எம்.ஆர். ராதா - கலகக்காரனின் கதை (7)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2015
00:00

படப்பிடிப்பில் இயக்குனர் தன்னைப் பழி வாங்க நினைக்கிறார் என்பது ராதாவுக்கு புரிந்தது. வேறு வழியில்லை என்று நினைத்தபடியே, மூன்றாவது மாடியிலிருந்து, கீழே நின்ற குதிரை மேல் குதித்தார்...
குதிரை விலகி விட்டதால், முட்டி கழண்டு போனது. ராதாவால் எழுந்து உட்காரக் கூட முடியவில்லை.
கண் விழித்தபோது ராதா, ஜெனரல் ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தார். எலும்பு முறிவு என்று சொன்ன டாக்டர், 'கட்டுப்போடும் வசதி இங்கில்ல; புத்தூருக்குப் போங்க...' என்று சொல்லி விட்டார். புத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ராதா.
இது குறித்து பின்னாளில் அவர் குறிப்பிடும்போது, 'இச்சம்பவத்திற்கு பின், நான் வெறி கொண்டவனைப் போல் மாறி விட்டேன். இயக்குனர் சொல்வதையோ, வசனகர்த்தா சொல்வதையோ கேட்பதில்லை. சூடு பாலைக் குடித்த பூனை, எதைக் கண்டாலும் குடிக்கப் பயப்படுமே, அப்படிப் பயந்தேன். இதுதான் என் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம். அதாவது, யார் பேச்சையும் கேட்பதில்லை; யார் யோசனையையும் ஏற்றுக் கொள்வதில்லை...'
ராஜசேகரன் படப்பிடிப்பு ஆறு மாதங்கள் நின்று போனது; மீதி காட்சிகளை ராதாவை உட்கார வைத்தே எடுத்து முடித்தனர். படம், 1937ல் வெளியானது; சரியாக ஓடவில்லை.
கால் குணமான பின் ராதாவுக்குத் தோன்றிய ஆசை, சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்பது தான். தொழில் தெரிந்த நண்பர்கள் சிலரை சேர்த்துக் கொண்டார். பைனான்சுக்கு இரண்டு பேரை பிடித்துக் கொண்டார். படத்துக்கு வைத்த பெயர், பம்பாய் மெயில். அப்போது தான் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் கட்டி முடித்திருந்தனர். அங்கு வைத்து படப்பிடிப்பு மிக மெதுவாக வளர்ந்து முடிந்தது. அங்கு ரிலீஸ் ஆன பின், படுவேகமாக பெட்டிக்குள் திரும்பியது. ராதாவுக்குச் சொந்தமாகப் படம் எடுக்கும் ஆசையும் விட்டுப் போனது.
மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ட்டிஸ்டாக மாறி, சந்தனத்தேவன் மற்றும் சத்தியவாணி போன்ற படங்களில் நடித்தார். அடுத்து, அவர் மாடர்ன் தியேட்டர்சில் நடித்த படமான, சோகாமேளர், 1942ல் ரிலீஸ் ஆனது.
மாடர்ன் தியேட்டர்சை ஒரு ஜெயில் போலத் தான் நடிகர்கள் நினைப்பர். காரணம், சேலம் மலையடிவாரத்தில் அமைந்த ஸ்டுடியோவுக்குள் நுழைந்து விட்டால், கம்பெனி ஆர்ட்டிஸ்ட்கள் நினைத்த நேரத்தில் வெளியே வர முடியாது. அதன் அதிபர், டி.ஆர்.சுந்தரம், மிகவும் கண்டிப்பானவர்.
பி.எஸ்.ஞானம் என்ற நடிகை, அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவரோடு பேச எல்லாரும் போட்டி போடுவர். ஆனால், காவலை மீறி எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராதா, 'ஒரு பெண்ணு கிட்ட பேச இத்தனைக் கட்டுப்பாடா... இந்தப் பசங்களும் ஏன் தான் இப்படி மயக்கமா அலையறாங்களோ! நான், இவளை இங்கிருந்து கடத்திட்டுப் போகப் போறேன். இவளை நாடகத்துல நடிக்க வைச்சா நல்லாயிருக்குமே... செஞ்சு காட்டுறேன்...' என்று தனக்குள்ளேயே சவால் விட்டுக் கொண்டார்.
ஞானத்திடம் இயன்றவரை கண்களாலும், சமயம் கிடைக்கும்போது, சைகைகளாலும் பேசினார். அவரது சம்மதம் கிடைத்தது. படு கச்சிதமாக திட்டுமிட்டு, ஒரு நள்ளிரவில், எல்லாக் கட்டுக்காவல்களையும் மீறி, ஞானத்துடன் மாடர்ன் தியேட்டர்சில் இருந்து தப்பித்து, பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்தார் ராதா.
அடுத்து என்ன செய்வது என்று ராதாவுக்குத் தெரியவில்லை. அச்சமயம், பொள்ளாச்சிக்கு யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை வந்தார். பழைய கோபத்தையெல்லாம் மறந்து, இருவரும் பேசிக் கொண்டனர். ராதாவிடம், பொன்னுசாமி பிள்ளை, 'அதுல பாரு ராதா... பரமக்குடியில நான், ஒரு ரவுடி கான்ட்ராக்டர்கிட்ட சிக்கிக்கிட்டேன். அவன் பேசுன பணத்தையும் ஒழுங்காத் தர மாட்டேங்கிறான்; அடுத்த ஊருக்குப் போய் நாடகம் போடவும் விடமாட்டேங்கிறான். நீதான் காப்பாத்தணும்...' என்றார்.
'சரி... வாங்க போலாம்...' என்று கிளம்பினார் ராதா. இருவரும் சேலத்துக்கு வந்தனர். அங்கு ஓரியண்டல் தியேட்டர்சில் நாடகம் போட அனுமதி வாங்கி, 500 ரூபாய் கடனாக பெற்று, திருச்சிக்குச் சென்றனர். அங்கு, ஒரு நண்பரிடம், 200 ரூபாய் வாங்கினர்.
'நான் அங்க வந்தா சரிப்படாது; நீ எல்லாத்தையும் அழைச்சிக்கிட்டு இங்கே வந்துரு. இங்கயிருந்து ஒண்ணா சேலத்துக்குப் போயிடலாம்...' என்றார் பொன்னுசாமி. சரி என்று கூறி, ராதா மட்டும் பரமக்குடிக்குக் கிளம்பினார்.
கான்ட்ராக்டரைச் சந்திக்கச் சென்றார். ராதா வந்ததும், நாடகக் குழுவினருக்கெல்லாம் நிம்மதி. குறிப்பாக, அப்போது அந்த குழுவிலிருந்த (சிவாஜி) கணேசனுக்கு ஏக சந்தோஷம். ஏனென்றால், ராதாவின் துணிச்சல் பற்றி எல்லாரும் அறிந்திருந்தனர். அத்துடன், படங்களில் நடித்திருந்ததால், அவருக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்திருந்தது. கான்ட்ராக்டர் எழுந்து நின்று வரவேற்றார்.
'நீங்களும், நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கணும்ன்னு பிரியப்படுறேன்...'
'அதுக்குத்தான் வந்திருக்கேன். ஆனா, நாங்க பரமக்குடிக்கு வந்து ரொம்ப நாளாச்சு; பக்கத்துல நாமக்கல்லுக்குப் போகலாமா?' என்று கேட்டார்.
'நல்ல யோசனைதான்; அப்படியே செஞ்சுடலாம்...' என்ற கான்ட்ராக்டர் முகமெல்லாம் புன்னகை.
செட் சாமான்களையெல்லாம், 'பேக்' செய்த ராதா, அவற்றை ரகசியமாக திருச்சிக்கு அனுப்பினார். எல்லாரும் ரயில் நிலையத்திற்கு வந்தனர். கான்ட்ராக்டருக்கு மட்டும் நாமக்கல்லுக்கும், மற்றவர்களுக்கு திருச்சிக்கும், டிக்கெட் எடுத்தார் ராதா.
ரயில் கிளம்பியது. நாமக்கல் வந்ததும் வேக வேகமாக கான்ட்ராக்டரிடம் வந்த ராதா, 'எங்க குழுவிலிருக்கிற நண்பர் ஒருவரோட வீட்டு விசேஷம் இன்னக்கி திருச்சியில இருக்கு; போய்ட்டு இரண்டு நாள்ல திரும்ப வந்துடறோம். நீங்க போய் ஆக வேண்டிய ஏற்பாட்டையெல்லாம் செய்யுங்க...' என்று சொல்ல, ரயிலை விட்டு இறங்கி டாட்டா காட்டினார் கான்ட்ராக்டர்.
ரயில் கிளம்பியதும், நாடகக் குழுவினர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். சேலத்தில் ஓரியண்டல் தியேட்டர்சில், இழந்த காதல் நாடக போஸ்டர்கள் மின்ன ஆரம்பித்தன. நாடகத்தில் கணேசனுக்கு, சரோஜா என்ற தாசி வேடம்; ராதாவுக்கு, ஜெகதீஷ் என்ற வில்லன் வேடம். நாடகம், 'ஓஹோ'வென பாராட்டப்பட்டு, நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. 'எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி சீனைக் காண தவறாதீர்கள்...' என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
பொதுவாக, மேடையில், நடிகர்கள், ரசிகர்களைப் பார்த்துத்தான் பேச வேண்டும்; முதுகைக் காட்டியபடி வசனம் பேசக்கூடாதென்பது நாடக இலக்கணம். ஆனால், இழந்த காதல் நாடக இறுதிக் காட்சியில், ராதா, கதாநாயகியைப் பிடித்து நாற்காலியில் தள்ளி, தன் இரண்டு கைகளையும் நாற்காலியில் ஊன்றியபடி, கதாநாயகியிடம் பேச ஆரம்பிப்பார். 15 நிமிட வசனம். 15 நிமிடங்களும் ரசிகர்கள், அவரது முதுகைத்தான் பார்க்க முடியும். அவரது முகபாவனைகளை, கைகளின் அசைவினை காண முடியாது. இருந்தாலும் ரசிகர்கள், அதை ஆரவாரமாக ரசிப்பர். தலைக்குப் பின்னால் சுருண்டு கிடக்கும், அவரது தலைமுடி நடித்துக் கொண்டிருக்கும்.
திரைப்படங்களைப் போல சேலம் ஓரியண்டல் தியேட்டர்சில், இழந்த காதல் நாடகம், 100வது நாளைக் கொண்டாடியது. விஷயம் கேள்விப்பட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாரும், சேலத்துக்கு வந்து நாடகத்தைப் பார்த்து, ரசித்துவிட்டு போயினர்.
அப்படி வந்து சென்றவர்களுள் முக்கியமானவர் அண்ணாதுரை. குடியரசு பத்திரிகையின் துணையாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், அடிக்கடி ஈரோட்டிலிருந்து சேலத்துக்கு வந்து, நாடகத்தைப் பார்த்துவிட்டு, கடைசி பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தார். பத்திரிகையிலும், பாராட்டி விமர்சனம் எழுதினார்.
அச்சமயம், என்.எஸ்.கிருஷ்ணன், படவுலகில் பிரபலமாக இருந்தார். அதனால், இழந்த காதல் நாடகத்தை திரைப்படமாக்க திட்டமிட்டார். ஜெகதீஷ் வேடம் தனக்குத்தான் என்று நம்பிக் கொண்டிருந்தார் ராதா. ஆனால், என்.எஸ்.கேயின் மனத்தில், அந்த நினைப்பில்லை என்பது ராதாவுக்கு தெரிய வந்தது. உள்ளுக்குள்ளேயே குமுற ஆரம்பித்தார்.
இந்நிலையில், பொன்னுசாமி குழுவினர் சேலத்திலிருந்து கிளம்பி பொள்ளாச்சிக்குச் சென்றனர். ஜெகதீஷ் வேடத்தில் வேறு யாராவது நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வரா என்று சோதனை செய்து பார்த்தனர். எல்லாம் என்.எஸ்.கேயின் ஏற்பாடு. குழுவிலிருந்த நடிகர் பாலையா சில நாட்கள், அந்த வேடத்தை ஏற்று நடித்தார். அவர் நன்றாகவே நடித்தாலும், மக்கள் அந்த வேடத்தில், அவரை ரசிக்கவில்லை. 'ராதாவை கூப்பிடுங்கள்... ராதாவைக் கூப்பிடுங்கள்...' என்று கூச்சல் போட்டனர்.
எதற்கும் எதிர்ப்பு காட்டாமல், நடப்பதையெல்லாம் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார் ராதா. கோவை சென்றனர்; அங்கு ஜெகதீஷ் வேடத்தில் பஷீர் என்பவர் நடித்தார். ரசிகர்கள் கொந்தளித்து, அரங்கிலிருந்த நாற்காலிகளையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்து விட்டனர். மேடையை நோக்கி கற்களை எறிந்து, 'ராதாவைக் கூப்பிடு; ஒரு சீன்லயாவது, அவரு தலைகாட்டுனாத்தான் விடுவோம்...' என்று பலத்த ஆரவாரம் செய்தனர்.
நிலைமையை சமாளிக்கச் சொல்லி, பொன்னுசாமியே நேரில் வந்து ராதாவிடம் கெஞ்சினார். ராதா மேடையில் தோன்றினார். ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்தார். கலாட்டாவை நிறுத்திய ரசிகர்கள், 'கலகல'ப்புடன் கலைந்து சென்றனர்.
இத்தனை சம்பவங்களுக்குப் பின், எப்படியும் என்.எஸ்.கே., தன்னை அழைத்து வாய்ப்பு கொடுப்பார் என்று நம்பினார் ராதா. ஆனால், நடந்ததோ...
தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

- முகில்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - chennai,இந்தியா
04-ஏப்-201520:11:08 IST Report Abuse
Natarajan Ramanathan இனி இந்த சனியன் நடித்த காட்சிகள் தொலைக்காட்சியில் வந்தால் பார்க்கவே கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
01-ஏப்-201500:00:33 IST Report Abuse
Karuppiah Sathiyaseelan நாமக்கலில் ரயில் நிலையம் மற்றும் தண்டவாளம் கூட கிடையாதே ????.எப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் டிக்கெட் குடுக்க அனுமதித்தது ?????
Rate this:
Share this comment
Cancel
Jayakumar Rajendran - Bangalore,இந்தியா
29-மார்ச்-201510:02:26 IST Report Abuse
Jayakumar Rajendran இந்த சம்பவங்கள் சுவையாக இருந்தாலும், படிக்கும்போது அந்த காலத்திலேயே இந்த அளவு வன்மத்துடன் இருந்து இருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.அன்பு , மன்னிக்கும் மனப்பான்மை எல்லாம் நம்ம மக்களிடம் இருந்திருக்க வில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X