தென்னையில் ஊடுபயிர் மக்காச்சோளம்: அனுபவ விவசாயி டி.தேவதாஸ், நர்மதாபுரம் சரல் அஞ்சல் - 629 203, குமரி மாவட்டம், வேளாண்துறை குருந்தன்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏற்பாட்டில் மக்காச்சோள விதைகள் வாங்கி விவசாயி தனது தென்னந்தோப்பில் 50 சென்ட் நிலத்தில் தென்னைக்கு இடையே ஊடுபயிராக வரிசைப்படுத்தி, பாத்திகள் அமைத்து இடையே விதைகளை ஊன்றியதில் அனைத்தும் நன்கு முளைத்து வளர்ந்து காய்த்து 100 நாளில் அறுவடை செய்ததில் 50 கன்று தென்னந்தோப்பில் 100 கிலோ மக்காச்சோளம் கிடைத்துள்ளது. கிலோ ரூ.50க்கு விற்றதில் ரூ.3000 வருமானமும், இதன் தட்டைகளை தென்னைக்கு பசுந்தாள் உரமாக பயன்படுத்தியுள்ளார்.
சீனாவின் தேசிய பழம் (கிவி) : தமிழக மலைப்பகுதிகளில் விளைவிக்கலாம். சைனீஸ் ஸ்பெரி என்று அழைக்கப்படும் கிவியின் தாவரவியல் பெயர் ஆக்டனிடியா டெசிலிலோசா ஆகும். கொடி வகையான கிவி நீர்வளம் மிகுந்த உயரமான மலைப்பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது. பழங்கள் நீளவட்ட வடிவில் சப்போட்டா போன்ற தோற்றத்துடன் இருக்கும். இதன் தோல்மீது சிறு ரோமங்கள் போன்று காணப்படும். பழங்களின் உட்புற சதைகள் பச்சை நிறத்திலும் ஒரு பகுதியில் உள்ள விதைகள் கருப்பு நிறத்திலும் இருக்கும். பழுத்த பழங்கள் நறுமணம் கொண்டதாகவும் அதிக சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கும். இப்பழங்களை தனியாகவோ, பிற பழங்களுடன் சேர்த்தோ சாப்பிடலாம். இப்பழத்தில் வைட்டமின் பி,சி, பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. பழங்கள் மனித உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.இப்பயிர் சாகுபடிக்கு நல்ல வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் ஏற்றது. கடல் மட்டத்திலிருந்து 900 முதல் 1800 மீட்டர் உயரத்தில் போதுமான மழை அதிக நீர்ப்பிடிப்பு உள்ள பகுதிகளில் நன்றாக வளரும்.
பொதுவாக பிப்ரவரி மாதத்தில் வேர் குச்சிகளில் மொட்டுக்கட்டுதல் அல்லது ஒட்டுக் கட்டுதல் மூலமாக பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. கடினம் வாய்ந்த தண்டு குச்சிகள் மூலமாகவும் பயிர் பெருக்கம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி : முனைவர் சோ.அசோக்குமார், முனைவர் ஜெ.ராஜாங்கம், முனைவர் பா.செந்தமிழ்செல்வி, முனைவர் இரா.முத்துச்செல்வி, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கொடைக்கானல். போன் : 04542 - 240 931.
"பச்சை' எனப்படும் "மாசிப்பச்சை' : மதுரைப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார் அனுபவ விவசாயி சி.மாயி. க.நல்லொச்சான்பட்டி கிராமம், மதுரை மாவட்டம் 50 சென்ட் நிலத்தில் மாதம் ரூபாய் 30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. மாசிப்பச்சையோட ஸ்பெஷல் "பச்சை' கலர் தான். பூ மாலை கட்டுவதில் பச்சைக் கலருக்காக பயன்படுத்துற மருதாணி, சவுக்கு, துளசி இலைகளை விட மாசிப்பச்சை போட விலை கம்மி. இதுமாலை தொடுக்கிறதுக்கும் சுலபமா இருக்கிறதால கல்யாண மாலை தவிர்த்து, மத்த எல்லா மாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் தேவை தினமும் இருக்கும். வைகாசி மாசத்துல பச்சையோட வரவு கம்மியா இருக்கும். மதுரையைச் சுற்றி இருக்கிற குருவித்துறை, உசிலம்பட்டி, செக்கானூரணி, மேலக்கால் பகுதியில் இதை அதிகளவு சாகுபடி செய்கிறார்கள்.
சாகுபடி நிலத்தை நன்றாக உழுது, பாத்தி எடுத்து மாசில் பச்சை செடியின் தண்டுப்பகுதியை நடவு செய்தால் போதும். கொஞ்சம் நிழல் பாங்கான இடம் தேவை என்பதால் பாத்திகளின் கரைகளிலும், வாய்க்கால் கரைகளையும் சுற்றி அகத்தியை நடவு செய்யலாம். தண்ணீர் வசதியைப் பொறுத்து நிலத்தைக் காய விடாமல் பாசனம் செய்தால் போதுமானது. நடவு
செய்த 45ம் நாளிலிருந்து அறுவடை செய்யத் தொடங்கலாம். ஒருமுடி ரூபாய் 5 முதல் 20 வரை விலை போகும்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.