிரிண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும். நீங்கள் எக்ஸெல் 2010 பயன்படுத்தினால், ரிப்பனில் பைல் டேப்பினைக் காட்டும். அதில் அச்செடுப்பதற்காண கண்ட்ரோல் கட்டளைகளைக் காணலாம்.
7. எக்ஸெல் 2007ல், Print What ஏரியாவில், Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2010ல், தலைப்பின் கீழ் உள்ள பட்டனை அழுத்தி, Print Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
8.1ஓகே அல்லது பிரிண்ட் கிளிக் செய்தால், தேர்ந்தெடுத்த பக்கங்கள் அச்சாகும். தொடர்ந்து அச்சான பின்னர், Page Break Preview டிஸ்பிளேயை மூடவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X