ராதாவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 19 வயதுதான் ஆகிறது. கல்லூரியில் படிக்கிறாள். சில நாட்களாக கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாகவும், அது தாங்க முடியாத அளவு துன்பம் அளிப்பதாகவும், பெற்றோரிடம் கூறியிருக்கிறாள். அவளது, பெற்றோர், வயிற்று வலி வரும் போதெல்லாம், ஏதோ அஜீரணக் கோளாறு என கருதி, அருகில் இருக்கும் மருந்து கடையில் மருந்து வாங்கி கொடுத்துள்ளனர்.
மருந்து சாப்பிட்டவுடன் வயிற்று வலி குறைவது போல் குறைந்து, மீண்டும் வந்து, ராதாவை கஷ்டப்படுத்தியது. அதனால், ராதாவின் பெற்றோர், பயந்து போய் என்னிடம் வந்தனர்.
ராதாவிற்கு 'சி.டி., ஸ்கேன்' பரிசோதனை செய்தோம். அதில் பிரச்னை சரியாக புலப்படாததால், 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' பரிசோதனை செய்தோம்.
அதில், அவளது வலது பக்க சினைப்பையில், கட்டி ஒன்று இருந்தது தெரியவந்தது. புற்றுநோய் கட்டியாக இருக்கும் என்று நினைத்து, திசு பரிசோதனை மேற்கொண்டோம். ஆச்சரியம்! சாதாரண கட்டிதான் அது.
ராதாவிற்கு, அறுவை சிகிச்சை செய்து, வலது பக்க சினைப்பையை அகற்ற வேண்டும். அவளுக்கு சிறிய வயதென்பதால், வேறு வகையில் குணப்படுத்த முடியுமா என்று யோசித்தோம்.
வேறு வழியே இல்லை என்பதால், அறுவை சிகிச்சை மூலம் வலது பக்க சினைப் பையை அகற்றினோம். இறைவன் அருளால் அவளது இடது பக்க சினைப்பை ஆரோக்கியமானதாக இருந்தது. ராதா, உடல் நலம் தேறி கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கிறாள்.
மனிதனுக்கு இதயம், மூளை போன்ற உறுப்புகள் எவ்வளவு அவசியமோ, அதேபோல், பெண்களுக்கு சினைப்பை அவசியம். காரணம், அதில் தான், கருமுட்டைகள் உருவாகின்றன.
பெண்ணின் உடலில் வலது, இடது என, இரண்டு சினைப்பைகள் உள்ளன. ஆரோக்கியமான ஒரு பெண்ணின் வாழ்நாளில், 400 கரு முட்டைகள் உருவாகும். அதில் ஒரு சினைப்பை பாதிக்கப்பட்டு, அதை அகற்றினால், கருமுட்டைகள் உருவாவது குறைந்துவிடும்.
இருந்தாலும், ஆரோக்கியமாக உள்ள மற்றொரு சினைப்பை மூலம், கண்டிப்பாக கருத்தரிக்கலாம். சினைப்பையில் கட்டிகள் உருவாவதற்கு, மருத்துவ காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் மரபியல் காரணங்களால் அது தோன்றலாம் என, கூறப்படுகிறது. ராதா திருமணம் முடிந்து, கண்டிப்பாக கருத்தரிக்கும் வாய்ப்புண்டு என்று கூறியபோது, அவளது பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு, அளவே இல்லை.
மாலதி ரமணி
குடும்ப நல மற்றும் மகப்பேறு மருத்துவர்
மாலதி ரமணி கிளினிக்
044 28341643