எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தடைகளுக்கு ஆளாகாமல், செயல்படுவதற்கு பெயர் சுதந்திரம். அப்படி எண்ணும் போது அதை எண்ண சுதந்திரம் என்று கூறுகிறோம். அந்த எண்ணம், ஏனையோரை புண்படுத்தாதவரை பிரச்னை இல்லை. மாறுபட்ட எண்ணம் பிறரை புண்படுத்துமானால், அந்த எண்ணம் கண்டனத்துக்கு உரியது.
மேலும், ஓர் எண்ணம், ஒருவரின் கட்டளைக்கு அல்லது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுத்தான் உருவாக வேண்டும். அப்படி இல்லாமல் தான்தோன்றித் தனமாக எண்ணம் தோன்றும்போது அந்த சுதந்திரமான எண்ண ஓட்டங்கள், பயன் அளிப்பதை விட, சங்கடத்தை அதிகமாக தருகின்றன. சுதந்திரம் என்பது விதிமுறைகள், கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதல்ல. கட்டுப்பாட்டோடு, விதிமுறைகளுக்கு உட்பட்டு, செயல்படுவது தான் சுதந்திரம்.
எனவே, சுதந்திரத்தை, பொறுப்புணர்வோடு கையாள வேண்டும். பொறுப்பு அதிகமாக, அதிகமாக, சுதந்திரம் கட்டுக்குள் அடங்க வேண்டியிருக்கிறது. கட்டுப்பாட்டோடு சிந்திக்கும்போது, அது சுதந்திரமான சிந்தனையல்ல. கற்பனையாக சிந்தித்தால் கூட சிந்தனைக்கு, கட்டுப்பாடு தேவைபடுகிறது.
சுதந்திர சிந்தனை, சரிபார்க்கப்பட்ட சிந்தனையாக மாறும்போது, சுதந்திரம் பறிபோய்விடுகிறது. எண்ண சுதந்திரம் ஊக்குவிக்கப்பட வேண்டும். அது சாத்தியமா என்று சிந்திக்க வேண்டும். எனவே, சுதந்திர சிந்தனை மற்றும் எண்ண சுதந்திரம் வேண்டும் என்பதை விட, பொறுப்போடு கூடிய எண்ண சுதந்திரம்தான் சால சிறந்தது.
- மா. திருநாவுக்கரசு, மனநல மருத்துவர், மனநலம் கிளினிக்
94440 34647