சின்னஞ்சிறு செடி, கொடிகள் முதல், பெரிய மரங்கள் வரை, மருத்துவ குணங்கள் நிறைந்தவை. தானிய வகைகளில், தினையும் புனிதத்துவம் பெற்றது. தினை, இந்தியாவில் பயிராகும், ஒருவகை உணவுப் பொருளாகும்; இனிப்புச் சுவை கொண்டது. உடலை வலுவாக்கும், சிறுநீர் பெருக்கும் தன்மைகள் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.
தினைமா கஞ்சி சாதம்: தினையரிசி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் வலிமையை பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி வீக்கங்களை ஒழிக்கும். இதன் அரிசியை சிலர் சமைத்து உணவாக கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலை காக்கும் தன்மையுடையது. பண்டையக்காலத்திலிருந்தே, தினை உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது. இது ஐரோப்பா கண்டத்தில், கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில், முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.
கி.மு. 2700களிலேயே சீனாவிலும், பின், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவியது. தொடர்ந்து, இந்தியா, ஜப்பான், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற இடங்களில், பயிரிடப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா
மற்றும் மைசூர் போன்ற இடங்களில், தினை உணவு தானியமாக பயிரிடப்படுகிறது.
அமெரிக்கா, மத்திய ஐரோப்பாவில், தீவனப் பயிராகவும், வளர்க்கின்றனர். இது வறட்சியைத தாங்கும் பயிர்; ஆண்டு முழுவதும், பயிரிடலாம் என்பது கூடுதல் தகவலாகும். தினையில் உள்ள புரதம், கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும், தரம் கோதுமையின் புரதத்தைவிட குறைவாகும். இருப்பினும் பயறு வகைகளை கலந்து, உணவாக உட்கொள்ளும் பொழுது, இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது.
கனிமச் சத்துக்கள்: இரும்புசத்தின் அளவு, மற்ற தானியங்களைவிட, குறிப்பாக அரிசி,கோதுமை, ராகியைவிட, இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. கால்சியத்தின் அளவும், மற்ற தானியங்களை விட, கொஞ்சம் அதிகமாக உள்ளது.
உயிர் சத்துக்கள்: தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.
தினையின் பயன்கள்: உமி நீக்கிய தினை உணவாகிறது. இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்கு கொடுக்கிறார்கள். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டும் வந்துள்ளனர்.