கோடைக்காலங்களில், மிக அதிகமாக காற்று மாசடைந்து விடுவதற்கு, முக்கிய காரணம், காற்றில் ஈரப்பதம் குறைவதே. அதோடு மட்டுமல்லாமல், சென்னை போன்ற நகரங்களில், சாலையோரங்களில் கிடக்கும் மண், கட்டட வேலை, சாலை மேம்பாடு, குடிநீர் பணிக்காக சாலைகளை தோண்டுதல், கழிவுநீர் தொட்டி திறந்த நிலையில் கிடத்தல், கழிவுநீர் தேங்கி இருத்தல் மூலம், அவற்றில் உள்ள வைரஸ் கிருமிகள், நேரடியாக காற்றின் வழியே பரவுகின்றன. பாதுகாப்பில்லாமல், வாகனங்களில் பயணிப்போருக்கு மாசுபட்ட காற்றின் வழியாக வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள், கண், காது, மூக்கு, வாய்க்குள் செல்கின்றன. இதனால் நுரையீரல், 'சைனஸ்' போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும், திறந்த நிலையில் இருப்பதால் கண்தான், முதலில் பாதிக்கப்படுகிறது.
கண்ணில் ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது அல்லது காற்றின் வழியே அன்னிய பொருட்கள், கண்ணில் விழுவதால், கண் சவ்வு, மிகவும் மோசமாக பாதிப்படைகிறது.
மக்களும், கண்கள் பற்றிய அடிப்படை மருத்துவ குறிப்புகள் தெரியாததால், கண்களை தேய்த்துவிட்டு, கண் பாதிப்பை மேலும் தீவிரமாக்கி விடுகின்றனர்.
சில நேரங்களில், கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டு, புண்கள் வரும். அதை சில நாட்கள் கவனிக்காமல் விட்டால் கூட, முழு கண் விழியும், புண்ணால் பாதிக்கப்பட்டு, கண் வெடிக்கக் கூடிய அபாயம் உண்டு. அப்படி வெடித்துவிட்டால், இறந்தவரின் கண்ணை தானமாக பெற்று, மாற்று கண் அறுவை சிகிச்சையினால் மட்டுமே, பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் பார்வை பெற வைக்க முடியும். ஆகவே வெளியில் செல்லும் போது குளிர் கண்ணாடி அல்லது சாதாரண கண்ணாடி அணிந்தும், தலைக்கவசம் அணிந்தும் செல்வதே, கண்களை பாதுகாக்கும் வழி.
- கா. நமீதா புவனேஸ்வரி
கண் அறுவை சிகிச்சை நிபுணர்
இயக்குனர், அரசு கண் மருத்துவமனை, எழும்பூர்.
94442 88784