கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மார்
2015
00:00

கேள்வி: விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 கொண்ட இரு லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வைத்துள்ளேன். விண் 7 உள்ள கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்க விரும்புகிறேன். இதனால், கம்ப்யூட்டரில் இருக்கும் டேட்டா பைல்கள் அழிந்துவிடுமா? என்ன முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்?
எம்.சீனிவாசன், புதுச்சேரி.
பதில்:
விண்டோஸ் 7, விண் 8 மற்றும் விண் 8.1 உள்ள கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 10 சோதனைப் பதிப்பினை நிறுவுகையில், உங்களுடைய செட்டிங்ஸ், தனிப்பட்ட பைல்கள் மற்றும் பெரும்பாலான அப்ளிகேஷன்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருக்கும். இருப்பினும், பாதுகாப்பு கருதி, உங்களுடைய பெர்சனல் செட்டிங்ஸ் அமைப்புகள் மற்றும் பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
விண் 10 நிறுவுவதால், செயல் முடக்கப்படும் ஒரே புரோகிராம் விண்டோஸ் மீடியா செண்டர் ஆகும். இதன் மூலம் டி.வி.டி. படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்க முடியாது. விண்டோஸ் 10 இறுதிப் பதிப்பு வரும்போதும் இந்நிலை இருக்குமா? என்பதற்கு மைக்ரோசாப்ட் இதுவரை பதில் அளிக்கவில்லை. மைக்ரோசாப்ட் இது குறித்து விரைவில் அறிவிக்கலாம்.

கேள்வி: என்னிடம் உள்ள பழைய சிடியில், மறைந்த என் அம்மா போட்டோ மற்றும் விடியோ பைல் உள்ளது? ஆனால், கம்ப்யூட்டரில் சி.டி. ட்ரைவில் போட்டால், விசிடி ப்ளேயரில் போட்டால், அவற்றைப் படித்துக் காண இயலவில்லை. இதற்கான வழி என்ன? எப்படியாவது அந்த பைல்களைப் படித்து இன்னொரு மீடியாவில் பாதுகாக்க வேண்டும்.
என். தங்கவேலு, சிதம்பரம்.
பதில்:
இது போல மனதைக் கலக்கும் சில கேள்விகள் வாசகர்களிடமிருந்து வருகின்றன. உங்களுடைய சிடியில் உள்ள படங்களை, அந்த பைல்கள் சிறிதளவு கெட்டுப் போயிருந்தாலும், மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதற்கான அப்ளிகேஷன்களும் உள்ளன. அதற்கு முன் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
முதலில், குறிப்பிட்ட சி.டி.யை மெல்லிதான துணி ஒன்றினால், சுத்தம் செய்திடவும். சி.டி.யில் பதிந்த தூசியினால், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், சுத்தம் செய்த பின்னர், ஒருவேளை பைல்கள் படிக்கப்படும் வாய்ப்பு உண்டு. மேலும், இப்போது வேறொரு கம்ப்யூட்டரின் சி.டி. ட்ரைவில் போட்டு இயக்கிப் பார்க்கவும்.
அடுத்து இதற்கெனக் கிடைக்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைப் பார்க்கலாம். இதில் மிகவும் பயனுள்ளதாக, நான் கருதுவது CD Recovery Toolbox. இந்த அப்ளிகேஷனை http://www.oemailrecovery.com/cd_recovery.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் இருந்து பெறலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கிப் பார்க்கலாம். ஆனால், நிச்சயம் உங்கள் பைல்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்க முடியாது. உங்கள் சி.டி. எந்த அளவிற்குக் கெட்டுப் போயுள்ளது என்பதைப் பொறுத்தது.
இன்ஸ்டால் செய்த பின்னர், சி.டி.யை அதன் ட்ரைவில் செலுத்தவும். பின்னர், சி.டி. ரெகவரி பாக்ஸ் அப்ளிகேஷனை இயக்கவும். இந்த
அப்ளிகேஷன் இயங்கி, உங்கள் சி.டி.யில் உள்ள பைல்களில், எந்த எந்த பைல்களை மீட்கலாம் என்று பட்டியலிடும். பின், அவற்றை எந்த டைரக்டரியில், போல்டரில் சேவ் செய்திட வேண்டும் எனக் கேட்கும். அதனைச் சுட்டிக் காட்டிய பின்னர், மீட்கப்படக் கூடிய பைல்கள் அதில் சேவ் ஆகும். எப்போதும் மிக அரிய பைல்களுக்கு பேக் அப் காப்பி ஒன்று அல்லது இரண்டாக எடுத்து வைக்கவும். அதுதான் நம் பைல்களைப் பாதுகாக்கும் வழி.

கேள்வி: ஸ்ப்ரைட் (Sprite) என்பது கிராபிக்ஸ் சார்ந்து பயன்படுத்தப்படும் சொல்லா? அல்லது விண்டோஸ் சிஸ்டம் சார்ந்த ஒரு தொழில் நுட்பச் சொல்லா? இதன் பொருள் என்ன? அன்பு கூர்ந்து விளக்கவும்.
என். ராதிகா குமார், திருப்பூர்.
பதில்:
தனியே செயல்படும் கிராபிக்ஸ் இமேஜ் ஒன்றை Sprite என அழைப்பார்கள். இது கிராபிக்ஸ் சார்ந்த ஒரு சொல் தான். திரையில், கிராபிக்ஸ் படங்களில், தானே நகர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இமேஜ். விடியோ கேம்ஸ் போன்றவற்றில் இயங்கும் கிராபிக்ஸ் படங்களை இந்த சொல்லால் குறிப்பார்கள். இத்தகைய ஒவ்வொரு Sprite இமேஜும், தான் இயங்குவதற்கான தனி வரையறைகளைக் கொண்டிருக்கும். மற்ற இமேஜ் அல்லது நிலைத்த இமேஜ்களுடன் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கும் தனி விதிகளைக் கொண்டிருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 10 இன்னும் சில மாதங்களில் வெளியிடப்பட இருப்பதாகத் தெரிகிறது. என் லேப் டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்குகிறது. இது கம்ப்யூட்டர் வாங்கும் போதே இதற்கும் சேர்த்து பணம் செலுத்தினேன். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. நான் என் கம்ப்யூட்டரில் விண் 10 இயக்க முடியுமா? இன்ஸ்டால் செய்திடலாமா?
சிராஜுதீன், உத்தம பாளையம்.
பதில்:
பல வாசகர்கள் இது போல கேள்விகளை அனுப்பி வருகின்றனர். விண்டோஸ் 10 சிஸ்டம் நிச்சயம் நல்ல வரவேற்பினைப் பெறும் எனத் தெரிகிறது. கட்டணம் செலுத்தி முறையான விண்டோஸ் 7, விண் 8 வாங்கியவர்கள், இலவசமாகவே, விண் 10 தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
இனி, விண் 10 இயங்க, குறைந்த பட்ச ஹார்ட்வேர் தேவை என்னவென்று பார்க்கலாம்.
நீங்கள் விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருந்தால், அந்த சிஸ்டத்தில் விண் 10 இயக்கலாம் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டிருப்பவர்களுக்கான குறைந்த பட்ச ஹார்ட்வேர் தேவை என மைக்ரோசாப்ட் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளது.
ப்ராசசர் குறைந்தது 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்க வேண்டும். இன்னும் வேகமாக இயங்கும் ப்ராசசர் எனில் நல்லது.
ராம் மெமரி, உங்கள் கம்ப்யூட்டர் 32 பிட் சிஸ்டம் எனில், 1 ஜி.பி.யும், 64 பிட் எனில், 2 ஜி.பி.யும் ஆக இருக்க வேண்டும். இவற்றை எப்படித் தெரிந்து கொள்வது? உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, கண்ட்ரோல் பேனல் சென்று, System and Maintenance அல்லது System and Security தேர்ந்தெடுக்கவும். அடுத்து System என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது நேரடியாக System என்பதனைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உண்டு. இதனைத் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் விண்டோவில், உங்கள் கம்ப்யூட்டர் ப்ராசசரின் வேகம், ராம் மெமரி ஆகியவை காட்டப்படும். இதனை அறிந்து நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். இருப்பினும், மைக்ரோசாப்ட், பழைய 64 பிட் சி.பி.யு. சில சுருக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்கிக் கொண்டிருந்தால், அதில் விண் 10 இயங்காது என்றும் அறிவித்துள்ளது.
கிராபிக்ஸ் கார்டைப் பொறுத்தவரை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ் கார்ட் பத்து ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டது என்றால், பிரச்னை ஏற்படாது என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. நிச்சயம் பத்து ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.
இருப்பினும், மைக்ரோசாப்ட் விண் 10 இறுதி பதிப்பினை இன்னும் வெளியிடாததால், பொறுத்திருந்து பார்க்கலாம்.

கேள்வி: நாம் ரீ சைக்கிள் பின்னில் இருந்தும், ஏற்கனவே அழித்த பைல்களை நீக்கிய பின்னும், சில அப்ளிகேஷன்கள் கண்டு பிடித்து விடுகின்றன.அது எப்படி சாத்தியமாகிறது? அப்படியானால், சில ரகசிய பைல்களை அழித்த பின்னர், அது மற்றவர் கைகளுக்குச் சென்றுவிடாதா? அப்படிச் செல்லாமல் இருக்க தீர்வென்ன?
என். மாணிக்க ராஜன், தஞ்சாவூர்.
பதில்
: உங்களுடைய கவலை எனக்குப் புரிகிறது. நாம் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்று எண்ணும் தகவல்கள் உள்ள பைல்களை அழித்த பின்னரும், அது எப்படி சில அப்ளிகேஷன்கள் மூலம் கிடைக்கின்றது? என்ற கேள்விக்கு வருவோம். பொதுவாக, பைல் ஒன்று அழிக்கப்படுகையில், அது ரீசைக்கிள் பின்னில் தங்குகிறது. பின் இங்கிருப்பதனையும் அழித்துவிட்டால், பைல் அழிக்கப்படுகிறது. ஆனால், விண்டோஸ் சிஸ்டத்தில், இத்தகைய பைல் நீக்கம் என்பது என்ன என்று பார்த்தால், உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும். பைல் ஒன்றை நிரந்தரமாக நீங்கள் அழிப்பதாக நினைத்து அழிக்கையில், அந்த பைல் அழிக்கப்படுவதில்லை. அந்த பைலை விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைக்கும் தொடர்புகளே அழிக்கப்படுகின்றன. அழித்த பைலை மீட்டுத் தரும் புரோகிராம்கள், இந்த லிங்க்கினை மீண்டும் அது நீக்கப்பட்ட வழியில் பின்னோக்கிச் சென்று கண்டறிகின்றன. பின்னர், அதன் மூலம், பைலை மீட்டுத் தருகின்றன.
எனவே, நீங்கள் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாத தகவல்கள் அடங்கிய பைல்களை அழிக்க வேண்டும் என எண்ணினால், பைலில் உள்ள தகவல்களை மாற்றிவிட்டு அல்லது நீக்கிவிட்டு, அந்த பைலை அழித்துவிடுங்கள். ரீ சைக்கிள் பின்னிலிருந்தும் நீக்கி விடுங்கள். மற்றவர்கள் இதனை எடுத்தாலும், தவறான தகவல்களே கிடைக்கும். அல்லது குறிபிட்ட பைலுக்கு பாஸ்வேர்ட் கொடுத்து சேவ் செய்து வைக்கலாம்.

கேள்வி: என் அலுவலகத்தின் ஒரு பிரிவிற்கெனத் தரப்பட்டிருக்கும் கம்ப்யூட்டரை 4 அல்லது 5 பேர் பயன்படுத்துகிறோம். ஓ.எஸ். விண்டோஸ் 7. இதில் பிரவுசர் மூலமாக தகவல்களை படிவங்களில் நிரப்புகையில், ஏற்கனவே வேறு ஒருவர் நிரப்பிய தகவல்கள் காட்டப்படுகின்றன. இதனால், அவர் பயன்படுத்திய விபரம், தகவல்கள் காட்டப்படுகின்றன. இவ்வாறு ஒருவர் அளித்துள்ள தகவல்கள் மற்றவர்களுக்குக் காட்டப்படாமல் இருக்க என்ன செய்திடலாம்?
எஸ். கோவிந்தராஜன், திருப்பூர்.
பதில்:
ஆட்டோ கம்ப்ளீட் (Autocomplete) என்று அழைக்கப்படும் வசதிதான் இது. நாம் திரும்ப திரும்ப நம் பெயர், முகவரி, போன் எண் ஆகியவற்றை கட்டங்களில் டைப் செய்து நிரப்பும் பணியை மேற்கொள்ளாமல் இருக்க, கம்ப்யூட்டரில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது பிரவுசர் தரும் வசதி இது. இதனால், ஒரு முறை சரியாக இந்த தகவல்களைத் தந்தால் போதும். அடுத்த முறை அந்த சரியான தகவல் தானாக அமைக்கப்பட்டுவிடும். ஆனால், நீங்கள் தந்துள்ள சூழ்நிலையில், ஒருவர் தந்துள்ள தகவல் அடுத்தவருக்குத் தெரியாமல் இருக்க, இந்த ஆட்டோ கம்ப்ளீட் வசதி முடக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். இந்த வசதியை நிறுத்த உங்கள் இன்டர்நெட் பிரவுசரில் சில செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். இன்டர்நெட் பிரவுசரில் Tools>Internet Options>Content>Autocomplete எனச் செல்லவும். இங்கு அனைவருக்குமான ஆப்ஷன்களை அமைக்கலாம். அல்லது நீக்கிவிடலாம்.

கேள்வி: நான் பள்ளி ஆசிரியை. என் வகுப்பு மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களை, வேர்ட் புரோகிராமில், டேபிள் உருவாக்கிப் பதிக்கையில், முதலில் அனைத்து செல்களும் ஒரே அளவில் அமைகின்றன. எனக்கு முதலில் வரிசை எண் சிறியதாகவும், அடுத்து பெயர் சற்று அகலமானதாகவும், மற்ற எட்டு செல்கள் ஒரே அளவினதாகவும் வேண்டும். இதனை எப்படி எளிதானதாக அமைக்கலாம்? அதற்கான வழிகள் என்ன?
எஸ். சந்திரிகா, சென்னை.
பதில்:
வேர்ட் புரோகிராமில் டேபிள் அமைப்பதனை எளிதாக தந்தாலும், செல்களை நம் இஷ்டப்படி அமைப்பதைச் சற்று கடினமாகவே, சுற்றி வளைத்து அமைக்கும் வகையில் தந்துள்ளது. இருப்பினும், நீங்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு உங்களுக்குத் தேவையானபடி செல்களுடன் டேபிளை அமைக்கலாம்.
1. முதலில், மூன்று செல்கள் கொண்ட ஒரே ஒரு வரிசை டேபிள் ஒன்றை உருவாக்கவும். இது உங்கள் டாகுமெண்ட்டின் ஒரு மார்ஜின் முனையிலிருந்து அடுத்த மார்ஜின் வரை நீட்டிக்கப்பட்டு கிடைக்கும்.
2. அடுத்து மவுஸைப் பயன்படுத்தி, முதல் இரண்டு செல்களின் அகலத்தினை நீங்களே சரி செய்திடுங்கள். எவ்வளவு அதிக அகலம் வேண்டுமோ, அவ்வளவு அகலத்தில் அமைத்திடுங்கள்.
3. மவுஸின் கர்சரை மூன்றாவது செல்லில் நிறுத்தவும்.
4. ரிப்பனுடைய Layout tab டேப்பினைத் திறக்கவும். மவுஸின் கர்சர் செல்லுக்குள் இருந்தால் தான், இந்த டேப் இருப்பது காட்டப்படும்.
5. அடுத்து Merge குரூப்பில், Split Cells என்ற டூலில் கிளிக் செய்திடவும்.
6. அடுத்து Number of Columns என்ற கண்ட்ரோலைப் பயன்படுத்தி, அந்த செல்லை எட்டு செல்களாகப் பிரிக்க வேண்டும் என அமைக்கவும்.
7. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: என்னுடைய டவுண்லோட் (downloads) போல்டரில் உள்ள, டவுண்லோட் செய்யப்பட்ட பைல்களை அழித்துவிடலாமா? ஏனென்றால், அவை கண்ட்ரோல் பேனலிலும் இருக்கின்றன. இவற்றை நீக்குவதால், இவை கிடைக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் அனைத்தையும் வைத்துள்ளேன். விளக்கம் தரவும்.
டி. கே. கண்ணபிரான், புதுச்சேரி.
பதில்:
நீங்கள் கண்ட்ரோல் பேனல் என்று எதற்காக இங்கு சொல்கிறீர்கள்? என்ன சொல்ல வருகிறீர்கள் என்றும் புரியவில்லை. நீங்கள் ஸ்டார்ட் மெனுவை இங்கு குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் டவுண்லோட்ஸ் போல்டரில் இருந்து, ஒரு பைலைத் திறந்திருந்தால், அவை அண்மைக் காலத்தில் திறக்கப்பட்ட பைல்கள் பட்டியலில், அந்த பைலைக் காட்டும்.
டவுண்லோட்ஸ் போல்டரில் எத்தகைய பைல்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அவற்றை நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டுமா என்பதனை முடிவு செய்திடலாம். ஏதேனும், ஒரு அப்ளிகேஷனுக்கான எக்ஸிகியூடபிள் பைல் என்றால், அந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த பின்னர், அந்த பைலை நீக்கிவிடலாம். வேறு ஏதேனும் டாகுமெண்ட், எக்ஸெல் பைல், போட்டோ, பாட்டு பைல் என்றால், அதனை இதற்கென உருவாக்கப்பட்ட தனி போல்டர்களுக்கு மாற்றிவிட்டு, இதனை அழித்துவிடலாம். அல்லது பைலைத் தேர்ந்தெடுத்து, கட் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட போல்டரில் பேஸ்ட் செய்தால், தானாகவே, இந்த பைல் அழிக்கப்படும்.

கேள்வி: பவர்பேங்க் என்று பல விளம்பரங்களில் படிக்கிறேன். அதனைக் கொண்டு மின்சார வசதி கிடைக்காத அல்லது நாம் விரும்பும் இடங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் படித்துள்ளேன். இது எதற்காக? மொபைல் போன்களுக்கு மட்டுமா? அல்லது லேப்டாப் கம்ப்யூட்டருக்கும் சார்ஜ் செய்திடலாமா? விளக்கமாகக் கூறவும். நல்ல பவர் பேங்க் ஒன்று சொல்லுங்க.
டி.வின்செண்ட், புதூர்.
பதில்:
பவர்பேங்க் (power bank) என்பது, ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகள் அடங்கிய ஒரு சாதனம். இதனை சார்ஜ் செய்து கொண்டு, பின்னர், இதனைப் பயன்படுத்தி, மொபைல் போன்களையும் அது போல குறைந்த மின் சக்தியில் இயங்கும் சாதனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் பெரும்பாலும் லித்தியம் அயன் ரீசார்ஜ் பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. இவை தான் மொபைல் போன்களிலும் உள்ளன. இதன் சக்தியை mAh என்ற அலகில் சொல்கின்றனர். milliampere hour என இதை விரித்துக் கூறலாம். ஒரு ஆம்பியர் ஹவரில் ஆயிரத்தில் ஒரு பங்கு. ஒரு பேட்டரி எந்த அளவிற்கு மின் சக்தியை தேக்கி வைக்கும் என்பதனை இது விளக்குகிறது. ஒரு சாதனத்தில் உள்ள பேட்டரி மீண்டு ரீசார்ஜ் செய்திடும் வரை எவ்வளவு நேரம் செயல்படும் என்பதனையும் இது குறிக்கிறது. எனவே அதிக mAh எனில், அதிக நேரம் அது மின் சக்தியை வழங்கும் வகையில் சார்ஜ் செய்து கொண்டு, பின்னர் வழங்கும் என்று பொருள்.
அண்மையில் ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளத்தில், Microsoft DC-21 என்ற ஒரு பவர்பேங்க் குறித்துப் படித்தேன். 6000mAh திறன் கொண்டது. விலை ரூ.3,499. அமெரிக்காவில், அண்மையில் ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் 10000 mAh திறன் கொண்ட பவர் பேங்க் விற்பனைக்கு உள்ளது என்றும், இது இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகும் எனவும் தகவல் கிடைத்தது. அமெரிக்காவில் இது 15 டாலர். ஏறத்தாழ ரூ.950. இது போல சந்தையில் நிறைய இருக்கின்றன. உங்களுக்குத் தேவையான அளவில் நல்லதாகத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

கேள்வி: புதிய கம்ப்யூட்டரை விண்டோஸ் 10 தொகுப்புடன் வாங்கத் திட்டமிட்டிருக்கும் நான், தற்போது விண் எக்ஸ்பியையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். இணையத்தில் பிரவுஸ் செய்திட, இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தி வருகிறேன். இதனை அப்டேட் செய்து இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9க்கு மாற விரும்புகிறேன். சிலர் அது வேலை செய்யாது என்கின்றனர். உண்மையா? மாறிக் கொள்ள என்ன செய்திட வேண்டும்?
என். மாலதி, பொள்ளாச்சி.
பதில்:
நல்ல கேள்வி. ஏனென்றால், பலருக்கு இந்த சந்தேகம் வந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவோர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பின்னர் வெளியான பதிப்புகள், எக்ஸ்பியில் இயங்காது. விஸ்டா பயன்படுத்துபவர்கள், பதிப்பு 9 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 வரை பயன்படுத்தலாம். விண்டோஸ் 8.1க்கு அப்டேட் செய்தவர்கள், பதிப்பு 11 ஐப் பதிந்து இயக்கலாம். நீங்களாக, அப்டேட் செய்திடக் கட்டளை கொடுத்தால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கு எது சரியானது என்று தேடி, அதற்கான பைலை இயக்கி அப்டேட் செய்து கொள்ளும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X