சுகபோக வாழ்வு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
சுகபோக வாழ்வு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மார்
2015
00:00

மாதம் மும்மாரி மழை பொழியும் என்பர் அல்லவா? விஜயநகரத்தில் மழைக்குப் பஞ்சமே இல்லை. நல்ல மழைவளம் மிக்க நாடாகத் திகழ்ந்தது. சாதாரணமாக அரசரும், அப்பாஜியும் நாட்டின் வளம் காணச் செல்வர். இரண்டு நாட்களாகப் பெய்த கன மழைக்குப் பின்னர், அன்று இருவரும் மாறுவேடம் அணிந்து சென்று கொண்டிருந்தனர்.
மழை பெய்த காரணத்தால், புற்கள் நன்றாக தழைத்து வளர்ந்து, கன்று காலிகள் நன்றாக மேய்ந்து கொண்டிருந்தன. விவசாயிகள் உழவுக்குத் தயாராயினர்.
"சித்திரைப் பட்டம்' என்பார்களே, சித்திரை மாதம் பத்தாம் நாள் வயல்களில் விதை விதைக்க வேண்டும். பங்குனி மாதம் பெய்த மழையில் வயல்கள் அனைத்தையும் நன்றாக உழுது வைத்து விடுவர். ஆக, உழவுக்குத் தயாராயினர்.
மழை பெய்து புற்கள் தழைத்து நின்றதால், அந்தப் புல்தரையில் இளைஞன் ஒருவன் ஆனந்தமாகப்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.
"குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. இரவெல்லாம் கண்விழித்து வேலை செய்திருப்பான் போலும்' என்று மன்னர் எண்ணிக் கொண்டார்.
இருவரும் அந்த இளைஞன் பக்கம் சென்றனர். அவன் கண்விழிக்கவில்லை. களைப்பு மிகுதியால்தான் இவ்விதம் நன்றாகத் தூங்குகிறான் என்று எண்ணிக் கொண்டனர்.
""ஓரளவு குளிர்ந்த காற்று அடித்தாலும் நம்மால் அதைத் தாங்க முடியவில்லையே... இவன் இவ்விதம் கவலையில்லாமல் படுத்து உறங்குகிறானே, இவனால் இவ்விதம் படுத்து உறங்க எவ்விதம் முடிகிறது,''என்று தன் சந்தேகத்தை அப்பாஜியிடம் கேட்டார் மன்னர்.
அப்பாஜி புன்னகை புரிந்த வண்ணம், மன்னருக்குப் பதிலளித்தார்.
""மன்னர் அவர்களே, இயற்கையுடன் இயற்கையாக ஒன்றி வாழ்பவர்களை எந்தக் குளிரும் ஒன்றும் செய்து விடாது. நாமெல்லாம் இயற்கைக்குப் பயந்து சுகம் தேடி அலைகிறோம். அவர்கள் நம்மைப் போன்று அல்லர். எதையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்வதில் இன்பம் காண்பவர்கள்; அவர்களை எந்தக் குளிரோ, வெயிலோ எதுவும் செய்துவிடாது. வெற்று உடம்பினராய் வாழ்வர், போர்த்திக் கொள்ள மாட்டனர், இயற்கை தரும் காய்கனி வகைகளை உண்டு நிம்மதியுடன் வாழ்வர். ஆற்று நீரும், ஊற்று நீரும், அருவி நீரும், அவர்களுக்கு ஆனந்த வாழ்வு தருபவையாகும். அவர்களுக்கு எந்தவித உடல் உபாதையும் ஏற்படுவது இல்லை. இயற்கையோடு இயற்கையாக வாழ்வதால் அவர்கள் என்றுமே நலமுடன் வாழ்கின்றனர்.
""அவர்களுடையே எளிய உணவுப் பழக்கமும் ஒரு முக்கியமான காரணமாகும். இவ்விதம் அவர்கள் வாழ்வதால் தான், நோய் நொடியின்றி இனிதாக வாழ்கின்றனர். இந்த இளைஞனும் இயற்கையோடு இயற்கையாக ஒன்றி வாழ்வதால்தான், அதாவது காற்றிலும், மழையிலும் அவன் காணும் சுகம்தான் இவனை நலமுடன் வாழ வைக்கிறது. இவனுக்கு ஈரமான புல்தரையும், இளம் வெயிலும் இன்பத்தையே தருபவையாகும். இவனை நாம் அழைத்துச் சென்று கொஞ்சம் சுகபோக வாழ்வைக் கொடுத்தோமென்றால் இயற்கை வாழ்விலிருந்தும் இவனைப் பிரித்து விடுவதால் நோய் வந்து உடனே இவனைத் தாக்க ஆரம்பித்து விடும்,'' என்று நீண்ட உரை யாற்றினார் அப்பாஜி.
இவ்விதம் கூறியவைகளையெல்லாம் மன்னர் எண்ணிப் பார்த்தார். இந்த இளைஞனை அழைத்து வந்து அவனுக்கு ஒரு வேலையைக் கொடுத்து, அவனை இயற்கை வாழ்விலிருந்து பிரித்துப் பார்க்கலாமே என்று எண்ணிய மன்னர், அப்பாஜியிடம் அந்த இளைஞனை அழைத்து வர ஏற்பாடு செய்யச் சொன்னார்.
அந்த இளைஞன் அழைத்து வரப்பட்டான். அவன் பயந்தவாறு வந்து நின்றான். திடீரென்று மன்னர் அழைப்பதால் என்னவோ, ஏதோ என்று பயந்து போனான்.
அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மன்னர், அவனுக்கு அரண்மனையில் ஒரு வேலை தரப் போவதாகக் கூறினார், அதை கேட்டு அவன் உண்மையில் திகைத்துத்தான் போனான்.
அவனுக்கு அரசருடைய படைப் பிரிவில் வேலை கிடைத்தது. ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவனுக்கு அரண்மனையில் வேலை கிடைத்ததால், அவன் உண்மையிலே மகிழ்ச்சியடைந்தான்.
""மன்னர் பெருமானே, இந்த ஏழை மீது இரக்கம் கொண்டு இத்தகைய ஒரு நல்ல வாய்ப்பைத் தந்தமைக்கு நான் உண்மையில் நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலும், என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடையவனாகவும் இருப்பேன்!'' என்றான்.
மாமன்னர் கிருஷ்ண தேவராயரும், அப்பாஜியும் சேர்ந்து திட்டமிட்டு முதலில் அவனுக்குச் சுகபோக வாழ்வைக் கொடுத்து அவனுக்குத் துன்பம்தான் அளித்தனர்.
அவன் சுகபோக வாழ்க்கையில் ஈடு பட்டான். நல்ல வசதியான வீட்டில் தங்கிச் சுகம் கண்டான்.
நல்ல வசதியான முறையில் வாழ்வதற்கு ஒரு வீடு அளிக்கப்பட்டது. எல்லா வசதிகளையும் கொண்ட வீட்டில் தன்னுடைய தாயாருடன் குடி வந்தான். அவன் கனவிலும் எதிர்பாரத அளவில் நல்ல வேலையும், கை நிறையச் சம்பளமும் கிடைத்ததால், அவனுடைய வாழ்க்கைச் சூழல் முற்றிலும் மாறி விட்டது.
இவ்விதமாகச் சுகபோக வாழ்வு வாழ ஆரம்பித்து ஒரு வருடம் சென்றுவிட்டது. அவனுடைய அப்போதைய உடல் நலம் பற்றியும், இயற்கையின் இதமான சூழ்நிலையால் தாக்கம் ஏதாவது ஏற்படுமா என்பது பற்றியும் மன்னரும், அப்பாஜியும் எண்ணலானார்கள்.
அப்போது நல்ல மழைக்காலம் என்பதால் குளிர் கொஞ்சம் கடுமையாக இருந்தது. வாடைக் காற்றும், பலமாக வீசிய வண்ணம் இருந்தது.
அந்த நிலையில் பணியாளன் ஒருவனை அனுப்பி அந்த இளைஞனை வரவழைத்தனர்.
அவன் வந்ததும், ""இளைஞனே, நீ ஒரு முக்கிய பணியைச் செய்து முடிக்க வேண்டும். இதை மிகவும் ரகசியமாகவே செய்ய வேண்டும். இந்தப் பணியைச் செய்யும் முழு ஆற்றலையும் பெற்றவன் நீ என்பதை உணர்ந்து தான் இந்தப் பணியை உன்னிடம் ஒப்படைக்கிறோம். இந்தக் கடிதத்துடன் இன்றிரவே நீ புறப்பட்டுச் செல்ல வேண்டும்!'' என்று கூறி அவன் செல்ல வேண்டிய இடம் பற்றியும், சந்திக்க வேண்டிய நபர் பற்றியும் அவனிடம் கூறப்பட்டது.
அந்த இளைஞன் கடிதத்தையும், முகவரியையும் பெற்றுக் கொண்டான்; மகிழ்ச்சியுடன் தன் வீடு சென்று தன் தாயாரிடம் விஷயத்தைக் கூறிக் காலையில் புறப்படப் போவதாகக் கூறினான்.
அவன் வெற்றியுடன் முடித்து விட்டுத் திரும்புவான் என்று தான் எண்ணினார்கள் மன்னரும், அப்பாஜியும். ஆனால், அவன் வேலையை முடித்த மறுநாளே வர வேண்டியவன் வரவில்லை.
சந்தேகப்பட்ட அப்பாஜி அவனுடைய வீட்டிற்கு ஒரு பணியாளை அனுப்பிப் பார்த்தார். அவன் உடல் நலமின்றி அவதிப் பட்டுக் கொண்டிருப்பதாக அந்தப் பணியாள் வந்து கூறினான்.
மன்னர் பெரிதும் ஆச்சரியப்பட்டார். ஆனால், அப்பாஜி ஆச்சரியப்படவில்லை. அவர் இதை எதிர்பார்த்ததுதான்.
""இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தவனை அங்கிருந்து பிரித்து வந்து அவனுக்குச் சுகபோக வாழ்வு அளித்ததால், அவனால் குளிரையும், மழையையும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவன் ஈரத் தரையில் படுத்து உறங்கியவன்தான்; மழைச்சாரலில் நனைந்தவன்தான். அது ஒரு காலம்.
""ஆனால், இப்போதோ... அவன் கட்டிலில் படுத்துச் சுகம் அனுபவிக்கத் தொடங்கினான்; கம்பளிப் போர்வை போர்த்தி படுக்க ஆரம்பித்தான். கையையே தலையணையாக வைத்துப் படுத்தவன், நல்ல இலவம் பஞ்சுத் தலையணை வைத்துப் படுக்க ஆரம்பித்தான். பழைய சோற்றை உண்டு வந்த அவன், இப்போது சூடுபறக்க இட்டிலியும், வடையும் சாப்பிட ஆரம்பித்தான்; அதுமட்டுமின்றி, நன்றாகப் பசியெடுத்த பின்னரே உண்டு வந்த அவன், இப்போது நேரம் பார்த்துச் சாப்பிட ஆரம்பித்தான்.
""கடைசியில் எல்லாமுமாகச் சேர்ந்து என்னவாயிற்று. அவனுடைய நோய் எதிர்ப்புச் சக்தி முற்றிலும் அழிந்து விட்டது. ஆம், அவனை விட்டு அந்த மகத்தான சக்தி சிறுகச் சிறுகச் சென்றுவிட்டது. எனவே, துன்பம் அடைய ஆரம்பித்தான்!''
இவைகளை எல்லாம் உணர்ந்து கூறிய அப்பாஜியை, மன்னர் கிருஷ்ண தேவராயர் பெரிதும் பாராட்டினார்.
பின்னர், அரண்மனை மருத்துவரை அழைத்து அந்த இளைஞனுக்கு சிகிச்சையளிக்கக் கூறினர்.
அவனோ, தனக்கு எந்த மருந்துமே தேவையில்லையென்றும் பழையபடியே இயற்கை வழி முறைகளைப் பின்பற்றப் போவதாகக் கூறினான்; அவன் கூறியது போன்றே தன்னைக் குணப்படுத்திக் கொண்டான்; மேலும், இயற்கையுடன் ஒன்றி வாழப் போவதாகவும் உறுதியுடன் கூறி விட்டு தன் ஊருக்கேச் சென்றார்.
***

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X