கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2015
00:00

கேள்வி: விண்டோஸ் 7 இயக்கத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பயன்படுத்துகிறேன். சில மின் அஞ்சல்களுடன் விடியோ லிங்க் கிடைக்கையில், அதனை இயக்க முடியவில்லை. ஆனால், கூகுள் குரோம் டவுண்லோட் செய்து, அதன் மூலம் லிங்க்கில் கிளிக் செய்தால், இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் என்ன மிஸ் ஆகியுள்ளது? என்று தெரியவில்லை. எனக்கு கூகுள் குரோம் பயன்படுத்த விருப்பம் இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இதனை இயக்க ஏதேனும் வழி உண்டா?
சி. மகேஸ்வரன், சென்னை.
பதில்:
குரோம் மற்றும் பயர்பாக்ஸ் போல இல்லாமல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சற்று வித்தியாசமாக இயங்கும். வீடியோ பைல்களை இயக்க, ப்ளாஷ், சில்வர் லைட் அல்லது குயிக் டைம் போன்ற ஆட் ஆன் தொகுப்புகளைப் பயன்படுத்தாமல், எச்.டி.எம்.எல்.5 மற்றும் அடோப் ப்ளாஷ் பயன்படுத்தும். உங்களுக்கு இதனை இயக்குவதில் பிரச்னை இருந்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11ல் உள்ள compatibility view என்பதில் இயக்கவும். இதனைப் பெற வலது மேல் புறம் உள்ள கியர் ஐகானைத் தேர்ந்தெடுத்து, அதில் Compatibility view என்பதனைக் கிடைக்கும் கீழ்விரி மெனுவில் இயக்கவும். இதில் கிடைக்கும் இணைய தளங்கள் பட்டியலில், இந்த தளத்தினை இணைக்கவும். இந்த செயல்பாட்டில், InPrivate browsing செயல்படா நிலையில் இருக்க வேண்டும். அது இயக்கப்பட்டிருந்தால், உங்களுக்கான பாப் அப் நோட்டிபிகேஷனை அது காட்டவிடாமல் செய்யலாம்.

கேள்வி:குரோம் பிரவுசரை இன்டர்நெட் பெற பயன்படுத்துகிறேன். சில தளங்களைப் பார்க்கையில், ஜாவா இன்ஸ்டால் செய்திடுமாறு கேட்கிறது. நேற்று கிரிக்கெட் பார்க்க ஓர் இணைய தளம் செல்லும்போது இது போல கேட்டது. வைரஸ் வரும் என்பதால், நான் ஜாவா பயன்படுத்தவில்லை. ஆனால், என் அறையில் தங்கி உள்ள என் தோழியின் லேப் டாப்பில், அதே இணைய தளம், குரோம் பிரவுசரிலேயே காட்டப்பட்டது. அவர் ஜாவா இன்ஸ்டால் செய்யவில்லை எனக் கூறினார். இது எதனால் ஏற்படுகிறது? என் கம்ப்யூட்டரில் என்ன குறைபாடு?
ஆர். சிவரஞ்சனி, சென்னை.
பதில்:
குறைபாடு ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. உங்களுடைய கம்ப்யூட்டருக்கும், உங்கள் தோழியுடையதற்கும் ஒரு வேறுபாடு இருக்கலாம். அவரின் கம்ப்யூட்டரில் பாப் அப் பிளாக்கர் என்னும் ஆட் ஆன் புரோகிராம் அமைக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் ஏதேனும் தளத்தினைப் பார்க்க முயற்சிக்கையில், ஜாவா அல்லது ப்ளாஷ் ப்ளேயர் தேவை; உடனே இன்ஸ்டால் செய்கிறாயா? என்று கேட்டு செய்திக் கட்டம் வருகிறதல்லவா? இதுதான் பாப் அப் என்பது. இதனைத் தடுத்துவிட்டால், தளம் இயங்கும் வாய்ப்பு உண்டு. கூகுள் தேடல் தளம் சென்று, Pop up blocker add on for chrome என்று தேடி, அந்த தளம் செல்லவும். அந்த ஆட் ஆன் புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்படும். இதன் பின்னர், எந்த பாப் அப் செய்தியும் கிடைக்காது. நீங்கள் தாராளமாக, தளங்களை எந்தத் தடையும் இன்றிப் பார்வையிடலாம்.

கேள்வி: 4 ஜி ப்ளஸ் என ஒரு இன்டர்நெட் அலைவரிசை உள்ளதா? மொபைல் பயன்பாட்டில், இதுதான் தற்போதைக்கு அதி வேகம் கொண்டதா? 4ஜியைக் காட்டிலும் இது எந்த அளவில் அதிகமானது?
டி.ஆர். சிவசந்திரன், கோவை.
பதில்:
நல்ல கேள்வி. நீங்கள் குறிப்பிடும் 4ஜி ப்ளஸ் என்பது, சில நாடுகளில் 4ஜி அலைவரிசையினை அழைக்கும் பெயர் ஆகும். இன்டர்நெட் வேகம் சில ஆண்டுகள் வரை 3ஜி மற்றும் 4ஜி என மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இப்போது 4G+, 4GX, XLTE, LTE-A மற்றும் VoLTE என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இத்தனை பெயர்கள் இருந்தால், அவை எவற்றைக் குறிக்கின்றன என நினைவில் கொள்வது சற்று சிரமம் தான்.
4ஜி+ மற்றும் LTE-A என்பதுவும் ஒரே அலைவரிசையைக் குறிக்கின்றன. இதனை 3GPP என்ற வல்லுநர் குழு உருவாக்கியது. இது ஜி.எஸ்.எம். பயன்பாட்டில் தற்போதைய உச்ச நிலை ஆகும்.
எந்த நாட்டில் 4ஜி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் பெயர் அமைகிறது. தென் கொரியாவிலும், அமெரிக்காவிலும் இது LTE A என அழைக்கப்படுகிறது. அதாவது LTE- அட்வான்ஸ்டு. LTE என்பதன் விரிவாக்கம் Long Term Evolution என்பதாகும். 4ஜி வயர்லெஸ் பிராட்பேண்ட் அலைவரிசையினை இது குறிக்கிறது. இதுவே, சிங்கப்பூர், பிரான்ஸ், கத்தார் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் 4G+ என அழைக்கப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் தற்போது, 31 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதற்கான சாதனங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளதால், இணைய இணைப்பு மற்றும் மொபைல் இணைப்பு இந்த அளவில் பெற்றவர்கள் எண்ணிக்கையும் குறைவே.
ஆஸ்திரேலியாவில் Optus' “4G Plus“, என ஒரு அலைவரிசை அழைக்கப்படுகிறது. இதுவும் 4G LTE நெட்வொர்க்கினையே குறிக்கிறது. இந்தியாவில் இதற்கான சாதனங்கள் உள்ளன. ஆனால், அலைவரிசை இணைப்பு வழங்கப்படுவதை உறுதி செய்திட முடியவில்லை. அமெரிக்காவில் இயங்கும் இரண்டு மொபைல் சர்வீஸ் நிறுவனங்களான AT&T மற்றும் Verizon இப்போதுதான் இதனைச் சோதனை முறையில் வழங்கி வருகின்றன. LTE-A அலைவரிசையினை சப்போர்ட் செய்திடும் மொபைல் போன்களாகத் தற்சமயம் Huawei Honor 6, Samsung Galaxy Note 4, Galaxy Alpha, மற்றும் Galaxy S5 4G+ (இதனை Galaxy S5 Plus எனவும் அழைக்கின்றனர்) ஆகியவை உள்ளன.

கேள்வி: தொலைந்து போன ஆண்ட்ராய்ட் போனை, இணையம் மூலம் கண்டுபிடிக்கலாம் என்று கூறுகின்றனர். அப்படி ஒரு வசதி உள்ளதா? அதற்கான வழிகளைக் கூறவும்.
எஸ். டி. சூரிய பிரபா, விருதுநகர்.
பதில்:
ஆம், அதற்கான வழி உள்ளது. தொலைந்து போனால் மட்டுமல்ல; வீட்டில் எங்காவது மறந்து வைத்திருந்தாலும், அதனைக் கண்டறிந்துவிடலாம். எந்தக் கம்ப்யூட்டருக்கும் சென்று, கூகுள் மூலம் androiddevicemanager என்று தேடவும். கிடைக்கும் தேடல் விடைகளில், முதலில் உள்ளதைக் கிளிக் செய்து செல்லவும். உடன் உங்களுடைய கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்திட அந்த தளம் செய்தி தரும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்ராய்ட் சாதனம் வைத்திருந்தால், தொலைந்து போன ஆண்ட்ராய்ட் போனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அந்த போனைப் பயன்படுத்தி கூகுள் பிரவுசரைப் பயன்படுத்தி இணையத் தொடர்பினை மேற்கொண்டிருந்தால், போன் குறித்த தகவல்கள் கூகுள் பிரவுசரிடம் இருக்கும். அந்த குறிப்பிட்ட போனை, இந்த தளமே தேடிக் கண்டறிந்து, அது எங்குள்ளது என்று கூகுள் மேப்பில் காட்டும். இடது பக்கத்தில், போனின் மாடல் பெயர், அதனை ஒலிக்கச் செய்திட மற்றும் டேட்டா அழித்திட பட்டன்கள் கிடைக்கும். போனை பிறர் பயன்படுத்தாதபடி லாக் செய்திடவும் முடியும். உங்கள் போனின் பெயரை மாற்ற வேண்டும் என நினைத்தால், இதில் உள்ள பென்சில் அடையாளத்தில் கிளிக் செய்து, புதிய பெயரை டைப் செய்திடலாம்.
நீங்கள் வீட்டில் தொலைத்திருந்தால், உடனே போனை ஒலிக்கச் செய்திட Ring என்ற பட்டனை அழுத்தலாம். உடன் போனில் ரிங் டோன் பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து ஒலிக்கும். வேறு எங்கேனும் தொலைந்திருந்தாலும், அதனை ஒலிக்கச் செய்து, மற்றவரின் கவனத்தைக் கவரலாம். நீங்கள் தொலைந்த போன் தொலைந்ததாகவே இருக்கட்டும் என்று முடிவு செய்து, அதில் உள்ள தகவல்களை அழிக்க வேண்டும் என நினைத்தால், அதற்கான பட்டனில் கிளிக் செய்திடலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தினைப் பார்த்தால், உங்களுக்கு இது புரியவரும். நான் தற்சமயம் அமெரிக்க நகர் ஒன்றில் உள்ளதால், போன் உள்ள வீட்டின் இடம் துல்லியமாக கூகுள் மேப்பில் காட்டப்படுகிறது. அருகே உள்ள கட்டத்தில், போனின் மாடல் எண்,
இறுதியாக அதன் மூலம் இணையம் சென்ற நாள் காட்டப்படுகிறது. ரிங் கொடுப்பதற்கும், டேட்டாவினை அழிப்பதற்குமான பட்டன்கள் தரப்பட்டுள்ளதையும் காணலாம். இந்த வசதியைப் பெரும்பாலும், வீட்டில் போனை மறந்து வைத்துவிட்டு, பின் இடம் தெரியாமல் தேடுபவர்கள் தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், மற்ற வசதிகளையும் பயன்படுத்தலாம்.

கேள்வி: என்னுடைய டவுண்லோட் (downloads) போல்டரில் உள்ள, டவுண்லோட் செய்யப்பட்ட பைல்களை அழித்துவிடலாமா? ஏனென்றால், அவை கண்ட்ரோல் பேனலிலும் இருக்கின்றன. இவற்றை நீக்குவதால், இவை கிடைக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் அனைத்தையும் வைத்துள்ளேன். விளக்கம் தரவும்.
டி. கே. கண்ணபிரான், புதுச்சேரி.
பதில்:
நீங்கள் கண்ட்ரோல் பேனல் என்று எதற்காக இங்கு சொல்கிறீர்கள்? என்ன சொல்ல வருகிறீர்கள் என்றும் புரியவில்லை. நீங்கள் ஸ்டார்ட் மெனுவை இங்கு குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் டவுண்லோட்ஸ் போல்டரில் இருந்து, ஒரு பைலைத் திறந்திருந்தால், அவை அண்மைக் காலத்தில் திறக்கப்பட்ட பைல்கள் பட்டியலில், அந்த பைலைக் காட்டும்.
டவுண்லோட்ஸ் போல்டரில் எத்தகைய பைல்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அவற்றை நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டுமா என்பதனை முடிவு செய்திடலாம். ஏதேனும், ஒரு அப்ளிகேஷனுக்கான எக்ஸிகியூடபிள் பைல் என்றால், அந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த பின்னர், அந்த பைலை நீக்கிவிடலாம். வேறு ஏதேனும் டாகுமெண்ட், எக்ஸெல் பைல், போட்டோ, பாட்டு பைல் என்றால், அதனை இதற்கென உருவாக்கப்பட்ட தனி போல்டர்களுக்கு மாற்றிவிட்டு, இதனை அழித்துவிடலாம். அல்லது பைலைத் தேர்ந்தெடுத்து, கட் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட போல்டரில் பேஸ்ட் செய்தால், தானாகவே, இந்த பைல் அழிக்கப்படும்.

கேள்வி: பவர்பேங்க் என்று பல விளம்பரங்களில் படிக்கிறேன். அதனைக் கொண்டு மின்சார வசதி கிடைக்காத அல்லது நாம் விரும்பும் இடங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் படித்துள்ளேன். இது எதற்காக? மொபைல் போன்களுக்கு மட்டுமா? அல்லது லேப்டாப் கம்ப்யூட்டருக்கும் சார்ஜ் செய்திடலாமா? விளக்கமாகக் கூறவும். நல்ல பவர் பேங்க் ஒன்று சொல்லுங்க.
டி.வின்செண்ட், புதூர்.
பதில்:
பவர்பேங்க் (power bank) என்பது, ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகள் அடங்கிய ஒரு சாதனம். இதனை சார்ஜ் செய்து கொண்டு, பின்னர், இதனைப் பயன்படுத்தி, மொபைல் போன்களையும் அது போல குறைந்த மின் சக்தியில் இயங்கும் சாதனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் பெரும்பாலும் லித்தியம் அயன் ரீசார்ஜ் பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. இவை தான் மொபைல் போன்களிலும் உள்ளன. இதன் சக்தியை mAh என்ற அலகில் சொல்கின்றனர். milliampere hour என இதை விரித்துக் கூறலாம். ஒரு ஆம்பியர் ஹவரில் ஆயிரத்தில் ஒரு பங்கு. ஒரு பேட்டரி எந்த அளவிற்கு மின் சக்தியை தேக்கி வைக்கும் என்பதனை இது விளக்குகிறது. ஒரு சாதனத்தில் உள்ள பேட்டரி மீண்டு ரீசார்ஜ் செய்திடும் வரை எவ்வளவு நேரம் செயல்படும் என்பதனையும் இது குறிக்கிறது. எனவே அதிக mAh எனில், அதிக நேரம் அது மின் சக்தியை வழங்கும் வகையில் சார்ஜ் செய்து கொண்டு, பின்னர் வழங்கும் என்று பொருள். அண்மையில் ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளத்தில், Microsoft DC-21 என்ற ஒரு பவர்பேங்க் குறித்துப் படித்தேன். 6000mAh திறன் கொண்டது. விலை ரூ.3,499. அமெரிக்காவில், அண்மையில் ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் 10000 mAh திறன் கொண்ட பவர் பேங்க் விற்பனைக்கு உள்ளது என்றும், இது இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகும் எனவும் தகவல் கிடைத்தது. அமெரிக்காவில் இது 15 டாலர். ஏறத்தாழ ரூ.950. இது போல சந்தையில் நிறைய இருக்கின்றன. உங்களுக்குத் தேவையான அளவில் நல்லதாகத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X