தாய்ப்பால் குழந்தைக்கான வாழ்க்கை பரிசு. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே, உணவாக கொடுத்த காலம் மறைந்து விட்டது. இன்றைய தாய்மார்கள், பல்வேறு சூழல்களால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகிறது. குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, எளிதில் ஜீரணமாக கூடிய உணவு, தாய்ப்பால் மட்டுமே.
தாய்ப்பால் எப்படி உருவாகிறது?
கர்ப்ப காலத்தில், மார்பகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. பால் சுரப்பிகள் உருவாகி, அவை பல்வேறு குழாய்கள் மூலம், முலைக் காம்போடு இணைகின்றன.
பால் சுரப்பதும், பாலை வெளியேற்றுதலும் மூளையின் இயக்கத்தால் நிகழும் ஹார்மோர்களின் பணிகள். எனவே, குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது, நிம்மதியான மனநிலையில் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்ததும், 'புரோலாக்டின்' எனும் ஹார்மோன், பாலை சுரக்கச் செய்யும் சுரப்பிகளை தூண்டி, பாலை உற்பத்தி செய்கிறது. குழந்தை பாலை உறிஞ்சும் செயல், மூளையை தாக்கி, 'ஆக்சிடோசின்' எனும் ஹார்மோனை வெளியேற்றுகிறது.
குழந்தை ஆரோக்கியத்துடனும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வளர, தாய்ப்பால் உதவுகிறது.
முதல் நான்கு நாட்கள் கொடுக்கும் சீம்பால், மூளைக்காய்ச்சல், போலியோ, வயிற்றுப்போக்கு, மலேரியா போன்ற நோய்களில் இருந்து, குழந்தையை காக்கும்
தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து போன்ற ஊட்ட சத்துக்களோடு, வைட்டமின்களும் நிறைந்துள்ளன.
குழந்தையின் சுவாசக்குழாய் மிக மென்மையாக இருக்கும். எனவே நோய்தொற்று எளிதில் தாக்கிவிடும் குழந்தைகளுக்கு, ஆறு மாதம் கட்டாயம், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நோய் தொற்றில் இருந்து காக்கலாம்.
ஆறு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் மற்றும் சோயா பால் அல்லது திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், எளிதில் ஜீரணமாகாமல் ஒவ்வாமை உண்டாகும்.
- ஜெ. குமுதா
பேராசிரியர் மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு துறை தலைவர்,
அரசு குழந்தைகள் நல மருத்துவமனை
94440 23733