பார்த்துட்டேன்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
பார்த்துட்டேன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மார்
2015
00:00

அரியாங்குப்பம் என்னும் ஊரில் யுகேந்திரன் என்பவன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவன் சரியான முட்டாள்.
ஒருநாள்-
""நம்ம ஊருக்குப் முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். அருமையாகப் பக்திச் சொற்பொழிவு செய்கிறார். மக்கள் எல்லாரும் அவரிடம் சென்று வாழ்த்துப் பெறுகின்றனர். நீங்களும் அவரிடம் சென்று எப்படி வாழ வேண்டும் என்று கேளுங்கள்,'' என்றாள் மனைவி.
முனிவர் இருக்கும் இடத்தை அடைந்தான் யுகேந்திரன்.
"திருநாமத்தின் பெருமை' பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் முனிவர்.
அவரின் அருகில் சென்ற அவன், ""ஐயா! நான் எப்படி வாழ வேண்டும். எனக்கு ஏதேனும் அறிவுரை தாருங்கள்,'' என்றான்.
அவன் குறுக்கிட்டதை விரும்பாத முனிவர், ""பிறகு சொல்கிறேன்,'' என்று சொல்லி விட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தார்.
முட்டாளான அவனோ மீண்டும், மீண்டும் அவரிடம் அறிவுரை தருமாறு வேண்டினான்.
அவன் தொல்லை தாங்க முடியாமல், ""நாமம் போட்ட ஒருவரை நாள்தோறும் பார்த்த பிறகே நீ உணவு உண்ண வேண்டும். அப்போதுதான் உனக்கு நல்லது நடக்கும். போய் வா,'' என்று எரிச்சலுடன் சொன்னார் முனிவர்.
இதைக் கேட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான். அன்று முதல் அவன் அந்த ஊரில் நெற்றியில் நாமம் போடுபவர் யார், யார் என்று கவனித்தான்.
ஒவ்வொருவர் வீட்டுக் கதவையும் நள்ளிரவில் தட்டி அவர்களை எழுப்பினான் யுகேந்திரன்.
"ஏன் இந்த நள்ளிரவில் எங்களை எழுப்பினாய்?'' என்று அவர்கள் கோபத்துடன் கேட்டனர்.
"ஐயா! காலையில் எழுந்தவுடனே நான் சாப்பிட வேண்டும். நாமம் போட்டவரைப் பார்த்து விட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்று முனிவர் சொல்லி இருக்கிறார். உங்களைப் பார்த்து விட்டேன். நீங்கள் இனித் தூங்குங்கள்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
இப்படியே, அவன் நள்ளிரவில் நாள்தோறும் அவர்களை எழுப்பிக் கொண்டிருந்தான்.
அவன் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைத்த அவர்கள், நெற்றியில் நாமம் போடுவதையே விட்டு விட்டனர்.
நாள் முழுவதும் அலைந்த அவனுக்கு நாமம் போட்ட ஒருவரும் கிடைக்கவில்லை. "பக்கத்து ஊரிலாவது யாராவது இருக்கின்றனரா... என்று பார்த்துவிட்டு வருவோம். இல்லாவிட்டால், பட்டினி கிடக்க வேண்டியதுதான்' என்ற எண்ணத்தில் பக்கத்து ஊரை நோக்கி நடந்தான் அவன்.
அப்போது பக்கத்து ஊர்க்காரன் ஒருவன் கிணறு வெட்டிக் கொண்டிருந்தான். அங்கே அவனுக்கு விலை மதிப்பற்ற புதையல் கிடைத்தது.
"யாருக்கும் தெரியாமல் இதை எப்படித் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்வது. உண்மை தெரிந்தால் அரசே எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்ளுமே... என்ன செய்வது?' என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன்.
அச்சமயத்தில் கிணற்றை எட்டிப் பார்த்த முட்டாளுக்கு, உள்ளே இருந்தவனின் நெற்றியில் இருந்த பெரிய நாமம் கண்ணில் பட்டது.
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த அவன், "பார்த்து விட்டேன்! பார்த்து விட்டேன்!'' என்று கத்திக்கொண்டே ஊரை நோக்கி ஓட்டம் பிடித்தான்.
கிணற்றுக்குள் இருந்தவன், தான் புதையல் எடுத்ததைத்தான் அவன் பார்த்து விட்டான் என்று நினைத்தான். எப்படியாவது பாதிப் புதையலை அவனுக்குக் கொடுத்துச் சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.
புதையலில் பாதியை எடுத்துக்கொண்டு முட்டாளின் வீட்டிற்குள் சென்று கதவை தட்டினான்.
முட்டாளின் மனைவி கதவைத் திறந்தாள்.
அவளிடம் நடந்ததைச் சொன்ன அவன் புதையலைக் கொடுத்தான்.
தன் கணவனின் முட்டாள்தனத்தால், பெருஞ்செல்வம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தாள் மனைவி.
***

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X