பிறந்த குழந்தைக்கு, தாய்ப்பால் போல் சிறந்த, ஆரோக்கியமான உணவு வேறு எதுவும் இருக்க முடியாது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் இந்த அமிர்தம், குழந்தையின் உரிமை. அதை குறைந்தது ஒன்றரை ஆண்டாவது குழந்தைக்கு மறுக்காமல் புகட்ட வேண்டியது தாயின் கடமை.
எப்போதும், உட்கார்ந்த நிலையில்தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டே பால் கொடுத்தால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் இருப்பதால், தாயும், குழந்தையும் அப்படியே உறங்கிவிடும் வாய்ப்பு உள்ளது.
இதனால், பால் குழந்தையின் மூக்கில் ஏறி, விபரீதங்கள் உண்டான சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. பால் கொடுக்கும்போது தாயானவள் கண்டிப்பாக உறங்கக்கூடாது. அதேபோல், குழந்தை பால் குடிக்கும்போது உறங்கிவிட்டால் உடனடியாக குழந்தையை மார்பில் இருந்து விலக்கி, தூங்க வைக்கவேண்டும்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள், சில காலத்திற்கு குழந்தையை தூக்கி பால் கொடுப்பது சிரமம். இவர்களுக்கு படுத்த நிலையில் பால் கொடுத்தல்தான் எளிதானது. அப்படி கொடுக்கும்பட்சத்தில், மேலே சொன்ன விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, கூடிய விரைவில் அந்த பழக்கத்தில் இருந்து மாற வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு தலை நிற்கும் வரை, மிகவும் எச்சரிக்கையாகவே பால் கொடுக்க வேண்டும். கழுத்துப் பகுதிக்கு கீழ் கையைக் கொடுத்து, கழுத்தை இறுக்காமல், தலையையும் முதுகையும் தாங்கியபடி குழந்தையை பிடித்துக்கொண்டு, அணைத்தவாறு, தலையை சற்றே தூக்கிய நிலையில் வைத்து கொடுக்க வேண்டும்.
குழந்தையின் மூக்கு பகுதி, மார்பில் மிகவும் அழுத்தக்கூடாது. குழந்தையை நேர்மட்டத்தில் வைத்து பால் கொடுக்கும்போது, புரையேறும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தையின் தலை, சற்று உயரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
குழந்தையை இழுத்துப் பிடித்து, மார்பில் அழுத்தி பால் கொடுத்தல் கூடாது. குழந்தை படுத்திருக்கும் மட்டத்திற்கு குனிந்து, பால் கொடுக்க வேண்டும். அல்லது குழந்தைக்கு மார்பு எட்டும் உயரத்திற்கு, மிருதுவான தலையணையை வைத்து, அதில் குழந்தையை வைத்து பால் கொடுக்கலாம்.
மார்பகத்தின் எடை முழுவதும் குழந்தையின் முகத்தில் இறங்கிவிடாதவாறு எச்சரிக்கையாய் கொடுக்கவும். குழந்தை பால் குடித்தவுடன், தோளில் சாய்த்து பிடித்தவாறு அதன் முதுகில் மெதுவாக தட்டிக்கொடுக்கவும். குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை இப்படி செய்யவும்.