கவுதமிற்கு, முதல் பிறந்தநாள். அழைப்பிதழோடு என்னை சந்திக்க காத்திருந்தார், கவுதமின் தந்தை. கவுதம், பிறந்தபோது அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்த, அவனின் பெற்றோர் நாளடைவில், கவலை கொள்ள ஆரம்பித்தனர். காரணம், மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல், கவுதமின் உடல் வளர்ச்சியில் தாமதம் ஏற்பட்டது. குழந்தையின் கால்கள் சற்றே வளைந்து இருந்தன. அதோடு குழந்தையை தூக்கி கொஞ்சும் போதெல்லாம் குழந்தையின் உடல் நெகிழ்ந்து போய் தளதளவென்று இருப்பதுபோல் உணர்ந்தனர். மேலும் கை மணிக்கட்டு மற்றும் கால் மூட்டுகளில் வீக்கங்கள் இருந்தன.
எத்தனையோ, மருத்துவர்களை சந்தித்தனர். 'கவுதமின் பிரச்னைகள் சாதாரணம் தான். எல்லா குழந்தைகளுக்கும் இவ்வாறுதான் இருக்கும்' என, அவர்கள் சமாதானம் சொல்லினர்.
இத்தனைக்கும், கவுதம், குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தை அல்ல! பின் ஏன் ஒவ்வொரு வளர்ச்சியும் தாமதப்படுகிறது என, குழப்பத்தோடு, ௧௦ மாத குழந்தையான கவுதமோடு அவரது தந்தை என்னை சந்தித்தார்.
பொதுவான சில பரிசோதனைகளுக்கு பின், கைகால்களில், 'எக்ஸ்-ரே' எடுத்துப் பார்த்தோம். கால் எலும்பு, கை மணிக்கட்டு எலும்பு உடைந்திருந்தது. நுண் ஊட்டச்சத்து குறைபாடு ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதனை செய்தோம். எலும்புகளின் வளர்ச்சிக்கும் அவற்றின் உறுதித்தன்மைக்கும், முக்கிய அம்சமாக விளங்கும் வைட்டமின் 'டி', கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து மிகமிக குறைவாகவும் குழந்தையின் வளர்ச்சிக்கு பற்றாக்குறையாகவும் இருந்தது தெரியவந்தது.
எனவே, வைட்டமின் 'டி' கால்சியம், போன்ற ஊட்டச்சத்துக்களை, ஊசி மூலம் கவுதமிற்கு கொடுத்தோம்.
அதன் பிறகு, ஆறு வாரங்களில் அவனது எலும்புகள் உறுதியடைந்து நிற்க ஆரம்பித்து விட்டான்.
வைட்டமின் 'டி' ஊட்டச்சத்து குறைபாடிருந்தால், எலும்புகள் உறுதியோடு இருக்காது; அவற்றின் வளர்ச்சி முழுமை அடையாது. அதோடு, பிற்காலத்தில் மூச்சுத்திணறல் ஆஸ்துமா, நீரிழிவு, மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும்.
எனவே, வைட்டமின் 'டி' மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற நுண் ஊட்டச்சத்துகள் உடல்நலத்திற்கு அவசியம். வைட்டமின் 'டி' சத்து, இயற்கையாக சூரிய ஒளியில் கிடைக்கிறது.
பிறந்த குழந்தைகளை சில நிமிடங்கள் சூரிய ஒளியில் காட்டினாலே, அவர்களுக்கு தேவையான வைட்டமின் 'டி' சத்து இயற்கையாக கிடைக்கும். கவுதமின் குறைபாடு தீர்க்கப்பட்டு விட்டது; அவன் நடக்க துவங்கி விட்டான்.
- நடேசன் தியாகராஜன்
பச்சிளம் குழந்தை மற்றும்
குழந்தை நல மருத்துவர்
95000 24784