கோடை வெயில் மண்டையை பிளக்கிறது. இந்த நேரத்தில் உணவில் கவனமாக இருக்கத் தவறினால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலா பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது.
கோடை வெப்பத்தால் வியர்வையில் பொட்டாசியம் வெளியேறிவிடும். இதனால் உடல் களைப்படைந்து, தசைகள் இழுத்துக்கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும். கோடையில் வெப்பத் தளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க, பழங்களைச் சாப்பிடுவதுதான் சிறந்த வழி.
எண்ணெய் தவிர்க்கலாம்!: கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்ற சிற்றுண்டிகள், தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால், இவற்றைத் தவிர்ப்பதே நல்லது. சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
சிறந்த கோடை உணவு: இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத் தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளி கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவு வகைகள். மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி, தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர்விட்டு சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும். காரணம், கேப்பைக் கூழுக்கும் தயிருக்கும் உடலின் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய தன்மையுண்டு.
வெயிலில் அலையாதீர்!: கோடையில், 2 மணி நேரத்துக்கு மேல், தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல், 12:00 மணியிலிருந்து மாலை, 4:00 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. வெயிலில் செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்துச் செல்லுங்கள். கறுப்புக் குடையாக இருக்க வேண்டாம். முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால், கண்களுக்கு 'சன் கிளாஸ்' அணிந்து கொள்ளலாம்.
ஆடையில் கவனம்!: கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே. அவற்றில்கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தைக் கிரகிக்கும். ஆகவே, இத்தன்மையுள்ள ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும். சூரிய ஒளி உடலில் படுவதால், ஒவ்வாமைக்கு உள்ளாகுபவர்கள், 'சன் ஸ்கிரீன்' களிம்பை முகத்திலும் கை, கால்களிலும் பூசிக்கொள்ளலாம்.