நினைத்ததை நினைத்த நேரத்திலேயே முடிப்பதற்கு, நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று கைவிரல்கள். கைகளுக்கு அர்த்தமாக இருப்பதும் விரல்களே. அவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவையாகவும், தனித்தனி செயல்களுக்கு பயன்படுபவையாகவும் உள்ளன. விரல்கள் செய்யும் பணிகள்தான் எத்தனை, எத்தனை!
காலை முதல் மறுநாள் காலை வரை, சுறுசுறுப்பாக இயங்கும் உறுப்புகளின் பட்டியலிலும் விரல்களுக்கு முக்கிய இடம் உண்டு. இவ்வாறு சிறப்பு வாய்ந்த விரல்களுக்கு, சிறு வலியோ அல்லது சோர்வோ ஏற்பட்டால், அதனை பொறுத்துக் கொள்வதற்கு
பலராலும் முடியாது.
விரல்களில் வீக்கம், வலி, காயம் ஏற்படுவதை அலட்சியமாக விட்டு விடக்கூடாது. உடலின் உட்பகுதியில் நிகழும் பாதிப்புகளுக்கும், விரல்களில் ஏற்படும் பாதிப்புக்கும் அதிக தொடர்பு உள்ளது. விரல்களுக்கு செல்லும் நரம்பு, ரத்தக் குழாய்கள், எலும்புகள் மற்றும் தசை, உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டாலே, விரல் வலி உண்டாகிறது.
பெரும்பாலும் உடல் சோர்வடையும் நேரத்தில்தான், மிகுதியான வலி உண்டாகும். இவ்வலி, உடல் சோர்வு நீங்கிய பின்னரும் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். விரல் வலியை பொறுத்துக்கொள்வதற்கு, விரல்களில் நெட்டை எடுப்பது
ஆபத்தான ஒன்று.
நெட்டை எடுப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்பு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் நெட்டை எடுக்கும் சமயத்தில் சுகமாக இருந்தாலும், பின்னர், பக்கவாதம் வரும் அளவிற்கு பாதிப்பை உண்டாக்கும்.
விரல் வலி ஏற்படும் போது, சிவப்பு நிறமாக மாறுவது, வியர்வை வருவது, போன்றவை ஏற்பட்டால், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியம். கம்ப்யூட்டர் மற்றும் டைப்ரைட்டிங் பணிபுரிபவர்கள் விரல்களை அதிகமாக பயன்படுத்துவர். அவர்கள் ஓய்வு நேரத்தில் விரல்களுக்கான பயிற்சிகளை செய்து வர வேண்டும். ஏனெனில், விரல்கள் முழுமையாக சோர்வடைந்து, நரம்பு மண்டலத்தை தாக்கும் சமயத்தில்தான் வலியை ஏற்படுத்தும்.
அதனால், முன்னெச்சரிக்கையாக, விரல்களுக்கான சிறு சிறு பயிற்சிகளை செய்து கொள்ளலாம். விரல் நகங்களாலும், விரலில் பாதிப்பு ஏற்படக்கூடும். காயங்கள் ஏற்படும் சமயத்தில், விரல்களை கூடுதல் கவனத்துடன் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணமாகும், 80 சதவீத கிருமிகள், விரல்கள் மற்றும் நகங்களின் மூலமே உடலுக்குள் செல்கின்றன. ஆகவே, விரல்கள் பத்திரம்!