மாறியது நெஞ்சம் - ஆர்.பாண்டியன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2010
00:00

ஆர்.பாண்டியன்
பிறந்த ஊர் :  கொத்தப்பட்டி - தேனி மாவட்டம்.
கல்வித் தகுதி :
எம்.ஏ., எம்.எட்.,
வயது : 53.
பணி : ஆங்கில முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்.

ஆங்கிலத்தில் கவிதை தொகுப்பு நூல் ஒன்றை எழுதி, வெளியிட்டுள்ளார். இவருக்கு பிடித்த எழுத்தாளர்கள் லியோடால்ஸ்டாய், மாக்சிம் கார்க்கி, தாகூர், ரஸ்கின் பாண்ட் ஆகியோர். +2 முடித்து செல்லும் மாணவர்களின் மேற்படிப்புக்கான ஆலோசனை வழங்குதல், வங்கிக் கடன் வாங்கும் முறை, முதல்வர் உதவி தொகை பெறுவது எப்படி என்பது போன்றவற்றுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். சமூக அக்கறையுள்ள சிறுகதைகள் எழுத வேண்டும் என்பது இவரது அவா.                             ***

வறட்சியான பகுதியிலிருந்து, பெரியாறு பாயும் பகுதிக்கு மாறுதலாகி வந்த கிராம நிர்வாக அதிகாரி சிவசண்முகத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி. வந்து சேர்ந்த ஒரே மாதத்தில், அவ்வூரில் இருந்த பெரிய மனிதர்களையெல்லாம் கண்டு கொண்டார். பேச்சில் காரியம் சாதிக்கும் கலையை பெற்றிருந்தார். பிள்ளைகள் படிப்பு கருதி, தன் குடும்பத்தை திண்டுக்கல் அருகில் விட்டுவிட்டு, அவ்வூரில் கவுண்டரின் வீட்டு மாடியில் தங்கியிருந்தார்.
அவருடைய அலுவலகம் தெருக்கோடியில்தான் இருந்தது. சிவசண்முகத்திற்கு, அவ்வூர் மக்களை மிகவும் பிடித்துப் போயிற்று. அவருடைய வாழ்விலும், செழிப்பு தட்டியது. அவர் பெரும்பாலும் மாதத்தில் இரு முறை மட்டுமே ஊருக்குச் செல்வது வழக்கம்.
அன்று வெள்ளிக்கிழமை. இரவு கவுண்டருடன், "டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், வேலை இருப்பதாக கூறி, வெளியில் வந்தார் கவுண்டர்.
இரவு ஒரு மணிக்கு, கவுண்டர் வீட்டில் உள்ள, "செப்டிக் டேங்க்'கை சுத்தம் செய்வதற்காக நான்கு பேர் வந்திருந்தனர்.
""ஐயா கும்பிடுறோமுங்க... நாங்க வேலைய தொவங்குறோமுங்க,'' என்றனர் கவுண்டரிடம்.
 ""ஏலே கருப்பா... நீ சொன்னபடி ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய், கிழிந்த காகிதம், மூணு சோப்புக் கட்டி எல்லாம் இருக்கு. எடுத்துக்க... வேலைய சுத்தமாக முடிச்சிரணும்... புரியுதா?'' என்றார்.
""சரிங்கய்யா...'' என்று, நால்வரும் கோரஸ் போட்டனர்; சாராய நெடி அடித்தது.
""ஐயா... நீங்க வீட்டுக்குள்ளாறப் போயி, ஜன்னல்களை சாத்திடுங்க... கெட்ட வாடை அடிக்கும்.''
""சரி சரி... கிறுக்குல அஜாக்கிரதையா இல்லாம, வேலையை செய்யுங்கடா. ஆமா... அது யாரு புதுசா?''
 ""ஐயா... இவன் குப்பமுத்து மவன் செங்கோடனுங்க. நல்ல சுறுசுறுப்பான பய. எலந்தாரிப் பய நமக்கு ஒத்தாசயா இருப்பான். டேய்... ஐயாவ கும்பிட்டுக்கடா...''
""ஐயா வணக்கமுங்க...'' இருபத்திரெண்டு வயது செங்கோடன் கும்பிட்டான்.
""சரி சரி... நல்லாயிரு. வேலையை சுத்தமா செய்யணும். கருப்பா... நீ கேட்டபடி நானூறு ரூவாய கொடுத்திடுறேன்,'' என்றார்.
 ""ஐயா பாத்து எப்படி கொடுத்தாலும் சரிதாங்க,'' என்றான் கருப்பன்.
ஏற்கனவே கவுண்டரிடம் அட்வான்ஸ் வாங்கிய தொகையில், நூறு ரூபாய் சாராய கடைக்கு சென்று விட்டது. இந்த மாதிரி சந்தர்ப்பம் அவர்களுக்கு ஒரு உபரி வருமானமே. கருப்பன் மட்டுமே நிதானத்தில் இருந்தான். சொல்லப்போனால் சற்று சிக்கனமாக இருக்க விரும்பினான். காரணம், அடுத்த நாள் அவனுக்கு ஒரு முக்கியமான செலவு காத்திருந்தது. கவுண்டர் தரும் பணத்தை வெகுவாக நம்பியிருந்தான்.
கடப்பாறை, மண்வெட்டி சகிதம் வேலையை தொடங்கினர். மிகவும் சிரமப்பட்டு சிமென்ட் தரையை பெயர்த்து எடுத்தனர். சுமாராக பதினைந்து வருடம் கழித்து, தொட்டியை திறப்பது என்றால் சும்மாவா?
""ஏலே செங்கோடா... பாத்துடா, ஒடச்சு போடாத... கவுண்டரு தங்கமானவரு. அவருக்கு நஷ்டம் செய்யக்கூடாது. இம்... தூக்குடா...''
குப்பென்று வாடை அடித்தது. அவர்கள் போட்டிருந்த சாராய வாடைக்கு போட்டியிட்டது.
""யோவ் காத்தமுத்து... காகிதத்தை போட்டு மண்ணெண்ணெயை ஊத்துயா...'' என்றதும், ஐந்து லிட்டரையும் பரவலாக கொட்டி, தீ வைத்தான் காத்தமுத்து. தக... தகவென தீ எரிந்தது. சற்று வித்தியாசமான நெடி பரவியது.
நெருப்பு அடங்கிய பின் செங்கோடனும், சுப்பனும் கோவணத்துடன் வேலைக்கு தயாராயினர்.
""தண்ணிய ஊத்தி, கம்பால கெலச்சு விடுடா... அப்பத்தான் வாளியில் அள்ளி ஊத்த தோதா இருக்கும்.''
டிரம்களிலிருந்த நீரை அள்ளி ஊற்ற, செங்கோடன் மூங்கில் தடியால் தொட்டியை கலக்கினான். பின்னர் வாளிகளில் அள்ளி, தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த தகர டின்களில் ஊற்றி நிரப்பினான். இவற்றையெல்லாம் பக்கத்து அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கவுண்டரின் மனம் கனக்க ஆரம்பித்தது. "டிவி' பார்த்துக் கொண்டிருந்த சிவசண்முகம், துர்நாற்றம் பொறுக்க முடியாமல், மூக்கை பொத்திக்கொண்டு எட்டிப் பார்த்தார். லைட்டை அணைத்துவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றார்.
""ஆமா... கருப்பு மாமா, இது சரியான தொட்டியாவில்ல இருக்கு. பெரிய கிணறுதான் போங்க.''
""சரி மாப்ள... கவுண்டர் ஐயாவோடது பெரிய குடும்பம்... பெரிய தொட்டி வேண்டாமா? நான் சொல்றேன்... நிச்சயமா கவுண்டர் ஐயா பேசினதுக்கு மேலதான் சம்பளம் போட்டு கொடுப்பார் பாருங்க.''
கவுண்டரின் கண்கள் பனிக்கத் தொடங்கியது. "ச்சே... எத்தனையோ வகையான கருவிகளை கண்டுபிடித்த மனிதன், இந்த மாதிரி தொட்டிகளை சுத்தம் செய்ய கருவிகளை புழக்கத்தில் விட்டிருக்கக் கூடாதா?'
மனித நேயம் படைத்த கவுண்டரின் ஈரநெஞ்சம் தன் கண்முன் பணத்திற்காக எடுத்துக் கொண்ட வேலையை முழுமூச்சாக செய்து கொண்டிருக்கும் அந்த பாவப்பட்ட மனிதர்களுக்காக கசிந்து, பேசியற்கு மேல் நூறு ரூபாய் சேர்த்துக் கொடுக்க எண்ணினார். அன்று காலை உணவையும் அவர்களுக்காக தயாரிக்க முடிவெடுத்தார்.
ஜன்னல்களை தாழிட்ட சிவசண்முகம், மனிதன் பணத்திற்காக படும் அவலங்களைச் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, "இது அவர்கள் விதி...' என நினைத்தப்படி தூங்கினார்.
தள்ளுவண்டி வரும் சப்தம் கேட்டது... "நாள முதல் குடிக்க மாட்டேன்... சத்தியமடி தங்கம்...' பாடலை உளறிக்கொண்டே பாட்டில்களுடன் வந்து சேர்ந்தான் காத்தமுத்து.
""பெரிய... பாகவதரு... பாட்டப்பாரு...  இவ்வளவு நேரமாய்யா... குடுய்யா பாட்டில...'' மூன்று பேரும் நன்றாக, "கிக்' ஏற்றிக் கொண்டனர்.
""அய்யா... மருமவனே இந்தா பழைய சரக்கு... இனிமே வேலயத் தொட்டா... தொட்டி சும்மா பளபளப்பா இருக்கணும்.''
""சர்தான் மாமா... கடைசியில் சொல்லுங்க கண்ணாடியா இல்லையான்னு...''
அடுத்த அரை மணி நேரத்தில் தொட்டியை சுத்தமாக எடுத்து முடித்துவிட்டு, சுற்றுப் புறத்தை நீரால் கழுவி சுத்தம் செய்தனர்.
மறுநாள் காலை சிவசண்முகமும் தன்னுடைய அலுவலகத்தில் வழக்கம் போல் ஒன்பது மணியளவில் இருந்தார். அவர் பெரும்பாலும் பட்டா மாறுதல், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எதிர்பார்ப்பது வழக்கம். அன்றும் அப்படிப்பட்ட கேஸ்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
""ஐயா கும்பிடுறேனுங்க...''
தன் மகனுடன் வந்து, பவ்யமாக வணக்கம் போட்டான் கருப்பன்.
""ம்... ம்... வணக்கம்... என்னய்யா விவரம்?''
தன்னுடைய வழக்கமான கேள்வியை ஆரம்பித்தார் சிவசண்முகம்.
""ஐயா வந்து... இவன் என் மவனுங்க... பள்ளிக் கொடத்துல ஒன்பதாவது படிக்கிறான். ஜாதி சான்றிதழ் கொடுத்தாத்தான் சர்க்காரு பொஸ்தகம் கொடுப் பாங்களாம். அதான்... ஐயாவப் பாக்க வந்தோ முங்க... ஏலே போஸ்... ஐயாவக் கும்புடுடா,'' என்று பையனிடம் கூறினான்.
""குட் மார்னிங் சார்...'' பையன் மிகப் பணிவுடன் கூறினான்.
சிவசண்முகம் அப்பாவை யும், மகனையும் நோட்டம் விட்டார். பரட்டைத் தலையை ஒருவாறு சரிசெய்து, பழுப்பேறிய வெள்ளைச் சட்டையும், கிழிவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் டிரவுசரையும் பார்த்த பொழுது, அரசாங்கம் கொடுக்கும் யூனிபார்ம் திட்டம் பரவாயில்லை என நினைத்தார்.
""ஆமா... ஓம் பேரு என்ன?''
""கே.சந்திரபோஸ்ங்க,'' என்றான் பையன்.
""நல்லாப் படிப்பாயா?''
""ஆமாங்க சார். நான்தான் எங்க வகுப்பிலேயே முதல் ரேங்க்,'' பையன் படபடவெனப் பொரிந்தான்.
""அப்படியா... பரவாயில்லையே... எங்க அந்த விண்ணப்பத்தை இப்படிக் கொடு.''
விண்ணப்பத்தை படித்துக் கொண்டே, ""என்னய்யா... இதுக்கெல்லாம் கொஞ்சம் செலவாகுமே... பணம் கொண்டு வந்திருக்கியா?'' என்றார்.
""ஆமாங்கய்யா... தலையாரி சொன்னாருங்க. இந்தாங்கய்யா இருவது ரூவா, ஐயா பெரிய மனசு பண்ணணுமுங்க,'' என்று கூறியவன், கவுண்டரிடம் கூலியாக பெற்ற பணத்தில், புது இருபது ரூபாய் நோட்டு ஒன்றை மேசையின் மீது மிகவும் பவ்வியமாக வைத்தான்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் பொழுது, தகப்பனின் பெயர் கருப்பசாமி என்றிருப்பதைப் பார்த்ததும், சிவசண்முகம் மனதில் பொறி தட்டியது.
கருப்புசாமி... ம்... நேற்று இரவு கவுண்டர், "ஏல கருப்புசாமி... வேலய கவனமா செய்யணும்டா...' என்று கூறியது ஞாபகத்திற்கு வந்தது. கடந்த இரவில் கவுண்டர் வீட்டில் கண்ட காட்சி மனத்திரையில் ஒரு கணம் ஓடி மறைந்தது. ஒரு முடிவுக்கு வந்தவராய், விடுவிடுவென விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு முடித்தார். புத்தம் புது நோட்டை பார்வையிட்டார். அதில் பொறிக்கப்பட்டிருந்த தர்மச்சக்கரம் சற்றுத் தெளிவாக அவர் கண்ணில் பட்டது. கடந்த இரவில் கருப்பசாமியும், அவனுடைய சகாக்களும் கக்கூஸ் தொட்டியைச் சுத்தம் செய்யப்பட்ட கஷ்டத்தை நினைத்துப் பார்த்தார். இந்த பணம் கவுண்டரின் கூலியாகத் தானிக்கும் என்று எண்ணியவராய், ""இந்தாய்யா கருப்பசாமி... கையெழுத்துப் போட்டுட்டேன்; இந்த பணத்தை நீயே எடுத்துக்கய்யா,'' என்றார்.
பதறியவனாய், ""கோவுச்சுக்காதீங்க...'' என்றவன், திடீரென ஒரு பத்து ரூபாய் நோட்டை தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து மேசை மீது வைத்தான்.
""அட... அட... நான் சொல்றதக் கேளு... நீ பணத்த எடுத்துக்கய்யா... ஓம் பையன நல்லா
படிக்க வை. நானே தாசில்தாரிடம் கையெழுத்தும் வாங்கிடுறேன். நீ சாயங்காலம் வந்து வாங்கிக்கோ,'' என்றார்.
""ஐயா... தரும தொரைங்க... நீங்க நல்லாயிருக்கணும்,'' என்றவன், ""ஒங்களப் போயி பணம் வாங்குவார்ன்னு ஊருக்குள்ள பேசுறாங்கய்யா,'' என்றான்.
""வாஸ்தவம்தாய்யா... ஆனா, அது நேத்து வரைக்கும் தான். நேத்து ராத்திரி, நீயும், ஒன்னோட ஆட்களும் கவுண்டர் வூட்ல கக்கூஸ் தொட்டியைக் கழுவுனத நானும் பார்த்தேன். நீ மலத்தை அள்ளி சம்பாதித்த இந்தப் பணம், என்னோட மனக் கழிவைப் போக்கிருச்சு... நானும் மனுசந்தானே,'' என்றவர் நெகிழ்ந்து போனார்.
""ஐயா... அது எங்களோட வேலைதானுங்கய்யா... உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு... படிச்ச நீங்க நல்லாயிருக்கணும்,'' என்று வாழ்த்தினான். பணத்தை எடுத்துக் கொண்டு கும்பிட்டபடி சென்றான். பையன் சந்திரபோசும் நன்றி சொன்னான்.
தம் அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த தேசப் பிதாவின் படத்தை பெருமிதத்துடன் பார்த்த சிவசண்முகம், ஒரு கணம் தம்முடைய வறுமையான இளமைப் பருவத்தையும் நினைவு கூர்ந்தார். மனக்கழிவுகள் நீங்கியவராய் லஞ்சம் வாங்குவதில்லையென முடிவு செய்த அவருடைய முகம், புத்துணர்ச்சியுடன் பிரகாசித்தது.
மகாத்மாவின் மோகனப் புன்னகையும் அதை ஆமோதித்தது.                                                    ***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆதி - சென்னை,இந்தியா
06-நவ-201013:33:55 IST Report Abuse
ஆதி காங்கிரஸ், கலைஞர் அண்ட் ஹிஸ் அமைச்சர்ஸ் படிக்க வேண்டிய கதை....
Rate this:
Share this comment
Cancel
கௌதம் பாண்டியன் ர - சென்னை,இந்தியா
31-அக்-201015:06:25 IST Report Abuse
கௌதம் பாண்டியன் ர நல்ல கருத்தாக்கம்....
Rate this:
Share this comment
Cancel
வனராஜா - Theni,இந்தியா
31-அக்-201014:17:17 IST Report Abuse
வனராஜா கண்கள் கலங்குகிறது. நல்ல கதை. இங்கு எல்லோருக்கும் எல்லாமும் தெரிகிறது. புரிகிறது. தெரிந்தும், புரிந்தும் தவறு செய்பவர்களை எப்படி திருத்துவது? சுயநலம் அவர்களின் கண்ணை மறைகிறது. பணத்தாசை கண்களை குருடாக்கி விட்டது. அதனால் இன்றைய அதிகாரிகளை திருத்த முடியாது. எல்லோரும் ஏழையாக இருந்து பதவிக்கு வந்தவர்கள் தான். பதவி அவர்களை கெடுத்து விட்டது. அவர்களால் பதவிக்கும் கேடு வந்து கேவலப்பட்டு போனது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X