தென் ஆப்பிரிக்காவின் வைர நிறுவனமான "டீ பீர்ஸ்'ன், தலைவர் சர்ஜூலியஸ் வெர்னர். மிகத்திறமை சாலியான வெர்னர், கவலையோடு இருந்தார். காரணம், 1906ம் ஆண்டு அவருக்கு ஒரு தகவல் கிடைத்தது. பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த லிமோயின் என்பவர், முதல் தரமான செயற்கை வைரங்களை, "ஒரு வைரம் ஒரு பென்னி' என்ற விலையில் தயாரிக்கும் முறையைக் கண்டறிந் துள்ளார் என்பதுதான் அந்தச் செய்தி.
வைரம் மிகவும் மதிப்புள்ளது. அது கிடைப்பது அரிதாகையினால் போலி வைரங்கள் ஏராளமாகத் தயாரிக்கப் பட்டு சந்தையில் வெள்ள மெனப்பாயு மானால், வைர நிறுவனமான டீபீரின் மார்க்கெட் அழியும். ஒரே இரவில் வைரத்தொழிலும் அழியும். ஜூலியஸின் கவலை இதனால்தான்.
சுறுசுறுப்பாகச் செயல்படலானார் ஜூலியஸ். செயற்கை வைர கண்டு பிடிப்பாளரான லிமோயினோடு தொடர்பு கொண்டார். தன் நண்பர் களோடு அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். வைர வியாபாரத்தில் புகழ்பெற்ற நபர் களுடன் லிமோயினை சந்திப்ப தென்றும், தன் கண்டுபிடிப்பு நிஜம் என்பதை அவர் நிரூபித்தால், அவர் அதற்கு என்ன விலை கேட்டாலும் வாங்கி விடுவது என்ற முடிவுக்கு வந்தார் ஜூலியஸ்.
நிஜமாகவே லிமோயின் பட்டைத் தீட்டப்படாத வைரக்கற்களை உருவாக்கி இருந்தான். அதைப் பார்த்து திகைத்தார் ஜூலியஸ்.
குறிப்பிட்ட நாளில் சந்திப்பு நிகழ்ந்தது. லிமோயின் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதை தவிர்க்க, ரசாயனக் கலவைகளை கலக்கும் பணியை தம் ஆளான ஜாக்ஸன் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் ஜூலியஸ். லிமோயினும் அதை ஏற்றுக் கொண்டான். லிமோயினின் கட்டளைப்படி ரசாயனங்களை மண்பாத்திரத்தில் ஊற்றி அதை மின்சார உலையின் மீது வைத்தார் ஜாக்ஸன். கலவை அரை மணிநேரம் கொதித்ததும் உலையி லிருந்து மண்பாத்திரம் வெளியில் எடுக்கப்பட்டுக் குளிர விடப்பட்டது. கட்டியான பொருள் உடைக்கப்பட்டது ஜாக்ஸனால்!
பார்வையாளர்கள் பிரமிக்கும்படி ஏராளமான வைரக்கற்கள் பட்டை தீட்டப்படாத வைரங்கள் சிதறின. புன் முறுவலுடன் லிமோயின் மறுபடியும் ரசாயனங்களை ஜூலியஸே கலக்கும் படி கேட்டுக் கொண்டான். அவரும் அதற்கு இசைந்தார். இம்முறை முன்பை விட வெற்றிக்கரமானதா யிருந்தது. இருபது நேர்த்தியான வைரங்கள் உருவாக்கப் பட்டன.
ஜூலியஸும், அவர் நண்பர்களும் லிமோயினின் செயற்கை வைரத் தயாரிப்பை நம்பினர். ஆனாலும் தயாரான செயற்கை வைரங்களை, தாம் எடுத்துப் போய் நிபுணர்களின் ஆராய்ச் சிக்கு உட்படுத்த அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார். லிமோயினும் அவர் வேண்டுகோளுக்கு அனுமதி யளித்தான்.
செயற்கை வைரக்கற்கள் லண்டனில் உள்ள வைர நிபுணர்களின் குழுவிற்கு அனுப்பப்பட்டன. நிபுணர் குழு பரிசீலித்து, அதன் தரத்தை உறுதி செய்ததோடு, அந்த வைரங்கள் தென் ஆப்பிரிக்காவின் ஜாகர்பாண்டீன் சுரங்கத்திலிருந்து கிடைத்த வைரங்கள் என்றும் கருத்துத் தெரிவித்தனர். ஆனாலும் வைர வியாபாரப் பெரும் புள்ளிகளின் மனதில் ஜூலியஸைத் தவிர ஏதோ ஒரு சந்தேகம் நெருட, லிமோயினிடமிருந்து செயற்கை வைரத் தயாரிப்பு மர்மத்தையும், உரிமையை யும் பெறுவதிலிருந்து பின் வாங்கி விட்டனர். ஆனால், ஜூலியஸ் முன்பே திட்டமிட்டிருந்தபடி, லிமோய்னியின் நேர்மையில் திருப்தியடைந்து அவனிட மிருந்து உரிமையைப் பெறுவதில் ஆர்வம் காட்டினார்.
ஆனால், லிமோய்னி பெரும் தொகை பெற்றுக் கொண்டு தன் ரகசியத்தை வெளியிடவோ, விற்கவோ விரும்பவில்லை. பிரான்ஸில் ஒரு தொழிற்சாலையை உருவாக்க ஜூலியஸ் உதவினால், அத்தொழிற் சாலையில் தான் சிறிய அளவில் செயற்கை வைரங்களை உருவாக்கு வதாகவும் உலகச் சந்தையில் வைரங் களுக்கான விலையில் குறைவாக (சற்றே) அதை விற்பனை செய்து, கிடைக்கும் லாபத்தை இருவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்றான் லிமோய்னி.
சிறிது யோசனைக்குப் பின் ஜூலியஸ், லிமோய்னியின் யோசனையை ஏற்றுக் கொண்டு பிரான்சில், "பா' என்னுமிடத்தின் அருகில் தொழிற்சாலை அமைக்க பெருந் தொகையை முன்பணமாகக் கொடுத்தார். எந்திர சாதனங்கள் மற்றும் பல்வேறு செலவுகளுக்கு மேலும் அடிக்கடி பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பல மாதங்கள் உருண்டோடின. முதல் கட்ட செயற்கை வைரம் தயாரான செய்திக்காகக் காத்திருந்து அலுத்துப் போன ஜூலியஸ், தொழிற்சாலைக்கு திடீர் விஜயம் செய்வதென்று தீர்மானித்தார்.
அதன்படி, "பா'வுக்குச் சென்ற போது அவர் பயந்தது உண்மையாகியது. தொழிற்சாலை அமைக்க, 50 ஆயிரம் பவுன்களுக்கு மேல் கொடுத்திருந்தார். ஆனால், அங்கு அவர் கண்டதோ மோசமான நிலையில் ஒரு தகரக் கொட்டகை! பணியாளர்களின் ஊதியம் என்று ஏகப்பட்ட பணம் பெற்றிருந்தான் லிமோய்னி. ஆனால், அங்கு யாருமே இல்லை. லிமோய்னி ஒரு ஏமாற்றுப்பேர் வழி; நாம் ஏமாந்து விட்டோம் என்று உறுதிசெய்து கொண்ட ஜூலியஸ், அவனைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.
தான், "பா'விற்கு திடீர் விஜயம் செய்ததைக் குறிப்பிடாமல் அவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். ஒரு பெரும் செல்வந்தர் வைர வியாபாரத்தில் குதிக்க விரும்புவதாகவும் பெரும் செல்வத்தை முதலீடு செய்ய ஆசைப்படும் அவர், திருப்தியடையும்படி உன் செயற்கை வைரத் தயாரிப்பு முறையை அவருக்கு நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டார். ஜூலியஸின் கடிதத்தைப் பார்த்த லிமோய்னி வலுவில் தன்னைத் தேடிச் செல்வம் வருகிறது என்ற குஷியில் துள்ளிக் குதித்தான். ஜூலியஸ் குறிப்பிட்ட பெரும் பணக்காரர், லண்டனில் புகழ் பெற்ற செப்பிடுவித்தைக்காரர் என்பது லிமோய்னிக்குத் தெரியாது.
லிமோய்னி, மூசைக்குள் நிஜமான வைரக்கற்களைப் போடும் போது கையும் களவுமாக அவர் பிடித்துவிட்டார். கண்கட்டுவித்தை காட்டும் அவரை லிமோய்னி யினால் ஏமாற்ற முடிய வில்லை. பிறகு என்ன? வழக்கு; விசாரணை.
பாரிஸ் நகர வைர வியாபாரி 1906ல் லிமோய்னியின் மனைவிக்கு நிஜமான வைரங்களை விற்றதாக வாக்கு மூலம் கொடுத்தார். நிஜ வைரங்களை வைத்து, செயற்கை வைரம் உருவாக்குவதாக நாடக மாடிய விஷயம் வெட்ட வெளிச்ச மாகவே, அடுத்த ஆறு ஆண்டுகள் லிமோய்னி சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
***