அம்மா, அப்பாவிற்கு ஒரே பெண் நித்யா. சிறிய குடும்பம். அப்பா கூலி வேலை சென்று கஷ்டப்படும் பொருளாதார நிலையில் இருந்தாலும், நித்யா, தரமான பள்ளியில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.
படிப்பில் படுசுட்டி. ஆனால் அடிக்கடி உடல்நலக் குறைவால், களையிழந்து சோர்ந்து போய் காணப்பட்டாள். படிப்பில் மேற்கொண்டு ஆர்வம் காட்ட முடியவில்லை. உடல் எடை குறைந்துகொண்டே போனது. காரணம் தெரியாமல் பெற்றோர் கவலைப்பட்டு, என்னிடம் அழைத்து வந்திருந்தனர்.
பொதுவான மருத்துவப் பரிசோதனையில், நித்யாவின் பிரச்னையை கண்டுபிடிக்க முடியவில்லை. பின், சளி பரிசோதனை மற்றும் நெஞ்சக எக்ஸ்-ரேவும் எடுக்கப்பட்டு, அதன் முடிவுகளில், நித்யாவிற்கு காசநோய்க்கு காரணமான, பாக்டீரியா தொற்று இருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது.
எக்ஸ்-ரேவில், நெஞ்சு பகுதி முழுவதும், பனி படர்ந்தது போல, சளி இருந்தது. உடனடியாக, சிகிச்சை ஆரம்பித்தும் பலனில்லை. காசநோய்க்கு பலியானாள் நித்யா.
அவளது மரணத்திற்கு முக்கிய காரணம், ஊட்டச்சத்து குறைபாடு. என்னிடம் சிகிச்சைக்காக வந்தபோதே, உடல் மெலிந்து பலவீனமாக இருந்தாள். காசநோய் வர முக்கிய காரணமே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவுதான். அந்த நோய் காற்றின் மூலம் பரவும், பாக்டீரியா தொற்று. மிகவும் வலிமையான பாக்டீரியா கிருமியின் தாக்கத்தால், காசநோய் வருகிறது. அதனால், நீண்டநாட்களுக்கு கட்டாயம் மருந்து சாப்பிட வேண்டும்.
காசநோய்க்கான பாக்டீரியா முற்றிலுமாக குணமடையும் வரை, மருந்து சாப்பிட வேண்டும். இல்லை என்றால், உடம்பில் தங்கிய ஒரு சதவீத பாக்டீரியா கூட, மாத்திரையை நிறுத்திய உடன், வலிமை பெற்று முன்னை காட்டிலும் மோசமாக தாக்க ஆரம்பித்து விடும்.
காசநோய் தாக்கியவர்களின் அருகில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது. காரணம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளாக இருந்தால், இந்நோய் காற்றின் மூலம் எளிதாக பரவும்.
சுகாதாரமான இருப்பிடமும், சத்தான உணவும், முறையான சிகிச்சையும் இருந்தால், காசநோயை குணப்படுத்தலாம். காசநோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் தினமும் உண்ணும் உணவில் முட்டையின் வெள்ளை கரு, பால், பழங்கள், காய்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு, தமிழகத்தில் காசநோய் பாதிப்பு இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டோரின் எண்ணிக்கை 6.60 லட்சம் பேர். இதில், முந்தைய ஆண்டை விட, 50 ஆயிரம் பேர் அதிகம் என்கின்றன கணக்கெடுப்புகள். காசநோய்க்கான அறிகுறியோடு யாராவது வந்தால் உடனே நித்யாவின் நினைவு வருவதை தடுக்க முடியவில்லை. காரணம், மரணத்தை தழுவ வேண்டிய வயதா நித்தியாவினுடையது?
- மா. வெங்கடேசன்
குழந்தைகள் நல மருத்துவர்
9840243833