முட்டை சைவமா? அசைவமா? என்ற விவாதம் இன்னும் ஒரு புறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை விடை தெரியவில்லை. இப்போது முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை பார்க்கலாம். காலை உணவில் தினமும் முட்டை
சேர்த்துக்கொள்வது, உடலை கட்டுக்குள் வைக்க உதவும் என, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிக புரோட்டீன் கொண்ட முட்டை சாப்பிடுவது, பசியை குறைத்து உடலில் அதிக கலோரி சேர்வதை தடுக்கும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால், ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை, காலை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறதாம்.
காலையில் முட்டை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள உயர்தர புரதமும், கொழுப்பும் உடலின் சக்தியை நாள் முழுவதும் தக்க வைக்கிறது. இதனால் அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.
முட்டையில் உள்ள தேவையான அமினோ அமிலங்கள் உடலுக்கு நன்மை செய்கிறது. மாமிச உணவுகள் சாப்பிடுவதில் கிடைக்கும் புரதத்தை விட, மிகக்குறைந்த விலையில் உடலுக்குத் தேவையான புரதச் சத்தியை முட்டை அளிக்கிறது.
இது பட்ஜெட்டிற்கு ஏற்ற உணவாகும். முட்டை சாப்பிடுவதால் கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்காது. எனவே இதயநோய் பற்றிய அச்சமும் இருக்காது.
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், மூளை வளர்ச்சிக்கு உதவும். நினைவுத்திறனை அதிகரிப்பதோடு, எப்பவும் விழிப்புணர்வோடு இருக்கத் தேவையான திறனை தருகிறது. முட்டையில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் கண்களை பாதுகாக்கிறது. இது சூரிய ஒளியில் உள்ள, அல்ட்ரா வயலட் கதிர்கள் கண் பார்வையை பாதிக்காமல் தடுக்கின்றன. வயதான காலத்தில் காட்ராக்ட் ஏற்படுவதை முட்டை தடுக்கிறது.
முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறனர் உணவியல் நிபுணர்கள். முட்டையில் கெட்ட கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளிசரைடு அளவும், இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன.
எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன என்கின்றனர். நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஓரிரு முட்டை மட்டும் சாப்பிடலாம். மற்றவர்கள் முட்டையைக் கண்டு பீதி கொள்ளாமல், சிறந்த சத்துணவாக முட்டையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.