கடந்த, 5ம் தேதி, இரவு 11:௦௦ மணிக்கு தொலைபேசி மணி ஒலித்தது. எடுத்தேன். ஆச்சர்யம், புவனா பேசினார்.
''டாக்டர்! நான் இப்போது அமெரிக்காவிலிருந்து சவுதி அரேபியாவிற்கு பணி நிமித்தமாக மாற்றலாகி வந்து விட்டேன். நலமாக இருக்கிறேன். நீங்கள் நலமா?''
பரஸ்பர விசாரிப்புகளோடு, தொலைபேசி துண்டிக்கப்பட்டது. என் எண்ண அலைகள், எட்டு ஆண்டுகளை கடந்து, புவனாவை சந்தித்த, முதல் நாளை நினைவுபடுத்தியது.
அம்மா, அப்பா, அக்கா என்று அளவான குடும்பம். புவனாவின் அம்மா, மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் துன்பப்படும், மனநிலை வரும்போது பிள்ளைகளை அடிப்பாராம். அடிக்கடி, 'தற்கொலை செய்து கொள்ள போகிறேன்' என்று சொல்லிக் கொண்டே இருப்பாராம்.
இதற்கிடையே, புவனாவின் அக்காவிற்கு திருமணம் முடிந்துவிட்டது. புவனாவும், கல்லூரி படிப்பை முடித்து விட்டார். அதன்பின், அவர் வீட்டிலேயே முடங்கி விட்டார். குடும்பத்தினர், புவனாவின் நடவடிக்கைகளால் பயந்து போய், என்னிடம் அழைத்து வந்தனர்.
மொத்த குடும்பமும், உடன் வந்தால் மட்டுமே, அவர் என்னை சந்திக்க வருவார். புவனாவை பரிசோதித்ததில், அவருக்கு, 'அப்ஸசிவ் கம்பல்சிவ் டிசார்டர்' இருந்தது, தெரியவந்தது.
அவருடைய அம்மா, தற்கொலை செய்து கொள்வதாக சொன்னதால், வீட்டிலேயே முடங்கி கிடந்தார்; அப்படி இருந்தால், அம்மாவை காப்பாற்றி விடலாம் என, கருதினார். அவருக்கு, மற்றொரு விசித்திர பழக்கமும் இருந்தது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு, ஒரு மணிநேரம் வரை கழுவி கொண்டே இருப்பார்.
காரணம் கேட்டதற்கு, 'குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றால், விபத்து நேர்வது போல் தோன்றுகிறது. கைகளை கழுவினால், அவர்கள் பாதுகாப்பாக இருப்பது போல், நிம்மதியாக உணர்கிறேன்' என்றார்.
புவனாவிற்கு இருந்த 'அப்ஸசிவ் கம்பல்சிவ் டிசார்டர்' எனும் எண்ண சுழற்சி நோய், 7 வயது முதல் 70 வயது வரை, யாருக்கும் வரலாம்.
துவக்கத்தில் இந்த நோய் தாக்கியோர், எண்ணத் தூண்டுதலின் பேரில், விசித்திரமான செயல்களை திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பர். அவர்களின் எண்ணம், அவர்களை துன்புறுத்திக் கொண்டே இருக்கும்.
புவனாவிற்கு, மூளை பகுதியில் எண்ணங்களை கட்டுப்படுத்த சுரக்கும், 'செரடோரின்' என்ற ஹார்மோனை சுரக்கும் சுரப்பியை கட்டுப்படுத்த, மருந்துகள் கொடுக்கப்பட்டன. மேலும், பதற்றத்தை குறைக்க, மன தத்துவ பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.
சிகிச்சை முடிந்ததும், அவர் கணினி வகுப்பு படித்து, மென்பொருள் பொறியாளராக, சென்னையில் பணியாற்றினார். அலுவலகமே, அவரை மேலைநாடுகளுக்கு அனுப்பி வைத்தது. இன்று புவனா நலமாக இருக்கிறார்.
- ரவி சாமுவேல்
மன தத்துவ சிகிச்சையாளர்
சைக்கோ தெரபி கிளினிக், தி.நகர்
94440 22054