கேள்வி: பலர் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறாமல், விண்டோஸ் 7 சிஸ்டத்திலேயே இருக்க ஆசைப்படுகின்றனர். விண்டோஸ் 8 சிஸ்டம் சென்றவர்கள், மீண்டும் விண் 7க்கு வர ஆசைப்படுகின்றனர். இவர்களுக்காக ஏன், டச் ஸ்கிரீன் மானிட்டர்களை, மைக்ரோசாப்ட் தயாரித்து குறைந்த விலையில் வழங்கக் கூடாது?
ஆர். பிரகாஷ், கோவை.
பதில்: பிரகாஷ், நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் மானிட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்வதில்லை. டச் ஸ்கிரீன் பயன்பாடு, ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் இருப்பதைப் போல கம்ப்யூட்டர்களில் வசதியாக இல்லை எனப் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எண்ணுவதால், அவர்கள் இதனை ஒரு பொருட்டாகக் கொண்டு அதன் அடிப்படையில், விண்டோஸ் 8 சிஸ்டத்தை விட்டு வருவதில்லை. மேலும், விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அதில் டச் ஸ்கிரீன் பயன்பாட்டிற்கு வழி இருந்தாலும், மவுஸ் கீ போர்ட் கொண்டும், டச் ஸ்கிரீன் அல்லாத திரைகளுடனும் இயக்கலாம்.
விண்டோஸ் 8.1 சிஸ்டம் கொண்ட லேப் டாப் கம்ப்யூட்டரை நான் பயன்படுத்தி வருகிறேன். ஆனால், டச் ஸ்கிரீனைத் தொட்டு இயக்குவதைக் காட்டிலும், பழக்கத்தின் அடிப்படையில் பல வேளைகளில், கீ போர்ட் மூலமே இயக்கி வருகிறேன்.
கேள்வி: கம்ப்யூட்டர் பயன்பாட்டில் SAN என்பது எதனைக் குறிக்கிறது? இது ஸ்டோரேஜ் வகை என்று என் நண்பன் கூறுகிறார்? விளக்கம் அளிக்கவும்.
என். பிரகாஷ் குமார், மதுரை.
பதில்: SAN என்பது Storage Area Network என்பதன் விரிவாக்கம். நெட்வொர்க் ஒன்றில், டேட்டா ஸ்டோர் செய்திட, பல இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு வழங்கப்படும் வசதியை இது குறிக்கிறது. பல ட்ரைவ்கள் இணைக்கப்பட்டு, ஒரே ஸ்டோரேஜ் ட்ரைவாகப் பல சாதனங்கள் பகிர்ந்து கொண்டு செயல்பட அளிக்கப்படும் செயல்பாட்டினையும் இது குறிக்கிறது.
கேள்வி: என்னிடம் விண்டோஸ் 7 இயங்கும் லேப்டாப் உள்ளது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டரும் உள்ளது, இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும், விலை கொடுத்து வாங்கி பதியப்பட்டவை. என் சந்தேகம் என்னவென்றால், விண்டோஸ் 10 இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதே. அப்படியானால், ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும், இயக்க முடியுமா?
என். தினேஷ் முருகன், செய்யாறு.
பதில்: இந்த சந்தேகம் பலருக்கு வந்திருப்பதால், கொஞ்சம் விரிவாகவே சொல்கிறேன். விண்டோஸ் 10 உங்கள் கம்ப்யூட்டரில் இலவசமாக டவுண்லோட் செய்து, இயக்கத் தொடங்கினால், விண்டோஸ் 7 முழுமையாக நீக்கப்படும். புதிய விண்டோஸ் 10 சிஸ்டம் ஒன்றை, கட்டணம் செலுத்தி வாங்கினால், அதனையும், விண்டோஸ் 7 சிஸ்டத்தினையும் டூயல் பூட் சிஸ்ட அமைப்பில் இயக்கலாம். இவற்றை இன்ஸ்டால் செய்திட, உங்கள் கம்ப்யூட்டரில் இடம் இருக்க வேண்டும். தற்போது விண்டோஸ் 10 தொழில் நுட்ப முன்னோட்ட சோதனைத் தொகுப்பினைப் பலர் இது போலத்தான் இயக்கி வருகின்றனர்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, விண் 7 மற்றும் 8.1 சிஸ்டங்கள் இருக்கின்ற கம்ப்யூட்டர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான காரணமே, அதிக எண்ணிக்கையில் பயனாளர்களை, அவர்களின் அதனை அனைத்து கம்ப்யூட்டர்களிலும் சீராகப் பயன்பாட்டில் அமைக்கத்தான். மொபைல் போன்களிலும் விண்டோஸ் 10 தருவதன் மூலம், அதிகமான எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் கொண்டு வரத் திட்டமிடுகிறது.
கேள்வி: என்னுடைய இணைய இணைப்பினை ப்ராட்பேண்ட் இணைப்பிற்கு மாற்றியமைத்து, அதனை வை பி ஆகவும் ஆக்கியுள்ளேன். மோடம் ஒன்று ரெளட்டராகவும் இயங்குகிறது. இதிலிருந்து வரும் சிக்னல்களை, என் வீட்டின் எல்லைக்குள் அமைக்க முடியுமா? அவ்வாறு கட்டாயம் அமைக்க வேண்டுமா? அடுத்த வீட்டிற்குச் செல்கையில், நானோ அல்லது அவர்களோ இதனைப் பயன்படுத்த முடியுமா?
என். சசி சேகரன், சென்னை.
பதில்: உங்கள் வீட்டில் வைத்து இயக்கும் மோடத்திலிருந்து, வை பி சிக்னல்கள், வீட்டிற்கு வெளியே நீண்ட தூரம் செல்ல வாய்ப்பில்லை. உங்கள் வீடும் அடுத்த வீடும் எவ்வளவு நெருக்கத்தில் உள்ளன என்பதைப் பொறுத்து, அடுத்த வீட்டில் இந்த சிக்னல்களைப் பயன்படுத்தலாம். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. இதனை முழுமையாகப் புரிந்து கொள்ள, வை பி சிக்னல்கள் எப்படி செயல்படுகின்றன என்று பார்க்கலாம்.
உங்களுடைய ரெளட்டர், வை பி ரேடியோ அலைகளை உருவாக்கி, உங்கள் வீட்டில் அதனை ஒலி பரப்புகிறது. உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் பிற வை பி பயன்படுத்தக் கூடிய சாதனங்கள், இந்த அலைகளைப் பெற்றுப் பயன்படுத்தி, மோடத்திற்குத் தகவல்களை அனுப்பி, பெற்று இணையத்தை அணுக முடிகிறது.
இந்த ரேடியோ அலைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. கீழ்த் தளத்தில் ரெளட்டரை வைத்தால், உங்கள் வீட்டில் சக்தியுள்ள அலைகள் கிடைக்காது. கம்ப்யூட்டர் மலருக்கு மோடம் குறித்து வருகின்ற கேள்விகள் அனைத்தும், இந்த அலைகளை வெகு தூரத்திற்கு இழுத்துச் செல்ல முடியுமா என்பது குறித்தே இருக்கும். ஆனால், நீங்கள், மற்றவர்கள், உங்கள் நெட்வொர்க்கில் இந்த அலைகளைப் பெறுவதன் மூலம் இணைந்து விடுவார்களோ என்பதுதான். உங்களுடைய வயர்லெஸ் நெட்வொர்க்கினை, பாஸ்வேர்ட் ஒன்றின் மூலம் பாதுகாத்துக் கொண்டால், நிச்சயம் அந்த பாஸ்வேர்ட் தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
உங்களுக்கு இணைய சேவையை வழங்கும் நிறுவனம், ஏற்கனவே, பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாக்கும் சந்தர்ப்பத்தினை உங்களுக்கு வழங்கி இருக்கும். நீங்களும் பாஸ்வேர்ட் போட்டு பாதுகாப்பில் வைத்திருப்பீர்கள். ஒருமுறை ஒரு சாதனத்தில், இந்த பாஸ்வேர்ட் போட்டு இணைப்பினைப் பெற்றிருந்தால், மறுமுறை பாஸ்வேர்ட் போடாமலேயே, அந்த சாதனத்தில் இணைய இணைப்பு கிடைக்கும். எனவே, அடுத்தவருக்கு உங்கள் பாஸ்வேர்டினைத் தர வேண்டாம். அப்படியே தந்துவிட்டால், உடனே அடுத்த வேளையில் அதனை மாற்றிவிடவும்.
கேள்வி: எனக்கு இணைய இணைப்பு வழங்கும் நிறுவனம், டேட்டா அளவு எதனையும் நிர்ணயம் செய்திடாமல், ஒரு மணி நேரம் பயன்படுத்தினால், இவ்வளவு எனக் கணக்கிட்டு நான் கட்டிய பணத்தில் இருந்து கழித்துக் கொண்டுள்ளது. எனவே, குறைந்த நேரத்தில் அதிகப் பயன்பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறேன். இணைய இணைப்பு இல்லாமல், எனக்கு வந்திருக்கும் இமெயில்களைப் படிக்க முடியுமா? நான் தயாரிக்கும் இமெயில்களை அனுப்ப முடியுமா? அதற்கு என்ன செட் செய்திட வேண்டும். எந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்திட வேண்டும்?
டி. மோகனா, சென்னை.
பதில்: இணைய இணைப்பு இல்லாமல், உங்களுக்கு வந்திருக்கும் மின் அஞ்சல்களைப் படிக்க இயலாது. குறைந்த நேரத்தில் அனைத்தையும் டவுண்லோட் செய்துவிட்டு, பின்னர் நேரம் கிடைக்கும்போது படிக்க திட்டமிட்டால், அதற்கான இமெயில் கிளையண்ட் புரோகிராமினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். அவுட்லுக், விண்டோஸ் மெயில் அப்ளிகேஷன் அல்லது தண்டர்பேர்ட் போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் இதற்குப் பயன்படலாம். இதில் ஒன்றை இன்ஸ்டால் செய்து, உங்களின் மின் அஞ்சல் முகவரி, இணைய சேவை வழங்கும் நிறுவனத்தின் சர்வர் முகவரி ஆகியவற்றைச் சரியாக அமைக்க வேண்டும். கடிதங்களைப் படித்து, பதில்களையும் தயார் செய்து, மொத்தமாக அனுப்பலாம். இதில், இணைய இணைப்பிற்கான நேரம் குறையலாம். ஆனால், மிகவும் குறைவான அளவில் தான் பணத்தை மிச்சம் செய்திடலாம். பிரவுசிங் செய்திடுகையில், தகவல் தேடுகையில், உங்களின் பணம் மிச்சப்படுத்தும் எண்ணம் இருந்தால், நீங்கள் சரியாகத் தேட முடியாது.
கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில், ஆபீஸ் 2003 பயன்படுத்தி வருகிறேன். என் அலுவலகத்தில் அனைவருக்கும் டாகுமெண்ட்டில் உள்ள அனைத்தையும் காட்டக் கூடாது. எனவே, என் விருப்பப்படி, சில பாராக்களை மறைத்து வைத்து, பின், தேவைப்படும்போது, மீண்டும் பார்க்கும் வகையில் கொண்டு வந்து, அமைக்க முடியுமா?
ஏ.எஸ். தங்கராஜ், புதுச்சேரி.
பதில்: உங்கள் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், வேர்ட் தொகுப்பில் டூல் உள்ளது. முதலில் டாகுமெண்ட்டினைத் திறந்து, மறைக்க வேண்டிய பாராவினைத் தேர்ந்தெடுக்கவும். பின் மெனு பார் செல்லவும். அதில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக. இதில் கிடைக்கும் புதிய விண்டோவில், Effects என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Hidden என்னும் பாக்ஸின் முன், டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.
கேள்வி: முன்பு “ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்” குறித்து விளக்கமாகப் பதில் சொல்லி இருந்தீர்கள். மீண்டு நினைவு படுத்திப் பார்க்கையில் சரியாக விளங்கவில்லை. விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் சிறிய புரோகிராம்கள் என்று மட்டும் தெரிகிறது. இவற்றின் பயன் குறித்து மீண்டும் கூறவும்.
ஆ. இசைராணி, சிதம்பரம்.
பதில்: பரவாயில்லை. உண்மையில் உங்களுக்கு உள்ள பிரச்னையை வெளிப்படையாகக் கூறி விளக்கம் கேட்டுள்ளீர்கள். இதனைப் பாராட்டுகிறேன். இதோ, மீண்டும் முழுமையாக விளக்குகிறேன்.
ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பவை அடிப்படையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சிறிய புரோகிராம்கள். இவை விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவை, அப்ளிகேஷன்களை அவர்களின் எல்லைக்குள்ளேயே இயக்க இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் உதவுகின்றன. ஏறத்தாழ ஜாவா ஆப்லெட் எனப்படும் புரோகிராம்களின் செயல்பாட்டினை ஒத்ததே இவை.
இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் இயங்குவதன் மூலம், அடிப்படையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாமல், சிறிய அளவில், இயக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இயலும். மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர், தன் வாடிக்கையாளர்கள், ஆக்டிவ் எக்ஸ் புரோகிராம்களை அணுக ஓர் ஆட் ஆன் தொகுப்பினைக் கொண்டுள்ளது.
ஆனால், இவை இயங்குவதில் சிக்கல் உள்ளது. இந்த புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் தாக்கும் அளவிற்கு இடம் அளிக்கும் வகையில் இயங்குகின்றன. இவற்றைப் பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழையும் மால்வேர் புரோகிராம்களின் வழியை “drive-bys”என அழைக்கின்றனர். மேலும் தூரத்தில் இருந்தே நம் கம்ப்யூட்டர்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிடுபவர்களுக்கும் இவை வாகாக அமைகின்றன.
அப்படியானால், இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கலாமே என்று நீங்கள் எண்ணலாம். அதனையும் நாம் மேற்கொள்ள வழி உள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று, அங்கு Internet Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இடையே Network and Internet என்ற விண்டோவினைப் பெறவும். இங்கு Internet Options என்ற பிரிவில், Manage Browser Add-ons” என்ற ஆப்ஷனைப் பார்க்கலாம். இந்த விண்டோவிற்குச் சென்றவுடன், “Security” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு நம் பாதுகாப்பு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திட, ஒரு ஸ்லைடர் பார் ஒன்று தரப்பட்டிருக்கும். இதில் High என்பதில் செட் செய்தால், ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் அனைத்தும் தடுக்கப்படும். இதில் என்ன பிரச்னை ஏற்படும் என்றால், சில இணைய தளங்கள், இவற்றைத் தடை செய்துவிட்டால், சரியாக இயங்காது.
இதற்குப் பதிலாக, நம் பிரவுசர்கள், இந்த தளம் வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கும் தளங்களுக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது.